தமிழைச் சிதைக்காதே---எண்சீர் விருத்தம்---

எண்சீர் ஆசிரிய விருத்தம் : (காய் காய் காய் மா)

கல்லெறிந்து வண்டமிழின் கவசத்தை உடைக்கக்
*****கண்ணாடிக் கூண்டல்ல வைரமென்று தெளிவாய்ப்
புல்லெறிந்து வானளந்தப் பூங்கொடியைச் சிதைக்கும்
*****புத்தியற்றச் செயல்விடதன் ஓங்குபுகழ் உணர்வாய்ச்
சொல்லெறிந்து சான்றோரைத் துன்புறுத்தித் தமிழைச்
*****சுட்டெரித்துக் களிப்பதையும் நிறுத்திக்கொள் இனிமேல்
கல்லெறிந்து கலைக்குமெண்ணம் கன்மனத்தில் முளைத்தால்
*****காளியன்ன அவதாரம் எடுத்துதிரம் குடிப்பேன்...

எம்மொழியும் பெற்றிடாத விலக்கணங்கள் வகுத்தும்
*****ஈரடிக்குள் உலகோர்க்கு ஞானத்தைப் படைத்தும்
நம்மொழியிற் சொல்வளங்கள் நற்பெயர்கள் இருந்தும்
*****நாணமற்று வேற்றுமொழி கடன்கேட்டற் சிறப்போ?...
அம்மொழியிற் பாட்டியற்றும் ஆன்றோர்கள் தெரிந்தே
*****அயன்மொழியை ஊன்றுகோலாய்க் கையாள்தற் சரியோ?...
செம்மொழியில் அறங்கூறும் திருநூல்கள் மறந்து
*****செங்கரையான் மரமரித்தற் போன்னடத்தல் முறையோ?...

வாசிப்பார் வாய்மணக்கும் மனத்தாழ்கள் திறந்து
*****வாணாளிற் பார்போற்றும் சான்றோனாய் உயர்த்தும்
நேசிப்பார் வியந்துநோக்க நெஞ்சுருகும் உலகில்
*****நீள்நெடுவான் புவியாவும் அழிந்துவிடின் நிலைக்கும்
பேசிப்பார் செவிநுகர்வார் குறிஞ்சித்தேன் சுவைப்பார்
*****பெற்றவின்பம் மாற்றோரும் பருகிவாழ்ந்து களிக்க
யோசிப்பார் நின்னையொக்கும் மூடர்கள் அழிவில்
*****யோசிக்கா தென்றென்றும் வளர்ச்சிக்காய் உழைத்தே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 10:30 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 678

மேலே