நீ தான் என்றும் என் சந்நிதி

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி... கண்ணதாசனின் கடைசி வரிகள், கேட்கும் போதெல்லாம் நித்யா தன்னை அறியாமல் அழுது விடுகிறாள். இந்த வரிகளில் காதல் சொட்டுகிறதல்லவா அதனால் தான் அவள் கண்களிலும் கண்ணீர் கொட்டுகிறது. இதயம் பதபதைக்கிறது. ஓர் ஆணின் பாசம் இவ்வளவு தூய்மையானதா? வலிமையானதா? பித்துப்பிடிக்கும் அளவுக்கு நேசம் கொள்வானா ?ஆயிரம் கேள்விகள் தோன்றிய பொழுதிலே மறைந்தன. மூன்றாம் பிறை பாலுமகேந்திராவின் கற்பனை தான் ஆனால் அது ஒரு காவியம் . கற்பனை தாண்டிய ஒரு காதலை உணர்ந்தவள் நித்யா. மீண்டும் அதே பாடலின் வரிகள் அவளை சஞ்சலப்படுத்தின. கன்னி மயிலென கண்டேன் உனை நானே...
ஆனால் அவள் அவ்வாறு அல்ல இருந்தும் அவளை அவன் கைவிடவில்லை என்று நினைக்கையில் கொட்டிய கண்ணீரெல்லாம் குளம் கட்டி நின்றது. ஊர் அடங்கிய வேளை, தன் வேலைகளையும் முடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்த நித்யா கண்ணை மூடிக்கொண்டு கேட்ட பாடல் ,அலை அலையாக நினைவுகளை கரை தட்ட செய்தது. வேதனை நெஞ்சை பிளந்தது, கண்களை இறுக மூடிக் கொள்கிறாள்.

காட்டு வழிப்பாதை நிழலோடு கைகோர்த்து நடக்கிறேன். என் நிழலே என்னை பயமுறுத்துகிறது. அது சிங்கமா? புலியா? இல்லை வேறு ஏதாவதா? இல்லை இல்லை நிச்சயமாக அது மிருகமே தான். அது என்னை தன் கோரப்பசிக்கு இரையாக்கி விட்டதே. இரத்தம் சிதறிய என் முகம், பார்க்க சகிக்கவில்லை மிக அறுவறுப்பாக உணர்கிறேன். இரு கைகள் என் முகத்தை கழுவி விடுகின்றன அருகில் அமர்ந்து ஒரு உருவம் கண்ணீர் விடுகிறது அந்த விழி நீரிலே நான் உயிர்த்தெழுகிறேன். திசை மாறுகிறது ,அந்த காடு இப்போது பூங்காவாக மாறுகிறது. மர நிழலிலே என் மடியில் ஒரு குழந்தை அயர்ந்து உறங்குகிறது .ஆனால் ஏன் இப்படி? அதன் கால்கள் எங்கே? முடமான குழந்தையை எதற்கு மடியில் வைத்திருக்கிறாய் என்று ஒரு குரல் கேட்கிறது. அது என் குழந்தை என்கிறேன். வேண்டாம் தூக்கி வீசி விடு என்றது அதே குரல். என் குழந்தையை தூக்கி வீச வருகிறார்கள். முடியாது என் உயிரை பிரியமாட்டேன் என என் குழந்தையை மார்போடு அணைத்து கொண்டு ஓடுகிறேன்.

சோபாவில் கண் மூடி படுத்திருந்த நித்யா தனது கால் சட்டென கீழே விழ, பதறி அடித்துக்கொண்டு எழும்பிச்சென்று தன் அறைக்கதவை திறக்கிறாள் கார்த்திக் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருக்கிறான். அருகில் சென்று அமர்ந்து அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருக்கிறாள். சிறிது நேரம் கழித்து அவனது போர்வையை சரி செய்ய எழுந்தவள் மெத்தை மேல் கை வைத்து தடவிப் பார்க்கிறாள் அவனது கால்கள் இல்லையே நினைக்க நினைக்க மனம் நெருப்பாய் கொதிக்கிறது. தலை லேசாக வலிக்கிறது.

நாளையோடு கார்த்திக் நித்யாவை திருமணம் செய்து ஓராண்டு ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நித்யா அவனுக்கு தாயாகவே மாறிவிட்டாள்.

மூன்று வருடமாக காதலித்து தன் அப்பாவின் சம்மதத்தோடு நித்யாவை கரம் பிடிக்க இருப்பதை நினைத்து சந்தோசத்தின் உச்சியில் இருந்தான் கார்த்திக் அப்போது தான் அந்த கார் விபத்து. அவனது இரண்டு கால்களையும் இழந்தான். நித்யாவின் அம்மாவும் அப்பாவும் பிடிவாதமாய் இருந்தனர் நிச்சயித்த திருமணம் நின்றதாக இருக்கட்டும் எங்கள் மகளுக்கு இந்த நிலையில் உங்கள் மகனை எப்படி கட்டிக் கொடுப்பது என்றார்கள். கார்த்திக்கின் தந்தை மறு வார்த்தை பேசவில்லை. நித்யா தான் பேசினாள். எந்த நிலையிலும் கார்த்திக் தான் எனக்கு கணவன் என்றாள்.
உனக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது இந்த முடவனை திருமணம் செய்து கொண்டு எப்படி வாழப்போகிறாய் என்றார் நித்யாவின் அப்பா. அப்பா! இதோடு நிறுத்தினால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும் என்றாள் நித்யா. தன் உயிரில் ஒரு பாதியை குறையாய் சொல்லி விட்டார்கள் என்று எண்ணி அழுதாள் . முடிவாகச் சொல்கிறேன் இனி என் வாழ்நாள் முழுவதும் அவனோடு தான். நிச்சயித்த நாளில் எங்களது திருமணம் நடக்கும் என்றாள் நித்யா. திருமணமும் நடைபெற்றது.

எழுந்து நடமாட முடியாமல் நான் இருக்க என்னை ஏனடி உன் பெற்றோர் பேச்சை மீறி ஏற்றுக்கொண்டாய்? கார்த்திக்கின் கண்களை நேராக பார்த்து, உடலில் ஒரு பகுதியை தானே இழந்தாய் இதுவே திருமணத்திற்கு பின் ஏற்பட்டு இருந்தால் நான் உன்னை விட்டு செல்வேனா? கற்பை இழந்த என்னையே நீ மனைவியாக ஏற்க ஆசைப்பட்டாய். உன் காதலுக்கு முன்னே நான் சற்று குறைவு தான் என்றாள் நித்யா. அதைப் பற்றி பேசக்கூடாது என்று பல முறை கூறி விட்டேன் உன்னிடம் ஏன் மறுபடியும் அதை நினைத்துக்கொள்கிறாய் என்று கேட்டான் கார்த்திக். நீ தான் என்னை நினைக்க வைக்கிறாய் நான் உடலால் களங்கப்பட்டவள் அந்த கயவனால் சீரழிக்கப்பட்டவள் ஒழுக்கம் சொல்லி தர வேண்டிய இடத்திலிருந்த நம் கல்லூரியின் தரமான பேராசிரியர் தரம் கெட்டு என் மானத்தை வேட்டையாடி விட்டான் . அது தெரிந்த போதும் நீ என்னை வேண்டாம் என்று செல்லவில்லையே என் வீட்டில் கூட இதைப்பற்றி சொல்லாமல் எனக்கு உன் மனைவி அந்தஸ்து தர நினைத்தாய். அது ஏனடா? என்றாள் நித்யா. என் காதலி எனக்கு கைக்குழந்தை அவளுக்கு சிறிய காயம் வந்தது அதற்காக அவளை குப்பைத்தொட்டியில் வீசி விடுவேனா இனி அவ்வாறு ஏற்படாமல் கவனமாக பார்த்துக்கொள்வேன் அவ்வளவு தான். அதே போலத்தான் என்ன தடை வந்தாலும் காலம் முழுதும் உன்னோடு தான் என் வாழ்வு என்று கார்த்திக்கின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

ஒரு நொடிக்குள் எல்லாம் நித்யாவின் கண் முன்னே நிழலாடிச் செல்கின்றன.  கணவனை குழந்தையாக நினைத்து கவனித்து கொள்ளும் நித்யாவிற்கு தன் கற்பு ஒரு குறையாக தெரிந்தது. கார்த்திக்கிற்கு தன் கால்கள் குறையாக தெரிந்தது. ஆனால் அவர்கள் காதலுக்கு இது எதுவுமே தெரியவில்லை. மறுபடியும் நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி கேட்டுக்கொண்டே உறங்குகிறாள் நித்யா.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (3-Apr-19, 10:22 am)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
பார்வை : 355

மேலே