தன்சொல்லால் ஆக்கமும் கேடும் அணையுமென நின்றார் - கொடுஞ்சொல், தருமதீபிகை 160

நேரிசை வெண்பா

இன்சொல்லால் அஞ்சுமான் இன்புற்(று) இசைகொண்டான்
வன்சொல்லால் வெஞ்சகரர் மாண்டொழிந்தார் - தன்சொல்லால்
ஆக்கமும் கேடும் அணையுமென இவ்வுலகம்
நோக்கவிவர் நின்றார் நுழைந்து. 160

- கொடுஞ்சொல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அஞ்சுமான் இன்சொல்லால் இன்பமும் புகழும் எய்தி விளங்கினான், சகரர் வன்சொல்லால் மாண்டு ஒழிந்தார்; தன் சொல்லாலேயே ஆக்கமும் கேடும் மனிதனுக்கு உண்டாகும் என்பதை உலகம் அறிய முறையே இவர் உணர்த்தி நின்றார்.

இனிய மொழிகளையே யாண்டும் பேசவேண்டும் கொடிய சொற்களைக் கூறலாகாது என இதுவரை உணர்த்தி வந்து, முடிவில் இன்சொல்லாளர் புகழும் இன்புமும் பெறுவர்; வன்சொல்லாளர் பழியும் துன்பமும் அடைவர் என்பதற்கு இாண்டு இதிகாசங்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.

அஞ்சுமான் என்பவன் சூரியகுலத் தோன்றல். அசமஞ்சனுடைய அருமைத் திருமகன். சகர மன்னனுக்குப் பேரன்; இவன் சாந்தகுண சீலன்; யாரிடமும் இதமான சொற்கள் பேசும் இனிய இயல்பினன்.

தனது சிறிய தந்தையாகிய சகரர் என்பவர் கபிலமுனிவரிடம் போய் மாறுபாடு கொண்டு சீறி வைது அம்மாதவரது சாபத்தீயால் மாண்டு போயினர்.

இவன் சென்று பணிவும் பண்பும் உடையவனாய் வணங்கி நின்று நிகழ்ந்ததை இனிது கூறினான். முனிவர் உவந்து இவனை ஆசீர்வதித்து வேள்விக் குதிரையைக் கொடுத்தருளினர். இவன் அதனைக் கொண்டு வந்து பாட்டனது யாகத்தை முடிப்பித்தான். அதன் பின் முடி மன்னனாய் அரசை இவன் நெடிது ஆண்டு வந்தான். இன்சொல்லாளன் புகழும் புண்ணியமும் அடைந்து மகிழ்வான் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து கொண்டது. வன்சொல்லாளர் பழி படர்ந்து மடிவார் என்பதை சகரர் சரிதம் தெளிவாக்கி நின்றது.

இன்சொல் ஆக்கம் தரும்; வன்சொல்லால் கேடு வருமாதலால் நல்லதை நாடி ஒல்லையில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

கொடுஞ்சொல் பழியும் இழிவும் பயந்து படுகேடுகளை விளைக்கும்; அதனை எவ்வகையினும் யாதும் பேசாமல் நாவைச் செவ்வையாகப் பாதுகாத்து ஒழுக வேண்டும்.

நேரிசை வெண்பா

நாவின் நுனியில் நயமிருக்கில் பூமாதும்
நாவினிய நல்லோரும் நண்ணுவார் – நாவினுனி
ஆங்கடின மாகில் அத்திருவும் சேராள்முன்
ஆங்கே வருமரண மாம். 17 நீதி வெண்பா

நேரிசை வெண்பா

இன்சொல் அளாவல் இடமினிதுாண் யார்யார்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்க்கு முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து. 7 ஏலாதி

தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொற் கூறலும், கடுஞ்சொலொழித்து மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பானாயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர் எனப்படுகிறது.

நேரிசை வெண்பா

சிலம்பிற்குத் தன்சினை கூற்றநீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமா ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை. 10 சிறுபஞ்ச மூலம்

பிறர் பழி கூறுவோன் அடையும் பயன் இம்மையில் இகழப்படுதலும், மறுமையில் எரிவாய் நிரயத்து அழுந்தலும் ஆதலால், ‘நாவிற்கு நன்றல் வசை,’ (கூற்றம்) என்றார்.

கெட்ட கழுதைக் குரலதென்பர் குயில்கூவின்
நட்டவர்கள் போல்மகிழ்வர் நண்பதனொ(டு) என்னை?
பட்டபொருள் சொல்லலுறல் உண்டெனினும் யாரும்
வெட்டென வுரைத்தலை விடுத்திடுமின் என்றான். - குண்டலகேசி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-19, 11:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே