சிதம்பரம்

30-Mar-௨௦௧௯

அறிவில் ஆலமரம்..
நட்பில் சந்தனமரம்
துணிவில் தேக்குமரம்...
சுறுசுறுப்பில் பம்பரம்...
அது... சிதம்பரம்....

உலகை இவர் பார்க்கும்
விதம் ஒப்பற்றது...
நட்பை இவர் நேசிக்கும்
விதம் அளவற்றது...
பதில்கள் சொல்லும்
விதம் இணையற்றது...
இது சிதம்பரத்தின்
வெற்றி ரகசியம்...

புத்திசாலியாய் இருந்தாலும்
தினத்தந்தியைக் கூட
சரியாய்ப் படித்தால்தான்
செய்திகள் சொல்ல முடியும்...
பாடங்கள் தினத்தந்திப்
பேப்பர் போல் எளிதாய்ப்
புரிந்திருக்கிறது இவருக்கு...
அதை ஒழுங்காய்ப்
படித்திருக்கிறார் தேர்வுக்கு...

கற்பூர புத்தி் இவருக்கு என
அடித்துச் சொல்லலாம்...
அபார சக்தி அதற்கு என்று
அடிக்காமல் சொல்லலாம்...
பிரமன் சற்று பிரயத்தனப்
பட்டிருப்பான் போலும்..
இவருக்கு மூளை செய்ய...

படிக்க வேண்டிய காலத்தில்
புத்தகங்களைக் கீழே வைக்காமல்
படித்ததால் மதிப்பெண்கள்
மேலே மேலே இவரைத்
தேடி வந்தது...
மதிப்பிற்குரிய வேலை
இவரை நாடி வந்தது..

வல்லநாடு.. ஊரின் பெயரை
நல்லநாடு என மாற்றி விடலாம்..
சிதம்பரம் இங்கு பிறந்ததால்...
அழிரப்பர் அதிகம் இல்லாமல்
பென்சில் பேனாக்கள்
அதிகம் கொண்டு
சிதம்பரம் படித்ததாக
பள்ளியின் புள்ளிவிவரம்
ஒன்று சொல்கிறது.. பாடங்களை
வாசித்துச் சுகித்த
வாசுகி இவர்...

தமிழ் இனிக்கும்...
இவர் பேசும் தமிழ்
இன்னும் இனிக்கும்..
இவர் எழுதும் தமிழில்
ஏதோ ஒன்று இருக்கிறது...
அதில் கிழக்கின் வெளிச்சம்
எப்போதும் தெரிகிறது...
தமிழை வாசிப்பதில்..
சுவாசிப்பதில்... கட்டுப்பாடு
இல்லாத சிட்டு இவர்...

இவர்தம் பெற்றோர்
நல்ல ஆசிரியர்கள்..
அப்பா தமிழாசிரியர்..
அதனால் சிதம்பரம்
தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால்
குடித்து வளர்ந்திருக்கிறார்...

பேராசிரியர் வேலைக்கு
சிதம்பரம் வந்திருந்தால்
நல்லாசிரியராய் இருந்திருப்பார்...
புத்திசாலிப் பொறியாளர்களை
நிறைய உருவாக்கி இருப்பார்...
வழக்கறிஞராகி இருந்தாலோ
இவரது வழக்காடலில்
நீதிமன்றங்கள் ஆடி இருக்கும்...

அறிவும் திறமையும்
இவருக்குத் தண்ணீர்
பட்டபாடாய் இருக்கிறது...
குடிதண்ணீர் வடிகால் வாரியம்
அதைப் பயன்படுத்திக் கொள்கிறது...
இவர் கட்டிய மேல்நிலை
நீர்த்தொட்டிகள் இவரது
மேல்நிலை சாதனைகளைப்
பெருமையுடன் சொல்கிறது...

விவாதங்களில்...
இவர் எடுத்து வைக்கும்
வாதங்கள்... அருமை...
அபாரம்.. ருசிகரம்... அதில்
வாதி அவரது அறிவு புலப்படும்..
எதிர்வாதி பிறரின் அறிவு பலப்படும்...

பூமியின் மையப்புள்ளி
தில்லை சிதம்பரத்தில் இருக்கிறது..
ஜிஸிஇ குழுவின் மையப்புள்ளி
நெல்லை சிதம்பரமாய்
இனிதாய் இருக்கிறது...

அழகிய சோலை
சிதம்பரத்தின் குடும்பம்..
அது இன்னும் அழகாகிறது..
அழகான அறிவான அன்பான
இன்னொருவரின் வரவால்...
அந்த வரவு ஒரு சுப்ரபாதம்
தெரிந்த பெண்பால்...
அவர் கட்டிப்போடுவார் அன்பால்...
ஜீன்ஸ் போட்ட கன்றுக்குட்டி
அழகாய்ச் சேலைகட்டி
சிதம்பரத்தின் வீட்டிற்கு வர
கால்விரலில் போடும் அழகு மெட்டி..
வல்லரசு நாடு அமெரிக்காவிற்கு
வல்லநாட்டார் நன்றி சொல்கிறார்...

வல்லநாடு வழி ஓடும்
வற்றாத பொருநை போல்
வற்றாத ஞானம் கொண்டு
வசந்தங்கள் வாழ்த்த
வானம் வசப்பட...
அன்புத் தோழி சிதம்பரம்
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
👍😀🌹🌷💐🍰🎂🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (31-Mar-19, 6:17 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : sithambaram
பார்வை : 207

மேலே