இம்மி யரிசித் துணையானும் வைகலும் கொடுத்துண்மின் – நாலடியார் 94

நேரிசை வெண்பா

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். 94 ஈகை, நாலடியார்

பொருளுரை:

‘இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது நாடோறும் உமக்குக் கூடியன பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்; ஏனென்றால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் சமைத்தலில்லாத அடுப்பினையுடைய வறியவர்கள் முற்பிறப்பிற் பிறர்க்கு ஒன்று உதவாதவர்கள் என்று சான்றோர் கூறுவர்.

கருத்து:

இயைந்த அளவாவது பிறர்க்கு உதவுதலை மேற்கொள்ள வேண்டும்.

விளக்கம்:

‘இம்மியரிசி' யென்பதை "மத்தங்காய்ப் புல்லரிசி" என்பர் நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில்;1 மிகச் சிறியதாகலின், ‘இம்மி யரிசி' நுவலப்பட்டது.

பிறர்க்குக் கொடுக்க இயலாத நாளை இன்னாத நாளாகக் கருதுவாராகலின், ‘வைகலும்' எனப்பட்டது.

உம்மை - முற்பிறப்பு,

குண்டுநீர் - ஆழமான நீர்நிலை என்னும் பொருட்டாய்க் கடலை உணர்த்திற்று.

மிகக் கொடிய வறுமை தோற்றுதற்கு ‘அடாஅ அடுப்பினவர்' எனப்பட்டது;

இரக்கம் என்னும் உயிர்ப்பண்பு மிகும் பொருட்டு இங்ஙனம் இப்பிறப்பில் அவர் துன்புறுவோராயினர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-19, 7:56 am)
பார்வை : 224

சிறந்த கட்டுரைகள்

மேலே