சிறகு விரிக்கும் நினைவுகள்---பாடல்---

சொந்த மெட்டில்...


பல்லவி :

பூங்காத்து வீசும் பொன்சிந்தும் காலை...
சொல்லாமல் ஏதோ?... சொல்கின்ற சோலை...
கண்ணில் பூ பூக்குதே
நெஞ்சில் தேன் வார்க்குதே
அந்த நதிக்கரை நினைவுகளால் - இன்று
ஆடுகிறேன் நாணல்களாய்...

பூங்காத்து வீசும்...


சரணம் 1 :

புல்லொன்று மெல்லத் தலைநீட்டும் - விழும் பனித்துளி
அன்னை மடியென்று அதில் துயில் கொள்ளும்...
நெல்லென்ற பிள்ளை அசைந்தாடும் - வளர் பசுந்தளிர்
கொஞ்சும் சுகம்தந்து என் மனம் கிள்ளும்...

கீழ்வானில் காதலன் சூரியன் எட்டிப் பார்த்தால்
குளம்நின்று காதலி தாமரை மொட்டு விரிப்பாள்...

இயற்கையின் அழகே... இனிமைகள் தருதே...
சிறகினை விரித்தே... நினைவுகள் வருதே...

சொர்க்க வாசல் செல்லும் பாதை தவத்தால் சிலர் காண்பார்...
சொந்த வாசல் சொர்க்கம் என்று நினைத்தே பலர் வாழ்வார்...

அந்த நதிக்கரை நினைவுகளால் - இன்று
ஆடுகிறேன் நாணல்களாய்...

பூங்காத்து வீசும்...


சரணம் 2 :

மெட்டொன்று சின்ன குயில்பாடும் - வரும் இசையினை
மண்ணில் மரம்கேட்டுப் பூ மழைத் தூவும்...
சிட்டொன்று பக்கம் விளையாடும் - விளை நிலத்தினில்
பச்சைக் கிளி கூட்டம் தினம் இரை தேடும்...

கொத்தோடு மாங்கனி தொங்கிடும் மரத்தைக் கண்டால்
அணிலாகும் நெஞ்சமும் ஆசையில் ஏறத் துடிக்கும்...

சேத்தினில் நடந்தால்... சந்தன மணமே...
ஆத்தினில் குளித்தே... நீந்திடும் மனமே...

கோடைக் காலம் வந்த போதும் வசந்தம் வரக் காண்பார்...
ஓடை நீரும் வத்தவில்லை உழவால் உயிர் வாழ்வார்...

அந்த நதிக்கரை நினைவுகளால் - இன்று
ஆடுகிறேன் நாணல்களாய்...

பூங்காத்து வீசும்...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Mar-19, 5:03 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 785

மேலே