சங்க இலக்கியத்தில் பெண்ணியம்

இலக்கியம் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது, வாழ்க்கையின் பிரதிபிம்பம் என்பது ஓரளவே உண்மை. ஏனெனில் வாழ்க்கையில் சாதாரணமாக நடக்க முடியாததைக்கூட, ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காகக் கற்பனையாக வாழ்க்கையில் நடப்பதாக இலக்கியத்தில் குறிப்பிடுவதும் உண்டு. எனவே இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மொழிச் சமூகத்தின் வாழ்வு முறையை முழுவதும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. அதாவது இலக்கியம் காட்டும் வாழ்க்கை இலட்சிய நோக்கு உடையது, அது படைப்பாளியின் வாழ்வுணர்வுகளையும் ஓரளவு பிரதிபலிக்கும்.

அண்மைக் காலத்தில் பேசப்படுகிற பெண்ணியப் பார்வையில் பெண்கள் எப்படியெல்லாம் சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பது முதல்படி. அதற்கு முன்னோடியாக இங்கு சில கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

பெண் - மனைவி கணவன் சொல் தட்டாதவளாகவும் அவனால் வாழ்க்கை நோக்கம் கற்பிக்கப் பட்டவளாகவும் சங்கக் கவிதை உண்டு.

"வினையே ஆடவர்க்கு உயிரே
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தவர் தாமே." (குறு.135)

என்ற வரிகள் கணவன், மனைவிக்குக் கடமையை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

மனைவி வந்தபின் குடும்பத்தின் செல்வம் பெருகியது என்ற கருத்தை குறுந்தொகை,

"ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென
இனி விழவாயிற்று என்னும் ஊரே." (குறு.295)

ஒரு பசு மாடு வைத்திருந்த சாதாரண குடும்பத்தில் மருமகள் வந்தவுடன் குடும்பம் திருவிழா போலப் பலரும் வந்து விருந்துண்டு போகும் இடமாக மாறிவிட்டது என்று குறிப்பிடப்படுகிறது.

வாழ்க்கை எப்போதும் இன்பப் பூங்கா இல்லை. துன்பம் ஏதோ வடிவத்தில் வரும். சங்க இலக்கியத்தில் கணவனுடைய பரத்தமை ஒழுக்கமே பெண்ணின் துன்பத்துக்கு ஒரு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் மேலே எடுத்துக்காட்டிய பாடலில் (குறு.295) ஊரார் அவளைப் புகழ்வதற்குக் காரணம், தலைவன் அப்படிப்பட்ட குடும்பத்தில் அக்கறை இல்லாமல் நன்றாக உடுத்திக் கொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவதையும் கூறுகிறது.

"உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணிப்பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே."

என்று ஊர், தலைவன் பரத்தமை நடத்தையைச் சுட்டிக் காட்டுகிறது.

பெண்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதிலும் பெண்ணிய உணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சில பாடல்களில் அதைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பெண்களையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.

"மகிழ்நன் பரத்தமை
நோவென் தோழி கடன் நமக்கு எனவே." (கலி.75.32-3)

எனக் குடும்பக் கடமைகளுக்காகப் பரத்தமையைப் பொறுத்துக் கொள்ளும் பெண்களும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் தான் மட்டும் அல்லாமல், பெண்ணாய்ப் பிறப்பதே துன்பமானது என்று கூறும் பெண்களும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

தலைவன் காலையில் எழுந்தவுடன் தேரில் புறப்பட்டு பரத்தையர் வீட்டுக்குச் செல்லும் அளவுக்கு பொருள் வளம் உடையவன். அவன் மனைவியோ மனம் வருந்தியதோடு பெண்பாலராய்ப் பிறப்பதே துன்பமானது என்று வருந்துகிறாள்.

"காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவது அம்மஇத் திணைப்பிறத் தல்லே." (குறு.45)

என்று குழந்தையைப் பெற்ற ஒரு பெண் துன்புறுகிறாள்.

எனவே பெண்ணாய்ப் பிறப்பதே பாவம் என்று புலம்புகிறாள். அதற்கு முக்கியக் காரணம் அவளுடைய தாங்க முடியாத துன்பம்தான். அதைப் பாடியவர் ஆலங்குடி வங்கனார் என்ற ஆண்பாற் புலவர்.

பொதுவாகப் பெண்கள் தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள் என்ற கருத்து உண்டு. சங்க இலக்கியத்தில் வெள்ளிவீதியார் பாடிய இரண்டு நற்றிணைப் பாடல்களிலும் காம உணர்வைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையே என்று பெண்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளனர்.

"யாமம் உய்யாமை நின்றன்று
காமமோ பெரிதே களைஞரோ இலரே." (நற்.335)

நள்ளிரவில் என் உயிர் நின்றுவிடும் போல உள்ளது. காம நோய் பெரிதாகும், அதை நீக்குவார் யாரும் இல்லை என்கிறார்.

"கனைஇருங் கங்குலும் கண்படை இலனே
அதனால் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என்அவலம்உறு நெஞ்சே." (நற்.348)

நள்ளிரவில் தூக்கம் வரவில்லை. அதனால் உலகம் என்னோடு சண்டை போடுகிறது. நான் உலகத்தோடு சண்டை போடட்டுமா? என்பது அவருடைய இன்னொரு பாடல்.

குறுந்தொகையில் இன்னொரு தலைவி (பா.108) கார் காலம் வந்தும் தலைவன் வராததால் இறந்து விடுவேன், "உய்யேன் போல்வன் தோழி யானே" என்று கூறுகிறாள்.

தலைவன் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்லும் போது கார் காலத்தில் திரும்பி வந்துவிடுவதாகச் சொல்லிச் செல்வது உண்டு. அந்த நிலையில் கார் காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் ஒரு தலைவி இது உண்மையான கார் காலம் இல்லை. அதாவது கார் காலத்துக்கு அடையாளமான கொன்றைப் பூக்கள் பூத்துள்ளன; அதனால் கார் காலம் வந்துவிட்டது என்று சொன்னாலும் நான் நம்பமாட்டேன். ஏனென்றால் என்னுடைய தலைவர் பொய் சொல்லமாட்டார் என்று கூறுவதாக ஒரு பாடல் உள்ளது.

"புதுப்பூங்கொன்றைக் கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேன்அவர் பொய் வழங்கலரே." (குறு.21)

அதாவது கார் காலமாக இருந்தால் அவர் திரும்பி வந்திருப்பார் என்று வாதாடுகிறாள் என்றால், அது அவள் தலைவன் மேல் வைத்த ஆழ்ந்த நம்பிக்கையைப் புலப்படுத்துகிறது.

இன்னொரு தலைவி, காலம் அல்லாத காலத்தில் பெய்த மழையைக் கார் காலம் என்று கருதி பூக்கள் பூத்துவிட்டன; அந்தப் பூக்களை முட்டாள் என்று கூறுகிறாள் என்றால், அவள் தலைவன் மேல் வைத்திருந்த அதீத நம்பிக்கையை நாம் புரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியத்தில் இதுபோன்று பலவித உணர்வுகளை உடைய பெண்கள், உளவியல் நோக்கில் படைத்துக் காட்டப்பட்டிருக்கிறார்கள். அவை நீண்ட ஆய்வுக்கு உள்பட்டன.

முனைவர் செ.வை.சண்முகம்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

எழுதியவர் : (26-Mar-19, 7:15 pm)
பார்வை : 63

மேலே