உளநலன்----------------ஏப்ரல் 6, 2019

மனநலம் குறித்து பேச இது சரியான தருணமா என தெரியவில்லை. ஆனால், பேச வேண்டும் என தோன்றியது.

நண்பர் வி அவர்களின் கேள்வி மற்றும் தங்கள் பதிலிருந்து இதை தொடங்குகிறேன்.
திருமணத்தை பற்றி முடிவு செய்ய இயலாமல், யாரிடம் கேட்பது எனவும் தெரியாமல் உங்களிடம் கேட்கிறார். யாரேனும் மனோதத்துவ நிபுணரிடம் இதை கேட்க வேண்டுமா என்ற குழப்பமும் அவருக்குள்.

இதுப்போன்ற, இக்கட்டான சூழ்நிலைகளில், தெளிவு தேடி மற்றவர்களிடம் பேச வேண்டியது மிக அவசியம். ஒரு குரு அல்லது mentor. அது நண்பனாக இருக்கலாம், உறவினராக, உங்களைப்போல் role models etc. அப்படி, யாருடனும் பேச வாய்ப்பில்லை என்றால் உளவியலாளரிடம் பேசுவதிலும் தவறில்லை.

இங்கு, மன நலம் குறித்த சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

உகவன், மாயிழைபோன்ற உள்ள நிலைகள் மனநலன் சார்ந்த விஷயம் அல்ல. அவை NORMAL.
தங்களது அந்த நிலையை தாங்களே ஏற்பதில் உள்ள சிக்கல்களையும், அந்த நிலையுடன் இந்திய சமுகத்தை / குடும்பத்தை எதிர்கொள்வதில் உள்ள அழுத்தங்களையும், அதனால் ஏற்ப்படும் உள்ள கொந்தளிப்பு போன்றவற்றை அணுக மட்டுமே மனநலன் குறித்து எண்ண வேண்டும்.

நான் வாசித்த கடிதங்களில், தான் உகவர் என்ற சந்தேகம் எவருக்கும் இல்லை. ஆனால், பொதுவாக இந்த நிலையை இரண்டாக பார்க்கலாம். 1) ஆணாக ஆணை விரும்புதல். (உகவர்) 2) ஆண் உடலில் இருந்தாலும், தன்னை பெண்ணாக உணர்ந்து ஆணை விரும்புதல். (பால் அடையாள குழப்பம்). இதில் தெளிவில்லாதிருந்தாலும் உளவியளாரை அணுகலாம்.

மனநல மருத்துவர் vs உளவியலாளர்.
Psychiatrist vs Psychologist.
Psychiatrist: மனநல மருத்துவர் என்பவர் மருத்துவம் படித்தவர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த / மேன்படுத்த, ஆழ்ந்து உறங்க, விழிப்பாக இருக்க என மாத்திரைகள் தருபவர். மூளை என்ற உறுப்பின் செயல்பாட்டு குறைகளை களைய முயல்பவர்.

Psychologist: உளவியலாளர் என்பவர் நம்முடன் பேசுபவர். நமது எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டு, அவற்றை நாம் புரிந்துக்கொள்ள உதவுபவர். எதிர்மறை எண்ணங்கள், அச்சங்கள், முன்முடிவுகள் என நமது உள்ள செயல்பாடுகளை சீராக்க முயல்பவர்.

நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த வித்தியாசம் தெரிவதில்லை. அவர்கள் முதலில் செல்வதே மனநல மருத்துவரிடம். ஆனால், மருந்து மாத்திரை என்பது மிக அவசியம் என்றால் மட்டுமே, உளவியலாளரின் பரிந்துரையில், உளவியல் சிகிச்சையின் ஒரு பகுதியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.

மனநலம் என்றால் என்ன?
உடலில் சிறு காய்ச்சல், தலைவலி முதல் புற்றுநோய் வரை வியாதிகள் வருகின்றன. உடல் ஊனம் போன்று சில குறைபாடுகளும் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே வார்த்தையில் நாம் குறிப்பிடுவதில்லை.
காய்ச்சல், தலைவலி போன்றவற்றை நாம் வியாதியாக கூட எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால், மனநலம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒரே அளவுகோலில் பார்க்கிறோம். மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களையும், சிறு உள்ள கொந்தளிப்பு உள்ளவர்களையும் ஒரே அளவுகோலில் வைப்பது அபத்தமானது. சமூகத்திற்கு இந்த புரிதல் வர நாள் ஆகும். குறைந்தது, மனநலம் சார்ந்த உதவி தேவைப்படுகிறவர்களாவது இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

வியின், / என் தொழில், எதிர்காலம் கருதி அப்படி ஒருவரை நாட நான் அஞ்சுகிறேன். / என்ற எண்ணத்திற்கு எனது பதில்:

அ) உளவியலாளர்களுடனான உங்கள் சந்திப்பு, பேச்சு, அனைத்துமே அந்தரங்கமானது. Fully confidential. சட்டம், உயிருக்கு ஆபத்து போன்ற சில அடிப்படை விலக்குகளை தவிர்த்து அனைத்து நிலையிலும் ரகசியம் காக்கப்படும்.

ஆ) இன்றைய அலுவலகங்கள், மனநலன் சார்ந்த உதவிகளை அவர்களே அளிக்கிறார்கள். எனது நிறுவனத்தின் வழியாக, (அவர்களுக்கு என் தகவல் தெரியாது, அவர்களின் செலவில்) நான் இலவசமாக உளவியலாளரிடம் பேசமுடியும்.

இ) நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையாவது எதாவது மருத்துவரை சந்திக்கிறோம். அதுப்போல் மட்டுமே இதுவும்.

அதனால், மனநல பாதிப்பே உருவாகியிருந்தாலும் அதனால் எதிர்காலம் எந்த வகையிலும் பாதிக்காது. உதவி நாடாமல் இருந்தால் தான் பிரச்சனை உருவாகும்.

ஒருவரது எண்ணங்கள், உணர்வுகள், செயல்களில் ஏற்ப்படும் சிக்கல்கள், அவரது அன்றாட செயல்பாடுகளை / அல்லது அவரை சார்ந்தோரை பாதித்தால் அதை மனநல குறைப்பாடு என கூறலாம்.
(சோகம் என்பது ஒரு உணர்வு என்றால், சில நாட்கள்/வாரங்கள் ஆகியும் அதிலிருந்து வெளிவர இயலாமல் இருப்பது சிக்கல். அதானால் அவர் உண்ணாமல், வேலைக்கு செல்லாமல் இருப்பது போன்றவை)
இந்திய சமுகத்தில், பத்தில் ஒருவர் ஏதோ ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்டுளார். இந்திய சமுகத்தில் மனநல குறைப்பாடு பற்றி “possible mental health epidemic” என குடியரசுதலைவர் குறிப்பிடுகிறார்.

மனநல குறைப்பாடுகள், அவற்றின் வகைகள் குறித்த ஒரு மோலோட்டமான சமூக புரிதல் மிகவும் அவசியம் . ஆனால், தமிழில் அத்தகைய தகவல்கள் குறைவு.
White swan foundation இந்த வகையில் ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்பு:


அடையாளப்படுத்தப்படாத பெரும் மனச்சிதைவு நோயினால் 45 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துக்கொள்கிறார்.
இவற்றில் 90% தற்கொலைகள் சரியான மனநல உதவியின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. ஆனால், நோய்க்கூறுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதலால் அவர்கள் உதவி ஏதுமின்றி, விரக்தியில் தற்கொலை வரை போகிறார்கள். நமது குடும்பத்தில் ஒருவரேனும் இப்படி ஒரு இக்கட்டை சந்தித்திருப்பார். சந்தித்துக்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு உதவி கிடைக்க வழி செய்வதே நாம் செய்யக்கூடிய பெரும் உதவி.

எப்படி, உங்களுக்கு தையல் தெரியும் என்பதால் இதயத்தில் ஓட்டை உள்ளவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டீர்களோ, அதேப்போல், பேசத்தெரியும் என்பதாலே அவர்களுக்கு உதவவும் தலைப்பட வேண்டாம். தவறான அணுகுமுறை மேலும் சிக்கல்களையே உருவாக்கும்.

உதவி கேட்கவும், உதவி பெறவும் சாதகமான சமுக நிலையை உருவாக்க மட்டும் முயல்வோம்.

பொருளாதார பிரச்சை: மனநலம் கொஞ்சம் செலவு அதிகமாகும் மருத்துவம். ஒரு உளவியலாளரடன் ஒரு சந்திப்பிற்கு (60-90 நிமிடங்கள்) குறைந்தது ₹1000 ஆகும். பல அமர்வுகள் தேவைப்படும் சிகிச்சையின் மொத்த செலவு மிக அதிகம்.
இதனாலேயே, இளவயதில் உதவி தேவைப்படுபவர்களுக்கு குடும்பஉதவி இன்றியமையாதது.

நமது எண்ணங்களுடன் ஒத்துப்போகும் உளவியாளரை கண்டுபிடிப்பதும் ஒரு சவால். இரண்டு மூன்று அமர்வுக்கு பிறகுதான் நமக்கும் அவருக்குமான புரிதல், இவரால் பயண் உண்டா என புரிந்துக்கொள்ள இயலும்.

இடைக்கால தீர்வு:
அ. சமூக புரிதல் எழுந்து வர காலமாகும். முதல் படியாக சவால்களை சந்திப்பவர்கள் / அவரை சார்ந்தோரேனும் இதைப்பற்றி கொஞ்சம் வாசித்து விஷயங்களை புரிந்துக்கொள்வது அவசியம்.
ஆ. இணையத்தில் பல peer group உள்ளன. அவை அனைத்துமே safe zone. மற்றவர் கேளி, இளக்காரம் செய்ய இடமில்லாமல், அதே பிரச்சனையை சந்திப்பவர்கள் மட்டுமே உரையாடும் தளங்கள். (Online forums, websites etc.) Reeditல், பிரத்தியேக subreddit எனும் உபகுழுமங்களில் தரமான தகவல்களும், உதவியும் கிடைக்கின்றன. தான் தனியாக இல்லை, இதே பிரச்சனையை சந்திக்கும் பலர் இயல்பக வாழ்கிறார்கள் என்பதே மிகப்பெரிய நம்பிக்கை. அவற்றில் இணைந்து நண்பர்கள் மற்றவர்களுடன் உரையாடலாம்.
நிறைவாக, மேலும் கேள்விகள் + தெளிவின்மை உள்ள நண்பர்கள், எவருடனேனும் பகிர/பேச விரும்பும் நபர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். Am not a professional. தீர்வளிக்க போவதும் இல்லை. குழப்பங்களை விளக்கி, உங்கள் நிலையை அனுக ஒரு வழிமுறையை எனது அனுபவங்கள் மூலம் அளிக்க முயல்வேன்.

அன்புடன்,
லாஓசி.

எழுதியவர் : (6-Apr-19, 6:08 am)
பார்வை : 54

மேலே