தாய்மொழியை விட்டயலே ஏங்கி உழலல் இளிவு - தாய்மொழி, தருமதீபிகை 174

நேரிசை வெண்பா

ஈன்றெடுத்த மாதாவை எள்ளி இகழ்ந்தொதுக்கி
ஊன்றொடுத்த பெண்ணைவிழைந்(து) உள்மயங்கி - ஏன்றெடுத்துத்
தாங்கி அலைவார்போல் தாய்மொழியை விட்டயலே
ஏங்கி உழலல் இளிவு. 174

- தாய்மொழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பெற்ற தாயை உவந்து பேணாமல் இகழ்ந்து கைவிட்டுப் புதிதாய் உற்ற ஒருத்தியை நயந்து களிக்கும் களியர் போல உரிய மொழியை விழைந்து கொள்ளாமல் பிறமொழியை விரும்பித் திரிதல் இளிவு என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தமிழானது தாய்போல் கண்கண்ட தெய்வம்; அதனைக் கருதி உணர்ந்து உறுதியாகப் போற்ற வேண்டும்; காணாததைக் காதலித்து விழி கண் குருடாய் வீணே இழிந்து படாதே என இனத்தவர்க்கு இது இதம் புகல்கின்றது.

ஊன் தொடுத்த பெண் - சதைப்பற்றுள்ள மங்கை. எதைப் பற்றி விழைந்து உழல்கின்றானோ அந்த உருவநிலையும் பருவ அமைதியும் உணர வந்தது. உள்மயங்கி என்றது மதி மயங்கிப் பெண் ஏவல் செய்துவரும் பேதைமையைக் குறித்து வந்தது.

அன்னை என்பவள் முன்னறி தெய்வமாய் முதன்மை எய்தி யுள்ளவள். பத்து மாதம் சுமந்து பெற்றுப் பால் ஊட்டித் தால் ஆட்டி வளர்த்து வாலிபம் செய்து விட்டவள். யாண்டும் உள்ளம் உருகி உரிமை கூர்ந்து வருபவள். அத்தகைய அருமைத் தாயை ஆர்வமுடன் ஆதரியாமல் இடையே புகுந்த மனைவியிடம் ஆசை கொண்டு அவள் சொன்னபடியெல்லாம் ஏவல் புரிந்து இழிந்து திரிவாரை ஈண்டு உவமையாக எடுத்துக் காட்டியது,

உவமேயமாகக் குறித்த பொருளைக் கருத்தூன்றி உணர்ந்து கழித்ததற்கு இரங்கித் திருத்தமடைந்து கொள்ள, அதன் தகைமை கருதி வீட்டில் பேசி வருகின்ற நாட்டு மொழியைத் தாயோடு ஒப்பவைத்தது,. தாய், உடலைப் பேணி உருவை வளர்க்கின்றாள்; மொழி, அறிவைப் பேணி உயிரை வளர்க்கின்றது. பெற்ற தாய் போலவே உற்ற மொழியும் மக்களுக்கு உரிமை சுரந்து உணர்வுநலம் உதவி உயர்வு புரிந்தருள்கின்றது.

எந்த நாட்டவரும் தம்தம் சொந்தப் பேச்சைத் தாய்மொழி என்றே அன்புரிமையுடன் வழங்கி வருகின்றனர். ஆகவே தாய்மொழி மிகவும் பயபக்தியுடன் பாராட்டத்தக்கது என்னும் நயனும் நன்கு புலனாம்.

பிறந்த மொழியை விழைந்து படியாதவன் பெற்ற தாயை இகழ்ந்தபடியாய் இழிந்து படுகின்றான். மாதாவை இழந்தவன் தீதாயுழந்து சீரழிந்துழலுதல் போல், ஆதாரமான உரிய மொழியை ஓதாது ஒழிந்தவன் அறிவு கேடனாய் வறுமையிலுழந்து சிறுமை மிக அடைகின்றான்.

அயல் மொழியை அவாவி மயல் மிகுந்து உழலாதே! உனது இயல் மொழியைப் பயின்று உயர்வடைந்து கொள்க என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-19, 8:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

சிறந்த கட்டுரைகள்

மேலே