திரு லட்சுமிகாந்தன் பாரதி, IAS

பாரதி பயிலகம் வலைப்பூ
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.

StatCounter - Free Web Tracker and Counter
TUESDAY, JULY 31, 2012
திரு லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S.

Second from left with Gandhi Cap is Sri K.Lakshmikanthan Bharathi during Salt Satyagraha March re enacted in Vedaranyam. Person wearing brown khadi jibba is Mr.Vedarathinam, grandson of Sardar Vedarathinam Pillai, who was the real Hero of 1930 Salt Satyagraha held under Rajaji.




தன்னைப் பற்றி திரு லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. எழுதியுள்ள கட்டுரை.
"தினமணி" சுதந்திர தின பொன்விழா மலரில் வெளிவந்தது.

மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் லட்சுமிகாந்தன் பாரதி. தாம் கைது செய்யப்பட்டு கை விலங்கிடப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே, பிற்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, சாதனை படைத்தவர். அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இப்போது திருச்செங்கோட்டில் இருக்கும் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' தலைவராக இருந்து சுற்றுப்புற கிராம மக்களுக்கு அரிய பல சேவைகளை செய்து வருகிறார். இவர் போன்ற தேசத் தொண்டர்களுக்கு வயதோ, உடல்நிலையோ ஒரு பொருட்டல்ல. தந்தை, தாய், இவரது சகோதரி, இவர் என்று குடும்பமே நாட்டுச் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற தியாக வரலாறு இவருடையது.

தந்தை திரு எல்.கிருஷ்ணசாமி பாரதியைப் போலவே சுறுசுறுப்பாகப் பேசுபவராகவும், தேசபக்தியில் புடம் போட்ட தங்கமாகவும் காட்சி தரும் திரு லட்சுமிகாந்தன் பாரதி எழுதிய கட்டுரை இதோ:

நாடு விடுதலை அடைந்த 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது விடுதலை இயக்கமும் 1942ல் நாடே கொதித்து எழுந்ததும் அப்பேரியக்கத்தில் 16 வயது மாணவனாக இருந்த நான் கலந்து கொண்ட நினைவுகளும் என் மனக்கண் முன் தோன்றுகின்றன.

1942 ஆகஸ்டு 9ல் மகாத்மா காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது, நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாண்டு மாணவன். 16 வயது பூர்த்தியாகாத இளம் பருவம்.

மாணவர்களாகிய நாங்கள் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளித்தோம். அன்று மாலை, காவல் துறையினரின் படுபயங்கரமான அடக்குமுறைகளையும் மீறி, நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உணர்ச்சியே வடிவாகக் கல்லூரியிலிருந்து புறப்பட்டோம்.

எங்கும் தடியடி - துப்பாக்கிப் பிரயோகம், ஆனால் இவைகள் எல்லாம் எங்களுக்கு வெகு அற்பமாகத் தோன்றின. அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், அந்த இரவு நாங்கள் செயல்பட்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

இதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசியக் கொடி ஏற்றியது, பெண் தியாகிகளை அவமானப்படுத்திய காவல் துறை அதிகாரியின் மீது திராவகம் ஊற்றியது, இப்படி அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன.

காவல் துறையின் தடியடிப் பிரயோகத்தில் எனக்கு அடுத்து நின்ற மாணவரின் மண்டை பிளந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் நான் அவரைத் தாங்கிப் பிடித்தேன். அப்படி அடிபட்ட அந்த மாணவர் கோவிந்தராஜந்தான் பிற்காலத்தில் சட்டப் பேரவை உறுப்பினரானார்.

என் சகோதரி மகாலட்சுமி சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் சிறை சென்ற செய்தி கிடைத்த மறுநாள், நான் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானேன். 6 மாதச் சிறை தண்டனை பெற்று அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு மாபெரும் தலைவர்களுடன் 6 மாதம் இருக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, பல்கலைக் கழகத்தில் நான் தொடர்ந்து படிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்து, பல்கலைக் கழகத்திலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கினார்கள். இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ராஜாஜிக்கு எனது தந்தை கிருஷ்ணசாமி பாரதி கடிதம் எழுதினார்.

உடனே, பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த ஏ.எல்.முதலியாருக்கு ராஜாஜி கடிதம் எழுதினார். இளம் வயது மாணவனின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் வகையில் இப்படிச் செய்தது சரியல்ல என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நான் சிறையிலிருந்து வந்ததும் படிப்பைத் தொடர அனுமதி கிடைத்தது.

எந்த மதுரையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேனோ, அதே மதுரையின் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பிற்காலத்தில் நான் பதவி ஏற்றேன். எனது கைமாறு கருதாத தேசபக்திக்குக் கிடைத்த பரிசாக அதை நான் எண்ணினேன்.

அதுமட்டும் அல்ல. 1967ல் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா சிலை திறப்பு விழா நடைபெற்றது. அச்சிலையை ஏ.எல்.முதலியார் திறந்து வைத்தார். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நான் விழாவுக்குத் தலைமை வகித்தேன்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் நான் படிப்பைத் தொடர அனுமதித்தபோது எனது பெற்றோர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படி ஏ.எல்.முதலியார் அறிவுரை கூறியிருந்தார். அதை அவ்விழாவில் நான் அவரிடம் நினைவு படுத்தினேன். அவர் என்னத் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார்.

இந்தியா ஒரு புண்ணிய பூமி. அதே நேரத்தில் இந்தியாவின் புண்ணிய பூமி அந்தமான் தீவுகள். ஆம்! விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் அடைக்கப்பட்ட கொடுஞ் சிறை அந்தமானில்தான் உள்ளது.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பலர் அங்கேயே இறந்திருக்கிறார்கள். அங்கு அடைக்கப்பட்டவர்களில் பலருக்கு அடுத்த சிறைக் கொட்டடிகளில் யார் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. அவ்விதம் மற்ற கைதிகளைக் காணமுடியாதபடி அச்சிறை நட்சத்திர வடிவில் கட்டப்பட்டிருக்கும். கடுமையான தண்டனைகள், சித்திரவதைகளைச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அங்கு அனுபவித்தனர்.

அத்தகைய அந்தமான் சிறைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆண்டுதோறும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அச்சிறையில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனுபவித்த கொடுமைகளை விளக்க வேண்டும்.

இதுவரை இப்படிச் செய்து வந்திருந்தாலே, தற்போது நாட்டில் நிலவும் பிரிவினை வாதம், தீவிரவாதம், சாதி, மத மோதல்கள் போன்றவை தலை தூக்கியிருக்காது. தேசபக்தி இளைய சமுதாயத்தினரிடையே தழைத்து ஓங்கி இருக்கும்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.

(
--------------------------
(திரு கி.லட்சுமிகாந்தன் பாரதி அவர்கள் இப்போது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவராக இருந்து கொண்டு சுற்றுப்புற கிராமங்களில் சர்வோதய தொண்டு புரிந்து வருகிறார். குடிநீர் பிரச்சினை, மதுவிலக்கு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்த உண்மையான காந்தியவாதியை நினைத்து தமிழர்கள் பெருமைப் படவேண்டும். தியாகிகள் பரம்பரையில் வந்த இந்த தியாகியும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இவரது தாயார் மகாத்மா காந்தியின் அஸ்தியை இராமேஸ்வரம் கடலில் கரைக்கும் பேறு பெற்றவர்கள்.)

ஒருமுறை அரிமா சங்கமும்
காந்தி மியூசியமும் சேர்ந்து நடத்திய
காலிபர் வழங்கும் விழா குறித்த
நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவருடன்
கல்ந்து பேசும் நிகழ்ச்சிக்கு அரிமா
சங்கத்தின் சார்பாக ஐயா அவர்களுடன்
இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது
அன்று ஐயா அவர்கள் இந்த
நிகழ்வுகளையெல்லாம் சொல்லி
அவர் இருந்த போது மாவட்ட ஆட்சியர் இருந்த
இருக்கை,முதலியவைகளையெல்லாம்
நேரடியாக விளக்கியமை இன்றும் என் மனதில்
பசுமையாக உள்ளது
அதை இன்றுவரை என் வாழ்வில்பெற்ற நான் மிகப் பெரிய
பாக்கியமாகவே கருதுகிறேன்
ஐயா அவர்கள் வாழுகிற காலத்தில்
நாமெல்லாம் இருப்பது என்பதே
நமகெல்லாம் பெருமை
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
மனம்தொட்ட பதிவு
பகிர்வுக்கு நன்றி

எழுதியவர் : (14-Apr-19, 8:20 pm)
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே