கஜா புயல்---வெண்பாத் துணர்---

#வெண்பாத்_துணர் :


நள்ளிரவு வந்துலாவி நாசப்பேய் அன்னவின்னல்
அள்ளிவீசிச் சென்றதிந்தக் காற்று...

நள்ளிரவு பேரிரைச்சல் நாற்றிசையும் அச்சுறுத்தி
வெள்ளாட்டுக் கூட்டம் மிரண்டுகத்தும் பேரச்சம்
உள்ளமெங்கும் தந்துவிட்ட காற்று...

நள்ளிரவு தூக்கமற்று நான்மதில் உட்புறத்து
வெள்ளநீராய் வீட்டுக்குள் வீற்றிருக்க - கொள்ளையிடும்
கள்வராய்த் தாழுடைத்த காற்று...

நள்ளிரவு வீடுநீங்கி நல்லவிடம் சென்றொதுங்க
பள்ளத்தின் பாதைநோக்கிப் பாய்புனற் போல்மக்கள்
முள்ளோடும் கல்லோடும் முன்னேறி ஓடவன்று
தள்ளிவிட்ட திப்புயற் காற்று...

நள்ளிரவு முன்வரை நாணலென்(று) ஆடிநின்ற
வெள்ளி நிலவொளிந்த வேளையிற் - பிள்ளையெனும்
காய்த்திட்ட தென்னைகளைக் காம்பறுந்த பூவைப்போல்
மாய்த்ததென்ன வீசுபுயற் காற்று...

நள்ளிரவு நேரமன்று நத்தை எனநகர
கள்வரின் வாளின்முன் கட்டுண்டோர் போலிருக்க
மேற்கூரை மண்வீழ மேகமழை உள்வீழ
ஆற்றுக்குள் மீன்களன்ன ஆகம் நனைந்துநிற்க
வேரறுந்து சாயும் வியன்மரத்தாற் கண்ணுக்குள்
ஆரிருட் காட்டிய காற்று...

நள்ளிரவு வீடிடிந்து நல்மனைச் செல்வதற்குள்
தள்ளிவீழ்ந்த வேம்பொன்றால் தப்பியோடி - உள்ளம்
புலிநகம் தோற்கீறிப் புள்ளிமான் தப்பும்
வலியும் படபடப்பும் வாங்க - பொலிவுடை
செந்தமிழ் அஃதின்றித் திக்கிவர நெஞ்சத்தைச்
செந்தீக்குள் வைத்ததிந்தக் காற்று...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 8:34 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 457

மேலே