புல்லர்தம் வாய்வழியே நோயை வளர்த்து சீசியென நிற்பர் - குறும்பு, தருமதீபிகை 166

நேரிசை வெண்பா

நெல்லெறிந்து கல்லெறியை நேர்ந்ததுபோல் முன்புறஓர்
சொல்லெறிந்து தொல்லை பலசூழவே - புல்லர்தம்
வாய்வழியே நோயை வளர்த்து வழியெங்கும்
சீசியென நிற்பர் திரிந்து. 166

- குறும்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறிய நெல்லை எறிந்து பெரிய கல் எறியைப் பெறுதல் போல் புல்லிய ஒரு சொல்லை எறிந்து தொல்லைகள் பல அடைந்து எல்லாரும் இகழ்ந்து தள்ளக் குறும்பர் இழிந்துபடுவர். நெல், கல் என்பன மென்மை வன்மைகளைக் காட்சிப்படுத்தி நின்றன. கருத்துக்களைக் கண்ணுான்றி உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறனைப் பார்த்துக் குறும்பாக ஒருவன் சிறு பரிகாச வார்த்தை கூறின், மாறி அவன் எரிபோல் சீறி இழிமொழிகளை வாரி வீசி இகழ்ந்து போகின்றான், அவ்வளவோடு அமையாமல் உயிருள்ள வரையும் பகையாய் அவனை எள்ளி நிற்கின்றான்.

சிறிய ஒரு சொல்லால் கொடிய பகையையும் பழியையும் உளவாக்கி இளிவும் துயரும் அடைதலால் நெல் எறிந்து கல் எறி நேர்தலை ஒப்புச் சொல்ல நேர்ந்தது.

குறும்புச் சொல்லால் விளையும் அல்லல் பலவற்றையும் ஆழ நோக்கி ஆய்ந்து கொள்ள தொல்லை பல சூழ என்றது.

கல் எறி உடம்பில் பட்டுச் சிறிது காயத்தை உண்டாக்கும்; சொல் எறி உள்ளத்தில் பாய்ந்து உயிரைக் கொதிக்கச் செய்யும். இங்ஙனம் கொடுமையானமையால் கடுமையான துயரங்களுக்கு அது காரணமாய் மாரண நிலையை மருவி நின்றது.

சீசீ என்பது இகழ்ச்சியைக் காட்டும் ஒலிக்குறிப்பு. அருவருப்பையும் வெறுப்பையும் விளக்கிவரும். இங்ஙனம் வருவதைச் சங்கேதம் என்பர்.

வாய்வழியே நோயை வளர்த்து - வாய்ச் சொல்லாலேயே துன்பங்களை விளைத்து. அது திட்டிய தீங்கு நிலை தெரிய நோய் வந்த வழியைச் சுட்டியது.

வழி எங்கும் சீசி என நிற்பர் என்றது ஈனமான இழி மொழிகளைப் பேசுபவர் போன இடம் எல்லாம் வெறுத்து எள்ளித் தள்ளப்படுவர் எனப்பட்டது.

நல்ல வாயால் தீயநோயை வளர்த்து வீணே இழிந்து வெந்துயரடையாதே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-19, 9:34 am)
பார்வை : 24

மேலே