புல்லர் நல்லவர்போல் மேன்மைதனை நண்ணுவரோ – போலி நிலை, தருமதீபிகை 124

நேரிசை வெண்பா

புல்லர் களிப்போடு பொங்கி வழிந்தாலும்
நல்லவர்போல் மேன்மைதனை நண்ணுவரோ? – புல்லிய,கள்
மேலெழுந்து பொங்கி மிகுந்தாலும் நல்,ஆவின்
பாலெழுந்த பண்பாமோ பார். 124

- போலி நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புல்லர் மனக் களிப்போடு வெளியே மினுக்கி நிமிர்ந்தாலும் நல்லவரைப்போல் மேன்மையினை அடையார்; கள் மேல் எழுந்து வழித்தாலும் பால் போல் மதிப்புறாது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

புல்லர் - புன்மையான தன்மையுடையார், பொங்கி வழிதலாவது வீண் பிலுக்கராய் யாண்டும் முந்தித் துள்ளுதல். வழிதல் என்றது சிறுமை நிலை தெரிய வந்தது.

உள்ளப் பண்புடைய நல்லோர்கள் வெளிப்பகட்டின்றி அடங்கியிருந்தாலும் உலகம் அவரை உணர்ந்து மதித்து உவந்து போற்றும். பெரிய ஆடம்பரங்கள் செய்து அற்பர்கள் மினுக்கித் திரிந்தாலும் அறிஞர்கள் மதியார்.

கள் புல்லர்க்கும், பால் நல்லவர்க்கும் ஒப்பாம். உவமக் குறிப்பால் பொருள்களின் இயல்புகள் இனிது புலனாம். புளிப்பேறிக் கள் பொங்கி வழிதல் போல் களிப்பு மீறி இழிமக்கள். எங்கும் பிலுக்கித் திரிவர்; பால்போல் இனியராய் மேலோர் யாண்டும் அடங்கி யிருப்பர்.

ஆவின் பால் என்றது பிறப்பின் பெருமையும் தூய்மையும் உணர வந்தது. ஆமோ? என்றது ஆகாது என்ற கருத்துடையது.

இழிந்த கள் போல் ஈனமாய் ஒழிந்து போகாமல், நல்ல பால் போல் இனிமையாய் மனிதன் உயர்ந்து கொள்ள வேண்டும். என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-19, 8:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே