காத்திருக்கிறேன்

அன்பே
காலமென்ற பயணத்தில்
பதினாறு வயது பருவத்தில்
என் பார்வையில் நீ
முதன் முதலாய் தென்பட்டாய் --அதில்
இருவரும் பயணிக்க வேண்டிய
கட்டாயத்தை காலம் கொடுத்தது!!

முதல் முதலாய் நான் பேசினேன்
பதிலுக்கு நீயும் பேசினாய்

என்னைச் சுற்றி எத்தனயே
உறவுகள் இருந்தாலும் -- அவற்றுள்
உன் உறவே
அழுத்தமாய் இருந்தது!
அதனால்தான்
உன்மேல் விருப்பம் பிறந்தது!!

சின்ன சின்ன சண்டை
சிதறாத புன்னகை
சிமிட்டி பார்க்கும் காந்த கண்கள்
எல்லாம் என்னை
என்னென்னவோ செய்தது!!

என்னை மீறி
எங்கோ சுற்றித் திறிந்தேன்!
சுயநினைவை இழந்தேன்!!
அறியாத வயதில்
அதன் விவரம் தெரியவில்லை!!!

எல்லாம் உனக்கு சொந்தமென்று
வயது சொன்னது
எதுவும் உனக்கு சொந்தமில்லையென்று
வறுமை சொன்னது

வறுமையோ வரைந்து வைத்த
கண்காட்சி
வயதோ வன்முறையின்
அரசாட்சி
நெருப்பினை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் தைரியம் வந்தது

அதனால் உன்னை (அவளை)
பின் தொடர்ந்தேன்

தினந்தோறும் பார்க்க வேண்டி
தினம் தினம்
திடிர் மாற்றம் தோன்றியது!
உன்னை சுற்றியே அலைந்தது!!

திரும்பும் உன் பார்வையில்
விருப்பம் மேலும் மேலும்
தொடர்ந்தது...

கதை கதையாய் கண்கள் பேசியதால்
கற்பனையை வளர்த்தேன்
தானாக உன்னிடம் பேச
தடுமாற்றம் கொண்டேன்...

அழகாக உன்னைக் கண்டேன்
ஆசையை வளர்த்து நின்றேன்

எதிர்ப்பார்ப்புகளை வளர்த்தேன்
ஏமாற்றத்தினை அடைந்தேன்

உன்னோடு உறவை வளர்த்தேன்
உறக்கத்தோடு பகையை வளர்த்தேன்

சந்திப்பை ஏற்படுத்தினேன்
சாப்பாட்டினை மறந்தேன்

உன்னோடு ஜனனம் கொண்டேன்
என்னோடு மரணம் கண்டேன்

செய்வது முறையா என
தெரியாமல் -- முப்பொழுதும்
அதிலே மூழ்கிக் கிடந்தேன்!!

நம் பாதங்கள் நடக்கும்
பாதைகளை பதிவு செய்ய
நிழலின் காட்சிகளை
சாட்சியாக வைத்தேன்!!

இத்தனை வைத்தும் என்ன பயன்
உன் நெஞ்சில்
என்னை வைத்தாயா என்று
சந்தேகம் ஏற்பட்டது -- அதில்
நாட்கள் நடைப்போட்டது!!

நீ மட்டுமே எனக்கு
சொந்தமென்றபோது
நிஜந்தை அறிந்துக் கொள்ள
நிம்மதியில்லாமல் அலைந்தேன்...

அலையும் நெஞ்சம்
புரியும் முன்னே
நாட்களும் சரிந்தது

நேரில் கண்டு
நெருக்கம் கொண்டு
காதல் சாரல் வீசு என்றேன்! நீ
கண்களை மூடிக் கொண்டாய்!!

வெட்கம் என்று
நான் நினைத்தேன் -- அது
வேதனை என்று நீ நிருபித்தாய்!
முடிவை சொல்லாமலே
நெருப்பாய் என்னை சுட்டெரித்தாய்!!

இதுப்போல் இன்னல் நீ
அடைவாய் என்று
தெரிந்திருந்தால் -- நிச்சயம்
அந்த ஆசையை உன்னிடத்தில்
சொல்லி இருக்க மாட்டேன்!!

காதலை சொல்லிவிட்ட பிறகு
யாரை குற்றம் சொல்வது

குற்றத்திற்கு காரணம்
நானென்றே நாள்தோறும்
என்னை வெறுத்தேன்
வேதனையில் தவித்தேன்...

அழுகையை கொண்டபோதும்
அங்கே மோகம்
எட்டிப் பார்க்க
சோகத்தின் உச்சத்தை அடைந்தேன்

மோகத்தை களைய முற்பட்டேன்
அது மூச்சுக் காற்றில்
முழுவதுமாக செயல்பட்டது!
மோகத்துடனும் அதன் தாகத்துடனும்
செத்து செத்துப் பிழைத்தேன்!!

செந்தாமரை உந்தன் பாதம் பட
செம்மன் புழுதியோடு
கூட்டனி வைத்தேன்

ஈரக் கூந்தளில் இதமாய் சாய
இதயம் வெந்து இயங்க முடியாமல்
தவித்தேன்

கூந்தலை பங்கிடும்
குண்டு மல்லியாக மாற
வரமொன்றை கேட்டேன்

புறத் தோற்றத்தில்
உன் அழகு
போராட்ட கலமாய்
என் மனது

கை நீட்டி அடிக்க முடியவில்லை
காரணம் காட்டி அனைக்க முடியவில்லை

வெறுப்பாய் உன் பேச்சு
வேதனையில் என் மூச்சு

காட்டுப் பூக்கூட்டம்
காரணமில்லாம் எறித்தது -- அதில்
எத்தனையோ கனவுகளை சரித்தது!!

கண்கள் விழிக்கும் வேளையில்
கனவு முடிந்தது
கண்ணை விட்டு கனவுகள்
பிரியும் முன்னே
என்னை விட்டு நீ பிரிந்தாய்...

உறவை வளர்க்க முடியாதவன்
பிரிவை எப்படி தடுப்பேன்

இளமையே தனிமையானது
தனிமையே எனக்கு
துணையானது

நரம்பில் பாயும் ரத்தம்
உலையாய் கொதித்தது

தூக்கம் கெட்டது
இரவுகள் என்னை
கேள்வி கேட்டது!!

எதற்கும் பதிலலிக்க முடியாமல்
பரிதாபத்தில் தள்ளப்பட்டேன்

வாரங்கள் ஓடி என்ன பயன்
வருடங்கள் ஓடி என்ன பயன்
உன் வார்த்தை ஒன்று கிடைக்காமல்
என் வருத்தம் தீரவில்லை

நம்முள் நடந்ததை
நாள் பொழுதும் நினைத்தேன்
அணைத்தையும் இரகசியமாக
மறைத்தேன் -- அது
காவியமாக கசிந்தது!!

கவிதையாக நீ மாறினாய்
கவிஞனாக என்னை மாற்றினாய்
கவிதையை நேசித்த கவிதையே
இந்த கவிஞனையும் ஒருநாள் "நீ"
நேசிப்பாய் என்று
காத்திருந்தேன்...!
காத்திருக்கிறேன்...!!
காத்திருப்பேன்...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (6-Apr-19, 8:19 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 1176

மேலே