ஸவ்யஸாசியே எழுந்திரு

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வரும் ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம். அதில் மார்ச் 2019 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை:

ஸவ்யஸாசியே எழுந்திரு!

ச.நாகராஜன்


கீதோபதேசத்தில் ஒரு அற்புதமான கட்டம்!

மனித குலத்திற்கான செய்தியை கிருஷ்ணர் தரும் கட்டம் அது!

ஒவ்வொரு மனிதனுக்குமான தெய்வ செய்தி அது!

தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ

ஜித்வா சத்ருத் புங்க்ஷ்வ் ராஜ்யம் ஸம்ருத்தம் |

மயைவைதே நிஹதா பூர்வமேவ

நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசிந் ||

ஹே, ஸவ்யஸாசியே! ஆகவே, நீ எழுந்திரு (தஸ்மாத் த்வம் உத்திஷ்ட)! எதிரிகளை வென்று புகழை அடைவாயாக (யசோ லபஸ்வ)! செல்வம் நிறைந்த ராஜ்யத்தை அனுபவி!இவர்கள் எல்லாம் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டார்கள். நீ நிமித்தம் என்ற ஒரு கருவியாக இரு. (அத்தியாயம் 11, ஸ்லோகம் 33)

மஹாவீரனான அர்ஜுனனுக்கு ஸாங்க்ய யோகம், கர்ம யோகம் உள்ளிட்ட அனைத்தையும் உபதேசித்து முடித்து விட்ட பின்னர் கிருஷ்ணர் அர்ஜுனனை எழுந்து செயல் புரி என்று உத்வேகம் ஊட்டுகின்ற காட்சி இது.

அவனை அவர் ஸவ்யஸாசி என இங்கு அழைக்கிறார்.

ஸவ்யஸாசி யார்? பொதுவாக ஒரு போரில் வீரர்கள் வில்லை இடது கையில் பிடித்து பாணங்களை வலது கையால் விடுவார்கள். ஆனால் வில்வித்தையில் தேர்ந்த மஹாவீரர்களோ இரு கைகளிலும் வில்லைப் பிடிக்கும் வல்லமை படைத்தவர்கள். எவர் ஒருவர் வில்லை வலது கையில் பிடித்து இடது கையால் பாணத்தை விடுகிறாரோ அவரே ஸவ்யஸாசி. அர்ஜுனன் ஒரு ஸவ்யஸாசி. இதே போல இன்னொரு ஸவ்யஸாசி மன்மதன் தான்!

இப்படிப்பட்ட மஹாவீரன் நீ என கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நினைவுபடுத்தவே இப்படி அழைக்கிறார்.

எதைப் பொறுத்தாலும் பொறுப்பான் அர்ஜுனன், ஆனால் அவனது காண்டீவத்தை இகழ்ந்தவர்களைப் பொறுக்கவே மாட்டான்.

கர்ண பர்வத்தில் வரும் காட்சி இது (71,72, 73 அத்தியாயங்கள்).

தர்மர் கர்ணனை அர்ஜுனன் கொல்லவில்லை என்ற கோபத்தால் அவனை இகழ்கிறார். “ஸ்வர்ணத்தினால் விசித்திரமான கட்டுக்கள் உள்ளதும், பனை அளவு உள்ளதுமான காண்டீவம் என்ற சிறந்த வில் உன்னிடமிருந்து பிரயோஜனம் என்ன? அதை கிருஷ்ணரிடம் கொடுத்து அவருக்கு சாரதியாக ஆகி விடு. அப்போது அவர் கர்ணனை வதம் செய்வார்” என்ற தர்மரின் வார்த்தையைக் கேட்ட அர்ஜுனன் தன் கத்தியை உருவி தர்மரைக் கொலை செய்யப் போகிறான். உடனே கிருஷ்ணர் அவனைத் தடுத்து நிறுத்தி, ‘எதற்காக இந்தத் தகாத காரியத்தைச் செய்கிறாய்’ எனக் கேட்கிறார். ‘எவர் ஒருவர் என் காண்டீவத்தை இகழ்ந்து அதை இன்னொருவரிடம் கொடு என்று சொல்கிறாரோ அவரைக் கொல்வேன்’ என்பது என் ரகசிய விரதம். ஆகவே அவரைக் கொல்லப் போகிறேன் என்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணர், ‘குருவான தர்மரை நீ என்று சொல். அதுவே அவரைக் கொன்றதற்குச் சமம்’ என்கிறார். அதன்படி ‘நீ’ என்று பலமுறை இகழ்ந்து அர்ஜுனன் கூறித் தன் கோபம் தணிகிறான். ஆனால் அவன் மீண்டும் கத்தியை உருவவே கிருஷ்ணர் ‘எதற்காகத் திருப்பியும் கத்தியை எடுக்கிறாய்’ எனக் கேட்கிறார். ‘மஹா சிரேஷ்டரும் என் குருவுமான தர்மரை இப்படி நீ என இகழ்ந்த நான் உயிர் வாழத் தக்கவன் அல்ல; என்னை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்’, என்கிறான் அர்ஜுனன். உடனே கிருஷ்ணர், ‘உன் புகழை நீயே கொஞ்சம் சொல்; அப்போது உருவம் அழிந்தவனாகி விடுவாய்’ என்கிறார். அர்ஜுனன். ‘சிவனை ஒத்தவன் நான்; என்னை வெல்வார் எவரும் இல்லை’ என்று ஆரம்பித்துத் தன் பெருமையைக் கூறி நாணித் தலை குனிகிறான். (வியவற்க எஞ்ஞான்றும் தன்னை – குறள்)

ஆக காண்டீவத்தின் பெருமையையும் அதன் மீது ஸவ்யஸாசியான அர்ஜுனன் கொண்டிருந்த மரியாதையையும் பேரன்பையும் இங்குக் காண்கிறோம்.

மஹாபாரதத்தில், விராட பர்வத்தில் வரும் இன்னொரு காட்சி காண்டீவத்தின் பெருமையை விளக்குகிறது.(அத்தியாயம் 42). போர் செய்ய பயப்படும் உத்தரனை ஊக்குவிக்கும் விதமாக அர்ஜுனன் பாண்டவரின் ஆயுதங்களைக் காட்டி அதன் பெருமைகளை விளக்கும் காட்சி இது.

இதில் அர்ஜுனன் தானே தனது காண்டீவத்தைப் பற்றி மூன்றாம் மனிதன் சொல்வது போல அமைக்கப்பட்ட காட்சி இது. அதில் உத்தரனிடம் அர்ஜுனன் கூறுவது இது: “ எதிரி சேனைகளின் அங்கங்களை அடிக்கின்றதும் தேவ சம்பந்தம் பெற்றதும் காண்டீவம் என்று பிரசித்தி பெற்றதுமான இந்த வில் பார்த்தனுடையது. பிளக்க முடியாததும், அச்சமற்றதும், ஒளியுள்ளதும், ஆச்சர்யகரமானதும், முறிக்க முடியாததும், வெடிப்பில்லாததும்,எல்லா ஆயுதங்களுள்ளும் சிறந்ததும் பொன்மயமானதும் நாடுகளைப் பெருகச் செய்கின்றதும் அநேக வருடகாலமாகத் தேவர்களாலும், அசுரர்களாலும், கந்தர்வர்களாலும் பூஜிக்கப்பட்டிருக்கின்றதுமான இந்த வில்லானது லட்சம் ஆயுதங்களுக்கு ஒப்பானது.இதை முற்காலத்தில் பிரம்மதேவர் ஆயிரம் வருட காலம் வைத்திருந்தார்; உமாபதியானவர் அறுபத்துநான்கு வருடம் வைத்திருந்தார். இந்திரன் எண்பத்தைந்து வருடம் தாங்கி இருந்தான். சந்திரன் ஐந்தாயிரம் வருடம் தரித்திருந்தான். வருணன் நூறு வருடம் தரித்திருந்தான். வருணனிடமிருந்து அதைப் பெற்ற அக்னி தான் தரித்து வந்தான். அதை பார்த்தனுக்குத் தந்தான். இதை அர்ஜுனன் அறுபத்தைந்து வருடம் தரிக்கப் போகிறான்”.

ஆக இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த வில்லை இரு கைகளினாலும் இயக்க வல்லவன் ஸவ்யசாசி.

அவன் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட கண்ணன் அவனை அதிலிருந்து விடுவிக்கிறான். எழுக; எதிரிகளை வெல்க; புகழை அடைக என உபதேசிக்கிறான்.

அர்ஜுனன் குழப்பத்தில் தவிப்பது போல பூவுலகில் ஒவ்வொருவனும் அவ்வப்பொழுது குழப்பத்தில் தவிப்பது கண் கூடு.

அர்ஜுனன் போல அவ்வளவு வீரனாக இல்லாத சாமான்யர்கள் முதலில் அவன் போல ஸவ்யஸாசி ஆக வேண்டும். பின்னர் குழப்பம் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும்.

எந்த நிலையிலும் கர்மம் செய்வதைத் தவிர்க்காதே; ஏற்கனவே மஹாசக்தியினால் எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்ற போதிலும் “நீ கர்மத்தைச் செய்ய வேண்டும். தஸ்மாத் உத்திஷ்ட! ஆகவே எழுந்திரு; யசோ லபஸ்வ; புகழை அடை.”

இது தான் கிருஷ்ணர் ஒவ்வொரு மனிதனுக்கும் தரும் செய்தி.

கிருஷ்ணர் அழைக்கும் ஸவ்ய ஸாசி என்ற ஒரு சொல்லே ஏராளமான அதிசயச் செய்திகளை தந்து நமக்கு உத்வேகத்தையும் ஊட்டுகிறது.

ஸவ்யஸாசி ஆவோம்; இரு கரங்களாலும் பணி ஆற்றுவோம்; தர்ம வழியில் கர்மம் புரிவோம்; கிருஷ்ணரின் கீதை காட்டும் பாதை வழி நின்று அவரது அனுக்ரஹம் பெறுவோம்.

****

எழுதியவர் : (23-Mar-19, 9:10 pm)
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே