சதி

சதி
====
நான் வீழ்ந்தேன்
நானே எழுந்து நின்றேன்
என்னை வந்து பாராட்டிப்போன
உன் முகம் ஆனந்தமாக
பத்திரிகைகளில்..
**
கல்லும் மண்ணும் சுமந்து
கடின உழைப்போடு
எங்கள் குழு கட்டி எழுப்பிய
கட்டிடத்தை இன்னும் இங்கே
நீ கட்டியதாகவே கூறுகிறார்கள்.
**
என் வறுமை தாளாமல்
வாங்கிய கடனடைக்க ஓடுகையில்
உன்னுடைய பதாகையின்
பின்னால் மறைந்திருந்தேன்
என் கடனுக்குக் காரணம்
உனது ஊதாரித்தனம் என்பதை
அறியாதவர்கள் உன் திரு உருவைத்
தெய்வமாக்கி வணங்கிப் போனார்கள்.
**
என் மிதிச்சக்கர வண்டியை
நிறுத்திக்கொண்டு
உன்னுடைய சொகுசு வாகனத்திற்கு
காத்திருக்கும் நேரங்களில்
நீ விழுங்கி ஏப்பம் விடும்
சனநாயகப் பணத்தின் முன்
என் பசி ஏப்பம் பாடாய்
படுத்தி வைக்கிறது,
**
வாக்கு தவறும் உனக்கு
வாக்களிக்கும் என்
வாழ்க்கை தவறை திருத்த
முனைகின்ற போதெல்லாம்
இலவச நிவாரணங்கள் மூலம்
என்னை நிர்க்கதியாக்கிவிட்டு
நீ நிம்மதி கொள்கிறாய்.
**
வறுமைக் கோட்டுக்குக் கீழே நானும்
வருமானக் கோட்டுக்கு மேலே நீயும்
ஓடும் பொருளாதார ஓட்டத்தில்
எப்போதும் வெற்றிக்கேடயம்
உனக்காகவே என்று எழுதப்பட்ட விதி
உன்னைத் தலைவனாகவும்
என்னைத் தொண்டனாகவும்
ஆக்கிவைத்த சதி..
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Mar-19, 3:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : sathi
பார்வை : 88

மேலே