பொய்யர் மெய்யினைச் செப்பிடினும் நன்றென்று நம்பார் – பொய், தருமதீபிகை 135

நேரிசை வெண்பா

பொய்யரெனப் பேரெடுத்த பின்பவர்தாம் மெய்யினையே
செய்ய வகையாகச் செப்பிடினும் - ஐயகோ
நன்றென்று நம்பாரே; நம்புவரோ வேசையர்தாம்
நின்றாலும் கற்பா நினை. 135

– பொய், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொய்யர் என்று ஒருமுறை பேர் பெற்றவர் பின்பு எவ்வளவு மெய்யுரைகளைப் பேசினும் உலகம் அவரை நம்பாது; ஒருநாள் வேசி யாடினவள் பின்பு நிறை வழுவாதவளாய் மருவியிருந்தாலும் யாரும் அவளை நம்புவார்களா என நினைத்துப் பார்; நம்ப மாட்டார்.

மனிதன் பேசுகின்ற பொய் எப்படியும் தப்பாமல் வெளியாகி விடுகின்றது; அதனால், பொய்யன் என எல்லாரும் தெரிந்து கொள்ளுகின்றனர். அதன்பின் அக்கொள்கையை மாற்றுதல் அரிதாகின்றது.

நல்ல நெறியுடையளாய் நின்றாலும் வேசையை மெய்யாக மதியாதது போல் பொய்யனையும் வையம் ஐயமாய் அவமதித்தே நிற்கும்.

'அரைக்காசுக்கு அழிந்திட்ட கற்பு
ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமோ நீ செப்பு: எனப்பட்டது,

ஒரு முறை உற்ற வழு உடலழியும் வரையும் ஒழியாது இழிவு செய்கின்றது. புனிதமான நா பொய்யால் புலைப்படுவதால் மனிதன் நீசமான பழியடைந்து நாசமடைகின்றான்.

வறியனாயினும் மெய் பேசுகின்றவனை உலகம் மதித்துப் போற்றுகின்றது; செல்வனாயிருந்தாலும் பொய்யனை இகழ்ந்து தள்ளுகின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

"பொய்யுளான் மறந்தோர் மெய்ம்மை
..புகலினும் பொய்மை யாகும்;
உய்யுமா றென்றும் இல்லை.
..உறுதியென் பதும்சா ராது;
கொய்யுமா மலர்ப்பூஞ் சோலை
..சூழ்குவ லயத்து நாளும்
நையுமா றெதுசெய் தாலும்
..பொய்நவி லாமை வேண்டும்.' - காசி ரகசியம்

பொய்யுடையானுக்கு யாண்டும் உய்தியில்லையாதலால் அக்கொடிய தீமையை எவ்வகையினும் அணுகாதே என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-19, 9:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே