படைப்புமுகமும் பாலியல்முகமும் – ----------------------வாசகர் கடிதங்கள்

ஜெ

நேற்று உங்கள் தளத்தில் எஸ் என்ற இளைஞர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். என்ன ஒரு நடை. மொழிக்கூர்மை, புனைவுணர்வுள்ள கூறுமுறை, கச்சிதமான ஒழுக்கில் ஒன்றின்பின் ஒன்றென விழுந்த சொற்றொடர்கள், அனைத்துக்கும் மேலாக அக்கடிதம் வழியாக தெள்ளத்தெளிவாக கூடி வந்த தனி ஆளுமை. ஒரு புனைவெழுத்தாளருக்குறியதென இருந்தது.

‘இலக்கியம் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கவில்லை, வாழ்வதற்கான ஆசைய கொடுத்தது,’ என்கிறார். இலக்கியத்துக்கும் வாழ்க்கைகுமான உறவை பற்றிய எவ்வளவு கூர்மையான கண்டடைதல். இதனை நானும் உணர்ந்திருக்கிறேன். வாழ நம்பிக்கை வேண்டும் என்று மதக்கொள்கையர்களும் சுயமுன்னேற்ற உபதேசிகளும் வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் கனவுதின்னிகளுக்கு வாழ ஆசை இருந்தால் போதும். வாழ்வின்மீதும் உயிரின்மீதும் சிதறித்தெறித்த இப்பிரபஞ்ச வடிவங்கள் அனைத்தின் மீதுமான ஆசை.

பெரிய ஆகிருதி கொண்ட படைப்பாளுமைகளை பற்றி சமீபத்தில் ஒரு சிந்தனை தோன்றியது. அவர்களின் ஆக்கங்களை முட்டுக்கொடுத்து நிறுத்துவது அடிப்படையில் அவர்களுடைய அக ஆற்றல். அதனை உயிராற்றலின் ஒரு வடிவம் என்று சொல்லலாம். புனைவு ஒரு பொய். ஒரு கட்டமைப்பு. பொய்யை, உண்மை, இது உண்மை, இது மட்டுமே உண்மை என்று வாசகனே சாட்சிசொல்லும்படி சாதித்து நிறுவ எழுத்தாளருக்கு ஓர் அடாவடித்தனம் வேண்டும். ஒரு வலிமை. அது அவர் மொழியில் மொழிவழியே விளங்கும் ஆளுமையில் தெரிந்தது.

பெரும்படைப்பாளிகள் பலர் சுயபால் நாட்டம் கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் காண்கிறோம். தாமஸ் மன், சாமர்செட் மாம் நினைவுக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண் எழுத்தாளர்களில் சுயபால், அல்லது இருபால் நாட்டம் கொண்டவர்கள் மிகுதி, கிரேக்க கவிஞர் சாஃபோ முதல் ஜார்ஜ் சாண்ட் வழியாக சில்வியா பிளாத் வரை. இவ்வாளுமைகளின் இந்த அம்சத்துக்கும் அவர்களுடைய படைப்பூக்கத்துமான தொடர்பை பற்றி சிந்தித்துப்பார்த்திருக்கிறேன்.

சுதந்திரமான, தேடல்களுடைய படைப்பிலக்கியவாதி என்றுமே பொதுச்சமூகத்துக்கு ஓர் எட்டு வெளியே தான் நிற்கிறார். எப்படியோ புறத்தவராக வாழ்கிறார். பொதுசமூகத்துக்குள் தன்னை கரைத்துக்கொள்ள முடியாதவராக இருக்கிறார். ஆனால் அதுவே கற்பனையுடனும் அறவுணர்வுடனும் எழுத சாதகமான அம்சமாக இருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

அந்த அழுத்தமே அவர்களை கனவும் கற்பனையும் நாடுபவர்களாக ஆக்குகிறது. தான் வலியும் தனிமையும் அறிந்ததால் பிறத்தியாரின் வலியையும் தனிமையையும் உணரும் நுண்ணுணர்வை அளிக்கிறது. தனிமைபடுத்தப்பட்டவர்களுடன் ஒன்ற வைக்கிறது. நானும் நீயே என்று உணர்ந்து அவர்களை ஓடிச்சென்று அணைக்கிறது. பொதுப்போக்குகளிலிருந்து விலகல் உணர்வை அளிக்கிறது. தன்னையே நோக்கிக்கொள்ளுதலில் கிடைக்கும் விடுதலையை உணரவைக்கிறது. எழுதி எழுதி எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான வழியை திறக்கிறது. அதில் வானளவு சுதந்திரம் உள்ளது. ஆம், பெரும்படைப்பாளிகள் தங்கள் தனிப்பட்ட வலிகளை மூலதனமாக்கித்தான் எழுதுகிறார்கள். ஆனால் தங்கள் எழுத்தின் மூலமாக இந்த இடுங்கிய பொந்திலிருந்து வான்விரிவைத் துளியெனக் காணும் ஒரு சாளரத்தை கண்டடைகிறார்கள். அவர்கள் அதையே நமக்கு விட்டுச்செல்கிறார்கள். எவ்வளவு பெரிய கனிவு அது. இந்த எண்ணம் இன்று இப்போது அளிக்கும் உன்னதமும் மனவெழுச்சியும் சாதாரணமானதல்ல.

எஸ் தன் கடிதத்தின் உள்ளடக்கத்தில் ஆழமான புண்களை நிராகரிப்புகளை வலிகளை சொல்லியிருந்தார். ஆனால் அவர் எழுத்தில் புனைவெழுத்தாளரின் நேர்த்தியும் கலைஞனின் உணர்வுண்மையுமே மேலோங்கி வெளிப்படுகிறது. தர்க்கமனத்தை மீறி அது தான் பாதித்தது. என்றாவது ஒரு நாள் அவருடைய ஆக்கங்களை படித்து வாசகர் கடிதம் போடுவேன் என்று நினைத்துகொண்டேன். அதனை அவரிடம் சொல்லவேண்டுமென தோன்றியது.

சுசித்ரா

***

அன்புள்ள ஜெ,

இக்கடிதமும் அதற்கான தங்களது மறுவினையும் எனது இந்தக் காலையை அழகாக்கியது. எனக்கு வலிப்பு பிரச்னை இருந்தது. அது மரபு ரீதியில் வந்த பிரச்னை. எனது பதினாறாவது வயதில் முதன்முறையாக வலிப்பு வந்தது. நான் நினைவை இழந்து மயக்க நிலைக்குச் சென்று விட்டேன். மீண்டு எழுந்த போது என் குடும்பத்தாரின் முகத்தில் தெரிந்த பதற்றம், பரிதவிப்பு எல்லாம் என்னைக் குழப்பியது. வலிப்பு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பு வரை நடந்த எதுவும் நினைவில் இல்லை. ஒரு யுகத்தையே தூங்கிக் கழித்தவன் விழித்து எழுந்தது போல் உணர்ந்தேன். எல்லாமே புதிதாகத் தெரிந்தது. அதன் பிறகு மாதத்துக்கு இரண்டு முறையேனும் வலிப்பு வந்து விடும். வலிப்பு வருவதற்கு முன்னால் சில காட்சிகள் என்னுள் விரியும். தொடர்ச்சியாக ஒவ்வொரு முறை வலிப்பு வரும்போதும் அதே காட்சி எனக்குள் ஓடும். அது பெரும் அச்சத்தைக் கொடுக்கும். அப்படியே படுத்து விடுவேன். கை, கால் சிராய்ப்பு மற்றும் தரையில் மோதிய காயங்களோடு சில நாட்களைக் கடத்த வேண்டி வரும். வாழ்தல் மீதான பெருங்கனவுகள் எல்லாம் தகர்ந்து போகும். எதிலுமே பற்றுகொள்ள முடியாத நிலைக்கு ஆட்பட்டேன்.

மருத்துவர்களோ சைக்கிள் ஓட்டக்கூடாது, வண்டி ஓட்டக்கூடாது என கூடாதவைகளின் பட்டியலை நீட்டி முழக்கினர். எங்கள் ஊரில் மத்தாளக்கொம்பு எனும் நீரூற்று இருக்கிறது. ஸ்படிகத் தூய்மையுடன் இருக்கும் அந்த நீரூற்றில்தான் நான் நீச்சல் பயின்றேன். என் பள்ளிக்காலக் கொண்டாட்டம் அந்நீரூற்றுதான். ஆனால் இப்பிரச்னைக்குப் பிறகு நான் அந்நீரூற்றில் குளிக்கச் செல்வதை என் பெற்றோர் விரும்பவில்லை. தொட்டதெற்கெல்லாம் எனக்கு இப்படியாகி விடுமோ என்கிற அவர்களின் பதற்றம் பாசமாக இருந்தாலும், என்னை மேலும் அச்சம் கொள்ளவும், பற்றற்றுப் போகவும் செய்தது.

பள்ளிக்காலத்திலேயே நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி வந்தேன். எனது 16வது வயதிலேயே ஒரு நாளிதழில் எங்கள் ஊரின் பகுதி நேர நிருபராய் இணைந்தேன். என்னுடன் பயின்ற மாணவர்கள் எல்லாம் 11ம் வகுப்பு படிக்க பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்த போது, நான் செய்தி சேகரிக்க காவல் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். போக, சில வார இதழ்களுக்கு ஃப்ரீலான்சராக செய்திக்கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி விட்டு அது பிரசுரமாகுமா? என்று ஒவ்வொரு வாரமும் ஆவலோடு இதழைப் புரட்டிக் கொண்டிருப்பேன். அதே இதழில் இரண்டு அல்லது மூன்று பக்கத்துக்கு எனது கட்டுரை பிரசுரமாவதை நினைக்கையில் உள்ளூர பூரிக்கும். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. எல்லாமே நன்றாக அமைந்து விட்டது என்கிற நம்பிக்கை எனக்குள் முளைக்கும்போதெல்லாம் வலிப்பு பிரச்னை பற்றிய எண்ணம் எல்லாவற்றையும் சிதறடித்து விடும்.

ஒரு கட்டத்தில், பத்திரிக்கையாளனாகி என்ன செய்யப் போகிறோம்? இதைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? என்று எதன் மீதும் பற்றில்லாமல், அவ நம்பிக்கையுடன் திரிந்தேன். பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்த பின் அப்பிரச்னையிலிருந்து கொஞ்சம் விடுபட்டேன். வாழ்வின் மீது பெரும் பற்று உருவானது. எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடும் உத்வேகம் வந்தது. அடுத்து பகுதி நிருபராக இருந்த நான் சென்னைக்கு வந்து பல்வேறு ஊடகங்களில் பணியாற்றினேன்.

நோயை நாம் பதற்றத்துடன் எதிர்கொள்வதை விட அதன் தன்மை மற்றும் காரணிகளைத் தெரிந்து கொண்டு அதை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும். உடலின் இயக்கம், உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்குமிடையே உள்ள தொடர்பு, உடலுக்குக்கும் உளவியலுக்குமான பிணைப்பு, புறத்துக்கும் அகத்துக்குமான உறவு என பலவற்றை வாசிப்பின் வழியாகவும், நண்பர்களுடனான உரையாடலின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது. எனது பிரச்னையை நான் ஓர் அந்நியனாக இருந்து பார்க்கக் கற்றுக் கொண்டேன். எனது இப்பிரச்னை மரபு ரீதியில் வந்தது என்பதை அதன் பிறகுதான் கண்டறிந்தேன். மன ரீதியில் நாம் உறுதியோடு இருப்பதும், நமது உடலுக்கு ஏற்றது/ஏற்காதது களை அறிந்து அதைக் கடைபிடிக்கச் செய்வதுமே நலமான வாழ்க்கைக்கான வழி. மனதளவில் மட்டும் உறுதியாக இருந்து கொண்டு தனக்கு ஒன்றும் ஆகாது என உடலை வருத்துவது முட்டாள்தனம். அதே போன்று தொட்டதற்கெல்லாம் எனக்கு இது வந்து விடுமோ? அது வந்து விடுமோ? என்று பதற்றம் கொள்வது பெரிதினும் பெரிய மடத்தனம். உடல், மனம் இரண்டையும் சீராக வைத்துக் கொள்வதுதான் அவசியம் என்பதை வாசிப்பின் வழியே கண்டுணர்ந்தேன்.

இருந்தும் வலிப்பு வருவதற்கு முன் என்னுள் விரியும் காட்சிகளைப் பற்றிய கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அந்தக் காட்சிகளை என்னால் நினைவு கூரவே முடியவில்லை. ஏதோ ஒன்று என்னை வா என்று அழைப்பது போல இருக்கும். சரியாகத் தெரியவில்லை. ஆனால் இப்படியான காட்சிகள் நான் கடந்து வந்த சம்பவங்களில் ஒன்றா? அல்லது என் கற்பனையில் உருவாக்கப்பட்டதா? என்பது பற்றிய கேள்விகளுடன் இருந்தேன். சில மாதங்களுக்கு முன் நரம்பியல் வல்லுநரான டாக்டர் ஆலிவர் சாக்ஸின் ‘தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்’ நூலை வாசித்தேன். அவர் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதையாடல் இருப்பதாகக் கூறுகிறார். நவீன அறிவியல் மனித உடலை பௌதீக உறுப்பாகப் பார்க்கிறது. அதன்படி ஒரு பிரச்னைக்கு அனைவருக்கும் ஒரே விதமான சிகிச்சையை அளிக்கிறது. ஆனால் ஒவ்வொருவரும் கதையாடல்கள் வழியே வேறுபட்டவர்கள். ஆகவே அக்கதையாடல் வழியாகத்தான் அவர்களை அணுக வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவ்வாசிப்பு எனக்குள் பல திறப்புகளை உண்டாக்கின.

வாசிப்பின் வழியே நமது துயருக்கான தர்க்கப்பூர்வமான விளக்கத்தைத் தேடித் தெளிவடையவும், எழுத்தின் வழியே அத்துயரின் நினைவுகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும் முடியும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்.

கி.ச.திலீபன்

***

எழுதியவர் : (23-Mar-19, 8:38 am)
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே