உரவோர்கண் காமநோய் ஓஓ கொடிதே – நாலடியார் 88

இன்னிசைவெண்பா

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓ!ஓ! கொடிதே;
விரவாருள் நாணுப் படலஞ்சி யாதும்
உரையாதுள் ஆறி விடும். 88

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா; ஒருவேளை பரவினாலும் அவை வெளிப்பட மாட்டா; அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா;

அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ கொடுமையுடையது! அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும்.

கருத்து:

அறிவுடையோர் காம நினைவுக்கு இடங்கொடார்.

விளக்கம்:

‘உரவோர்கண் காமநோய்ஓ கொடிதே' யென்றது. இடையே பொதுவாக ஆசிரியர்க்கு அச்சத்தினால் தோன்றிய தொடர்;

அவர் ‘உரன் என்னுந்தோட்டியான் ஓரைந்துங் காப்பவ'1 ராதலின்.

மற்றவை, எடுத்த பொருள்மேற் செல்லுந் தொடர்கள்.

பொறுத்தற்குரிய பொறுப்புக் கருதி ‘ஓ கொடிதே' என்றார்.

‘யாதும் உரையாது' என்பது சிறிதும் வெளிப்படாமை சுட்டுங் குறிப்புமொழி.

அறிஞர்கள் காம நுகர்வை மென்மையாக ஆளுந் திறமும் இப்பாட்டிற் புலப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Mar-19, 8:25 pm)
பார்வை : 24

மேலே