பாட சாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு

#பாட சாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு..!

"அ" என்றும் "ஏ" என்றும்
அரிச்சுவடியும்
சொல்லி சொல்லி படித்தாய்
நீ பத்து விரல் தொட்டு
கூட்டியதெல்லாம் - என்றும்
பிழையற்ற கணக்காய்..!

ஒப்புவித்தல், பாட்டு
ஓவியம் என்று
உன்னை மிஞ்சியவர் யார்?
உந்தன் திறம் கண்டு
எங்களின் உள்ளம்
துள்ளி மகிழுது பார்..!

கன்றுக்குட்டி, புள்ளி
மானெனவே நீயும்
துள்ளித் துள்ளித் திரிந்தாய்
பள்ளிச் சிறைக்கு
பூட்டுக்கள் இட்டபின்
பட்டாம் பூச்சியென பறந்தாய்..!

கண்ணாம்பூச்சி ஆட்டம்
பல்லாங்குழி என்று
நித்தம் ஆடிக்களித்தாய்
மட்டை பந்து கொண்டு
ஆடுகிறேன் என்று
சன்னல்களை உடைத்தாய்..!

விடுமுறை நாளினில்
உந்தனின் சேட்டைகள்
கண்டு கண்டு ரசித்தோம்
பள்ளி விடுமுறை
நாளும் முடிந்திட
உண்ணுறக்கம் சகியோம்..!

தூங்கி கிடந்தவன்
துன்பத்தின் வாயிலில் - அந்த
இருள் ஏன் உனக்கு..?
வெற்றிப்படிகளில் ஏறிட நீயும்
தூக்கத்தினையெல்லாம் விரட்டு
சோம்பலை தீயிட்டு பொசுக்கு..!

செல்லமே நீ
ஆடிகளித்தது போதும்
தூங்கி கிடந்ததும் போதும்
பாடசாலை இன்று
வாவென்றழைக்குது
கண்மணியே கண் திறவாய்
பள்ளி செல்ல வேணும்எழுவாய்..!

-சொ.சாந்தி-

எழுதியவர் : சொ.சாந்தி (29-Mar-19, 9:18 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 168

மேலே