சொந்தமொழி உணராமல் அயலோடல் அந்தகமே அன்றோ அது - தாய்மொழி, தருமதீபிகை 176

நேரிசை வெண்பா

தந்தம் மொழியில் தலைமைப் புலமைகொண்டு
வந்த மொழிபயிலல் மாண்பாகும் - சொந்தமொழி
முந்த உணராமல் முண்டி அயலோடல்
அந்தகமே அன்றோ அது. 176

- தாய்மொழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமக்கு உரிய தாய்மொழியில் தலைமையான புலமை அடைந்தபின், அயல் மொழியில் பயிலல் நலமாம்; அங்ஙனம் சொந்தமானதை முந்துறப் பயிலாமல் வேற்று மொழியை விழைந்து ஓடல் இழிந்த மருளும், குருட்டுத்தனமும் ஆகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தம்,தம் என்றது மக்கள் இனங்களைச் சுட்டியது. உலகில் பல நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டினரும் தனித்தனியே தமக்கு என உரிய மொழியை வழக்கமாய்ப் பேசி வருகின்றனர். பழக்கமான சுயமொழியில் அம்முன்னோர்களுடைய எண்ணங்களும் அனுபவங்களும் சரித்திரங்களும் நூல்களாய் வெளி வந்துள்ளன. சொந்த மொழியாளருக்கு அந்நூல்கள் எளிதாகவும் இனிமையாகவும் தெளிவாம். ஆகவே அந்தக் கல்வியறிவு வேறு எந்த மொழி நூல்களையும் எளிதில் அறிவதற்கு வழியாய் ஒளி செய்து அருளுமாதலால் தாய்மொழிப் பயிற்சி ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுறுதியாய் உயர்ச்சி புரிகின்றது.

சுயமொழி உணர்வை முதலில் பெற்று அயல்மொழி பயில்க. அப்பயிற்சி ஒளியுற்ற விழிபோல் எதையும் தெளிவாக விரைந்து கண்டு உயர்ந்து கொள்ள இனிதாய் உதவுகின்றது.

வந்த மொழி என்றது இடையே நாட்டுள் வந்து புகுந்தது என அதன் வேற்றுமை தெரிய வந்தது. பிறப்புரிமையாக உற்ற மொழியை முன்பு முற்றக் கற்று, பின்பு மற்றதைப் பார். அப் பார்வை சீர்மை பயக்கும்.

முண்டி அயல் ஓடல் என்றது ஏதோ புதையல் கண்டவர் போல் அந்நிய மொழி மேல் மோகம் கொண்டு அவாவிப் பாய்த்து அறிவு மாய்ந்து படுகின்ற அவரது மாய மயக்கத்தைக் குறித்தது.

அந்நியத்தை மிக மதித்துக் தன்னதை அவமதித்தல் கொடுமையான மடமையாகுமாதலால் குருட்டுத்தனமான அம் மடத்தனத்தை நினைந்து, அது அந்தகமே அன்றோ? என்று சிந்தை கவல நேர்ந்தது. அந்தகம் – குருடு; உண்மை உணர்ச்சியின்றி உழன்று படுதலை உணர்த்தி நின்றது.

சொந்த மொழியை முந்துறப் படியாமல் இடையே வந்ததைச் சிந்தையுள் படியவிடின், அது உன் பிறப்பு நலனை மாற்றிப் பிழை மிகச்செய்யும். படித்த மொழிப்படியே மனிதன் தடித்து வளர்கின்றான். இனிய இயல்மொழி பயிலின் மனிதன் கனிவு மிகவுடையவனாய்க் கனிந்து திகழ்கின்றான்.

இயற்கை உரிமையாய் அமைந்ததே எவர்க்கும் இனிமையாகும். தெய்வக் கொடையாய் வந்துள்ள உன் சொந்த மொழியை முந்துற உரிமையோடு படியாது அயலில் மயலாய் ஒழியின், அது தெய்வத்தையும் தேசத்தையும் நிந்தனை செய்த படியாம்; அதனை யோசனை செய்து உரிமையை ஓர்ந்து கற்று உயர்ந்து கொள்ளுக என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-19, 9:38 am)
பார்வை : 31

மேலே