வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும் – நாலடியார் 89

நேரிசை வெண்பா

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும். 89

- பிறர்மனை நயவாமை, நாலடியார்

பொருளுரை:

வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும் வெதும்பிச் சுட்டாலும் வெளிப் பொருளையே சுடும்; அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப் பார்க்கிலும் அஞ்சப்படும்.

கருத்து: காமம் என்பது உள்ளத்தை வெதுப்புங் கொடுமையுடையது.

விளக்கம்:

அம்பு பெரும்பான்மைக்கு உரிய ‘சுடும்' என்னும் வினையை ஏற்றது.

நன்றாய்ச் சுடுகின்றபோது வெம்பிச் சுடவேண்டுதலின், அவ்வியல்புபற்றி அச்சொல் இரண்டிடங்களிலுங் கூறப்பட்டது.

புறம் என்றது, "பைம்புறப் படுகிளி"1 என்புழிப்போல உடம்பை; உடம்பைச் சுடுதலினும் உள்ளத்தைச் சுடுதல் கொடுமை யாதலின், அவற்றினும் அஞ்சப்படும் என்றார்.

உள்ளம் சுடப்பட்டால், அதனால் உடம்பும் உயிரும் வாடுதல் ஒருதலையாகலின், அது கொடுமையுடையதாயிற்று.

மேலும் ஆறாத முறையிற் சுடுதல் தோன்றக் கவற்றிச் சுடும் எனவுங் கூறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Mar-19, 8:28 pm)
பார்வை : 33

மேலே