காதல் உணர்வு வர்ணனை - -- - -சேக்கிழாரின் திறம்
காதல் உணர்வு வர்ணனை - - - - ( சேக்கிழாரின் திறம் )
*********************************************************************************
( திருத்தொண்டர் புராணம் (அதனில் ) தடுத்தாட்கொண்ட புராணம் )
************************************
திருவாரூரில் ஆரூரானை வழிபட சுந்தரர் செல்கிறார் அவர் வழிபட்டு வெளிவருகையில் பரவையார்
உள்ளே செல்லும் வேளையில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க நேர்ந்தபோது பரவையாரின்
மனம் அழகனான சுந்தரரை எண்ணி மையல் கொள்கிறாள் சுந்தரரின் நினைவுடன் தன் மாளிகை
வந்தடைகிறாள் வந்தபின் மலரணையில் வீழ்கிறார் அச்சமயத்தில் தோழியர்கள் செய்கைகளையும்
பரவையாரின் நிலையும் பின்வருமாறு புனைகிறார்
" ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர் நறுந்திவலை அருகுவீசி
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்துமட வார்செய்த இவையுமெல்லாம்
பேரழலின் நெய்சொரிந்தால் ஒத்தனமற் றதன்மீது சமிதை என்ன
மாறனும் பெருஞ்சிலையின் வலிகாட்டி மலர்வாளி சொரிந்தான் வந்து "
(தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் எண் = 319 )
இச்செய்யுள் பாடலில் சுந்தரரை கண்டா பரவையாரின் ஆற்றாமையை அருமையாக
சேக்கிழார் பெருமான் வர்ணிக்கிறார் . அதன் பொழிப்புரை :=
நறுமணம் கமழும் சந்தனக் குழம்பை பூசியும் அதன்மேலே மேலும் குளிர்விக்க பன்னீரை
அங்கமெங்கும் மழைத்துளிபோல் தெளித்தும் அருகு எனும் விசிறியால் விசிறியும் குளிர்ச்சியூட்டும்
குளிர் குணத் தளிர்களை அதாவது இலைகளை இட்டும் பரவைக்கு தோழியர் பணிவிடை செய்தனர்.
இப்பணிவிடையெலாம் சுந்தரரைக் கண்டபின் ஆற்றாமையில் தவிக்கும் பரவைக்கு வேறுவிதமான
உணர்வுகளை தந்தது தோழியர் பணிவிடையெல்லாம் அவளுக்கு ஏற்க்கனவே மூண்ட பெருநெருப்பில் நெய்யை ஊற்றுவதற்கொப்ப மேலும் அதன்மீது சமித்துக்குச்சிகளை இட்டு மேலும்
அக்காதல் தீ வளர உணவிட்டதுபோல் பரவை உணர்ந்தாள் . அதற்கேற்ப கட்டுடல் மன்மதனும்
தன்னுடைய வில்லின்வழி காம மலர்களாய் அம்புகளை மென்மேலும் எய்தான் . இதுவே
சேக்கிழாரின் சாரம் . அந்தக் காலத்திலையே இவ்வாறு வர்ணிக்கும் நபர்கள் இருந்தனர் என்றபடி
வியக்கத் தோன்றுகிறது
அவளது காதல் எனும் மோகத்தை பெரு நெருப்பு என்றும் . அந்த நேரத்தில் தோழியர்
செய்கைகள் அனைத்தும் அப்பெரு நெருப்பிற்கு நெய் ஊற்றி வளர்ப்பதுபோலவும் அதன்மேலும்
அத்தீ மேலும் வளர சமித்து எனும் குசிகளை அதனுள் இடுவதுபோலவும் இருந்தது என்கிறார் .
அவ்வாறிருக்கையில் மேலும் காம உணர்வின் ஆற்றாமை வளர மன்மதன் தன் அம்புகளை காம
மலர்களாய் எய்தான் என்றும் கூறுகிறார். இப்பகுதியில் சேடியர் பரவைக்கு இடும் பணிவிடைகளை
சொல்லும்போது அவரது கற்பனை பளிச்சிடுகிறது . மேலும் காம உணர்வு எப்படி இருக்கும். அதாவது
தலைவன் தலைவி ஆற்றாமை எப்படியிருக்கும் அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பதை
அவர் சொல்லிய விதம் என்னை வியக்க வைக்கிறது
(அடுத்த செய்யுள் பாடல் தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் எண் = 320 )
" மலரமளித் துயிலாற்றாள் வருந்தென்றல் மருங்காற்றாள் மங்குல் வானில்
நிலவுமிழும் தழலாற்றாள் நிறையாற்றும் பொறையாற்றா நீர்மை யோடும்
கலவமயில் எனஎழுந்து கருங்குழலின் பரமாற்றாக் கையாளாகி
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்தாற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் "
சேடியர் செய்கைகளுக்கு பின் அவளது நிலையினை மேலும் வர்ணிக்கிறார் சேக்கிழார்
அதன் பொழிப்புரை =
காமனவன் அம்புகள் அவளை துன்புறுத்த அவளது நிலையை மேலும் வர்ணிக்கிறார் இவ்வாறு :=
மலர்ப்படுக்கையில் படுத்தும் உறங்கம்கொள்ள தவருகிறாள் . நிலா முற்றத்து உலவும்
தென்றலும் சுகிக்கவில்லை. வானிடை குளிர்நலவு தரும் குளிர்ச்சியும் அவளுக்கு தழல் போல்
உணர்வைத்தருகிறது . பெண்மையின் நிறையையும் சுகிக்கமுடியவில்லை . மலரணை கொண்ட
அவளோ தோகை மயில்போல் எழுந்து தன் கருங்கூந்தலின் பாரத்தையும் தாள முடியாதவளாகிறாள் .
இலவம் பஞ்சு ஒத்த சிவந்த வாய் நெகிழ்ந்து பின்வருமாறு புலம்பலானாள் என்கிறார் சேக்கிழார் .
இதனில் பரவைக்கு மலரணை முள் படுக்கையாகவும் தென்றல் அனல் ஆகவும் , குளிர் நிலவொளி
தழல் ஆகவும் பெண்மையின் நிறையில்லா நிலையும் கருங்கூந்தல் கூட பாரமாய் இருப்பதையும் அழகாக
வர்ணிப்பது என்னைக் கவர்ந்தது . பிற்கால சரித்திர எழுத்தாளர்கள் சாண்டியல்யன் போன்றோருக்கு
இதன் தாக்கம் இருந்திருக்கும் என்பது திண்ணம் .அவரது கடல் புறா மற்றும் ராஜமுத்திரை நாவல்களில் இதுபோன்ற வர்ணனைகளை காண முடியும் .