சகடம் – சிறுகதை விவாதம் – 3

திரு ஜெ அவர்களுக்கும் இந்த சிறுகதையை எழுதிய நண்பர் நாகபிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். நான் இதுவரை கதையை பற்றிய விமர்சனங்களை எழுதியதில்லை. அதற்கான தகுதி இருக்கிறதா என்பதும் ஏதாவது புரியாமல் எழுதிவிடுவோமோ என்ற பயமுமே காரணம். ஆனாலும் ஜெவின் அழைப்பிற்கும் நாகபிரகாசத்தின் கேள்விக்கும் செவிமடுப்போமே என்பதற்காகவே இதை எழுதுகிறேன். பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் எனக்கு இந்த கதையில் பிடித்ததை எழுதி விடுகிறேன். எழுத்தின் நடை அற்புதமாக உள்ளது. ஆரம்பித்த சில வரிகளிலேயே ஆழமாக படிக்க வேண்டிய கதை என்பது பூரணமாக விளங்கி விடுகிறது. நாயின் காத்திருத்தலுடனான உவமை கதையின் ஒரு முக்கியமான நபரின் சமூக நிலையம் அவரின் தரை நிலை வாழ்க்கையையும் தெளிவாக விளக்கி விடுகிறது. பின் வரும் காத்திருத்தல், சக கடனாளியை விட கீழ்நிலையில் இருத்தல் என்று மேலும் கதை மாந்தனை நிலைப்படுத்துகிறது கதையின் வரிகள்.

பிறகு கதையின் இரண்டாவது முக்கிய நபரை, அந்த பையனின் அப்பாவை அறிமுகப்படுத்துகிறது கதை. அவரின் பொருளாதார கீழ்நிலையையும், சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்தி திருடக்கூட முடியாத கையாகாத நிலையையும் வைத்து அவர்களின் குடும்பநிலையும் அதற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. கதை மேலும் நகர்ந்து அப்பாவின் நண்பர்களும் அப்பாவை போல கடன் வாங்கும் ஆட்களாகத்தான் இருப்பார்கள் போல என்ற அர்த்தத்தையும் அங்கே அம்மாவின் குணங்களையும் அவரின் அப்பாவை பற்றிய எண்ணங்களையும் விவரிக்கிறது.

பிறகு வரும் பத்திகளில் அவர்களின் தற்போதைய செயலுக்கான காரணிகளும் தேவைகளும் தெளிவாக எழுதப்பட்டு இருக்கின்றது. அம்மாவை தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல அப்பா முடிந்த வரை முயல்கிறார். அப்பொழுது தன்னால் முடிந்த வரை அமுதன் பாரத்தை சுமக்கிறான். முடியாமல் போகும்போது எதிர்பாராமல் எங்கிருந்தோ உதவி கிடைக்கிறது. அமுதனுக்கு நம்பிக்கையும் பிறக்கிறது. அவர்களின் வண்டிச்சக்கரம் எப்படியாவது சுழன்று கொண்டே இருக்கிறது. இது தான் நான் இந்த கதையில் இருந்து புரிந்து கொண்டது. ஒன்றும் இல்லா வீட்டை கொண்டி மட்டும் போட்டு மூடுவது, குறுகிய படியில் மேலும் குறுகி அமர்வது, அவிழந்த முடிச்சை மேலும் நழுவாமல் பாதுகாப்பது, தரைவரை தாழ்ந்த நாய் என்று கதை முழுக்க அற்புதமான குறியீட்டு உவமானங்கள்.

கதையின் குறைபாடாக எனக்கு பின் வருபவை தோன்றுகிறது. குறை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த கதையை நான் எழுதி இருந்தால் இவ்வாறு எழுதி இருப்பேன் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். கதாசிரியர் தனது சர்வ வல்லமையை அதாவது கதையின் முக்கிய இரண்டு மனிதர்களின் மனதில் புகுந்து அவர்களின் சுய சிந்தனைக்கு வாய்ப்பே கொடுக்காமல் தான் வரைய விரும்பும் கருத்துக்களை அவர்களின் மீது கட்டாய படுத்துவதாக ஒரு சில இடங்களில் தோன்றுகிறது. கதை பல இடங்களில் ஆழமாக தொடங்கி மேலும் பல மடங்கு ஆழத்தை மிகவும் நுட்பமாக விவரிக்கிறது. படிக்கும் அனைவருக்கும் அவர்கள் இலக்கியத்தில் ஆர்வமிருப்பவர்களாக இருந்தாலும் நாகப்ரகாஷின் எண்ண ஓட்டத்தை ஒட்டியே செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை அல்லவா? இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆசிரியரின் எண்ண ஓட்டத்தை கடிவாளமிட்டது போல ஒட்டியே செல்வது மிகவும் சிரமம். ஆதலால் ஒரு உவமானத்தை குறிப்பிட்டவுடன் அதனை மேலும் விவரிப்பது , உதாரணமாக நாய்- அமுதன், தேவையற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கு பதிலாக உவமானத்தை குறியீட்டை பட்டும் படாமல் சொல்லி விட்டு மேலும் அதை விரிவுபடுத்த படிப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விடலாம். கால ஓட்டம் முன் பின் வருவது அற்புதமாக அவர்களின் வாழ்க்கையின் மாறா தன்மையை உணர்த்துகிறது. அதே நேரத்தில் இதிலிருக்கும் குழப்பத்திற்கான சாத்தியங்களையும் கதாசிரியர் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிதான் உள்ளது. படிப்பவர்கள் பாவம் தானே. அவர்களுக்கு கொஞ்சம் உதவலாம் அல்லவா உங்கள் கதையை புரிந்து கொள்வதற்கு நாகப்ரகாஷ்? மேலும் கதையின் கடைசி வரிக்கும் அதனிலுள்ள நம்பிக்கைக்கும் கதை முழுக்கவே எந்த வித முகாந்திரமும் இருப்பதாக படவில்லை எதிர்பாராமல் கிடைக்கும் உதவிகளை தவிர. இது மட்டும் போதுமா? கதையில் முக்கியமான திருப்பு முனைகளோ கதைக்கருவை ஒட்டிய சாத்தியக்கூறுகளோ இல்லாமல் இருப்பது ஒருவித வெறுமையை ஏற்படுத்துகிறது. இதைத்தான் கதாசிரியர் எதிர்ப்பார்த்தாரோ? அப்புறம் அந்த நம்பிக்கை? அதை எங்கே சேர்ப்பது?

நாகப்ரகாஷ் அவர்கள் யாரிடம் இந்த கதையை கொடுத்து படிக்க சொன்னார் என்று தெரியவில்லை. இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர்களோ அல்லது வாசிக்கும் அனுபவம் இல்லாதவர்களோ இந்த கதையை எந்த அளவுக்கு ஆழமாக அணுகுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அது அவர்களின் குறையும் அல்ல. அவர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை. “அதனாலென்ன?” என்ற ஒரே வார்த்தையில் மாபெரும் காவியத்தையும் கடந்து விடுவார்கள். பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். பிச்சையானாலும் உயர் தர உணவையே பரிமாற வேண்டும். இதில் இரண்டாவதை தன் தனி கைமணத்துடன் செவ்வனே செய்திருக்கிறார் ஆசிரியர் என்று தான் சொல்ல வேண்டும் ‘இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்!’ என்ற ஏக்கத்துடன்.

வாய்ப்புக்கு நன்றி நாகப்ரகாஷ் மற்றும் ஜெ!!

முரளி சேகர்

அன்புள்ள ஜெ

திரு நாகப்பிரகாஷ் அவர்கள் இதற்குள் கோபித்துக்கொண்டு ஜெயமோகன் நல்ல எழுத்தாளர்தான், ஆனால் சில முரண்பாடுகள் உள்ளன என ஆரம்பித்து நாளுக்குநாள் டோஸ் ஏத்தி ஜெயமோகன் ஒரு அறிவிலி என்று ஆரம்பித்திருப்பார் என நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு கடிதம். நமக்கென்ன? ஊதி வைப்போம். இது முதலில் நம்மைநாமே சரியாக பார்த்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விதான்.

சிறுகதை என்பது அதன் உச்சப்புள்ளியில் நின்று மேலே வாசகனைச் செல்லவிடும் ஒரு வடிவம். அப்படி இந்தக்கதையை எடுத்துக்கொண்டால் அந்த இறுதி உச்சம் அம்மாவின் நிலைதான். ஆனால் கதை அதை நோக்கிச் செல்லவில்லை. வேறு இரண்டு புள்ளிகளைச் சொல்லி அதன்பின் அம்மாவைப் பற்றிச் சொல்லவருகிறது. இது மூணுசீட்டு விளையாட்டு போல இருக்கிறது. இதுதான் கதை என ஒன்றைச் சொல்கிறார். இல்லை இதுதான் கதை என இன்னொண்ணைச் சொல்கிறார். இல்லை இதான்யா கதை என மூன்றாவதாக ஒரு கதையைச் சொல்லி முடிக்கிறார். இந்த விளையாட்டு வாசகனுக்குச் சலிப்பூட்டுகிறது

உண்மையில் கதை மிகவும் உணர்ச்சிகரமானது. பேஷன் தேவைப்படும் கதை அது. ஆனால் இப்படி மூன்று பகுதிகளின் இணைப்பாகக் கதை இருக்கும்போது அந்த உணர்ச்சியில் கதை குவியவில்லை. இப்படி வாசகனைச் சிதறடிப்பதெல்லாம் நாவலில் சாத்தியம். ஏனென்றால் கடைசியில் நாவல் அனைத்தையும் ஒரு வடிவத்துக்குள் கொண்டுவந்துவிடும். சிறுகதைக்கு அந்த வசதி இல்லை. நீண்ட சிறுகதையில் அல்லது குறுநாவலில்கூட இதைச் செய்யமுடியுமோ என்னவோ. இந்த மூன்று வாழ்க்கைச் சந்தர்ப்பங்களையும் ஒன்றாகப்பொருத்தி வாசித்து ஒரு வாழ்க்கையை பார்ப்பதில் எனக்கு அதாவது வாசகனுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது? அதுதான் முக்கியமான கேள்வி

சிறுகதைக்கு ஒரு கிளாஸிக் வடிவம் உண்டு. அதில் சிறுகதையை எழுதிப்பார்க்க முயல்வதுதான் நல்லது. எந்தவகையிலும் கருவோ உணர்ச்சியோ அதுக்குள் நிற்கவில்லை என்றால் அந்தத்தேவைக்காக மெல்ல அந்த வடிவத்தைக் கடந்துசெல்லலாம். அப்போதுதான் அந்தவடிவம் நியாயப்படுத்தப்படும். தெரியவில்லை, இது என் கருத்து

எம்.செல்வக்குமார்

எழுதியவர் : (26-Mar-19, 6:26 pm)
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே