செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால் – நாலடியார் 93

இன்னிசை வெண்பா

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால். 93

- ஈகை, நாலடியார்

பொருளுரை:

பொருள் பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலுமேலுந் திரளும்;

நல்வினை முடிந்துவிட்டபோது அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும்;

இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.

கருத்து:

செல்வம் நிலைப்பதற்கும் நில்லாததற்கும் ஏது இறுக்கிப் பிடித்தலும் பிறர்க்குக் கொடுத்தலும் அன்றாதலின், அவை முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு நெகிழாமற் செய்துவரல் வேண்டும்.

விளக்கம்:

தளர்ந்து நிலைகுலைதல் ‘நடுக்குற்று' எனப்பட்டது.

‘தற்சேர்ந்தார் துன்பந் துடைத்தலே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனாலேதான் வாழ்க்கைக்கு விளக்கமுண்டாகின்றது' என்னும் உண்மை இதன்கண் விளங்கிற்று.

தக்கவாறு தெளிவில்லாமையினாலேயே உலகத்தில் நற்செயல்கள் நிகழாமற் போதலின் இப்பாட்டுத் தகுமுறையிற் காரணங்காட்டுவதாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Apr-19, 1:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே