கெடுமதியர் கேடான பொய்யையே மீட்டும் புகல்வர் மிகுந்து – பொய், தருமதீபிகை 134

நேரிசை வெண்பா

பொய்யுரைக்கும் வாய்க்குநற் போசனமும் கிட்டாதென்(று)
ஐயோ உலகுரைக்கும் அச்சொல்லை - மெய்யாகக்
கேட்டும் கெடுமதியர் கேடான பொய்யையே
மீட்டும் புகல்வர் மிகுந்து. 134

– பொய், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொய் பேசுகின்ற வாய்க்கு நல்ல போசனம் கிடையாது என்று உலகம் கூறி வருவதை உணர்ந்தும் மீண்டும் பொய்யே பேசி மக்கள் மாண்டு போகின்றார் எனப்பட்டது.

தமக்கே படுகேடு விளைத்து வரும் அறிவு கேட்டை நோக்கி கெடுமதியர் என்றது. எல்லாம் வல்ல கடவுள் நேரே பார்த்துக் கொண்டிருக்கிறார்; பொய் பேசினால் உன்னை அவர் வெகுண்டு தண்டிப்பார் என முன்னம் கூறினார்; இதில், உலகம் பழித்திருத்தலை உணர்த்துகின்றார்.

'பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது’ என்பது இந்நாட்டில் வழங்கிவரும் பழமொழி. பொய்யின் தீமையைக் குறித்து முன்னோர் என்ன எண்ணியுள்ளார் என்பது இதனால் அறியலாகும்.

பொய் பேசுதலால் பாவம் உண்டாகின்றது; அப்பாவம் துன்பங்களுக்கு ஏது ஆகின்றது. ஆகவே வறுமை, பசி முதலிய கொடிய துயரங்களுக்கு மூலகாரணமாய் அது மூண்டு நிற்கின்றது. அந்நிலையை இம்முதுமொழி குறித்திருக்கிறது.

இங்கே சில ஐயங்கள் தோன்றலாம்.

பெரும் பொருள்களைத் திரட்டி நல்ல உணவுகளை உண்டு செல்வ நிலையில் செழித்திருப்பவர் பெரும்பாலும் பொய் சொல்லி நல்ல பலன் கண்டுள்ளனர். வாயில் பொய் சொல்லாமல் கையில் பொருள் கூடாது” என்பது அவர் முடிவு.

பொய் சொன்ன வாய்க்கு அன்னம் கிடையாது என முன்னம் சொன்னது தவறு; சொல்லும் வாய்க்கே எல்லாம் வரும் என்று அவர் துணிந்து நிற்கின்றார். இத்தகைய நிலைகளைக் கண்டு பலர் மயங்கி விடுகின்றார்; பொய்யை மதித்து மெய்யை அவமதிக்க நேர்கின்றார்.

’அறத்தான் வருவதே இன்பம்’ என்றபடி புண்ணிய நிலையில் வரும் பொருளே என்றும் கண்ணியமாய் இன்பம் தரும். பாவ வழியில் வருவது முதலில் பெருகுவது போல் தோன்றினும் முடிவில் பழியும் துன்பமும் தந்து ஒழிந்தே போகும்

ஆதலால் எதிரிலுள்ளதை நோக்கி எதையும் முடிவு செய்யலாகாது; நீண்டு நிலைபெற்று வருவதை நெடிது சிந்தித்து ஆன்ற அறிவால் ஆராய்ந்து ஓர்ந்து கொள்ளவேண்டும்.

பொய் யாண்டும் பாவமாய் நீண்டு படுதுயரையே விளைக்குமாதலால் அதனை மனிதன் ஒழித்தொழுக வேண்டும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 297 வாய்மை

If a man has the power to abstain from telling lies, it will be well with him, even though he does not do any other virtue.

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-19, 8:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே