கலினமிட்டு நின்றாலும் கழுதை தத்துபரி போலுயர்வு சாருமோ - போலி நிலை, தருமதீபிகை 126

நேரிசை வெண்பா

கத்தும் கழுதை கலினமிட்டு நின்றாலும்
தத்துபரி போலுயர்வு சாருமோ? - இத்தரையில்
மூடர் அறிந்தவர்போல் முன்னி நிமிர்ந்தாலும்
பீடு பெறுவரோ பின். 126

- போலி நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கத்துகின்ற கழுதை கலினம் பூண்டு நின்றாலும் உத்தமக் குதிரையை போல் உயர்வை அடையாது; அதுபோல், இவ்வுலகில் ஈன மூடர் ஞான சீலர்போல் கோலம் கொண்டு நிமிர்ந்தாலும் மேன்மை பெறார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கலினம் - கடிவாளம். குதிரை வாயில் இட்டுப் பாகன் கையில் நீளமாகப் பிடித்துக் கொள்வது ஆகலான் கடிவாளம் என வந்தது. ஏறு குதிரைக்குரிய சேணம் முதலிய அலங்காரங்களையும் ஈண்டு இணைத்து எண்ணிக் கொள்ள வேண்டும்.

அகத்தே நல்ல கல்வியறிவில்லாமல் புறத்தே ஆடம்பரமான வேடங்களைப் பூண்டு கொண்டு வீணே பிலுக்கி நிற்கும் போலிகளைக் குறித்துக் கூறியவாறிது.

முன்னி நிமிர்தல் - எண்ணிச் செருக்கி இறுமாந்து நிற்றல், முன்னல் – எண்ணல்; களிப்போங்கி நிற்கும் இளிப்பு நிலையை வெளிப்படுத்தி நின்றது.

அவர்தம் இயல்பான இழி நிலை தெரிய இழுதைகளுக்குக் கழுதையை உவமை கூறியது, கத்தும் என்றது பயனின்றிப் பிதற்றும் அவரது வாயாடித்தனத்தைக் குறித்தது.

உத்தமக் கலைஞர் அதி விவேகமுடைமையால் தத்துபரி அவர்க்கு உவமையாய் வந்தது. கம்பீரம், காட்சியின்பம், கதிவேகம், மதியமைதி, மங்கலமுடைமை முதலிய உவமை நலங்களை யெல்லாம் உபமேயத்தில் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பீடு பெறுவரோ? என்றது. பெறார் என்றபடி. பீடு - பெருமை.

முன்னதாக அறியாது மயங்கினாலும் பின்னர் உண்மை தெளிந்த பின் தெள்ளியோரால் மூடர் எள்ளித் தள்ளப்படுதல் கருதி ‘பின்’ என்றது. பேதைகள் மேதைகள் போல் மேவி நடிப்பினும் பெருமையடையார்; சிறுமையே படுவர்.

கலைகளை உரிமையோடு பயின்று அறிவுடையனாய் உயர்ந்து கொள்க என்றும், போலி வேடம் போட்டு உலகத்தை வஞ்சிக்காதே என்றும் கூறி, அது முடிவில் கேலியாய் முடியும் என உறுதிநலம் உணர்த்துகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-19, 8:17 am)
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே