இராஇரவியின் படைப்புலகம் ஓர் அறிமுகம் கவிஞர் மஞ்சுளா, மதுரை

இரா.இரவியின் படைப்புலகம்
ஓர் அறிமுகம்

கவிஞர் மஞ்சுளா, மதுரை.

ஐக்கூ என்பது ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானியக் கவிதை வடிவமான ஐக்கூ மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதால் ஜப்பானின் மிகப்புகழ்பெற்ற வடிவமாக ஹைக்கூ இன்றளவும் இருந்துவருகிறது. 17ஆம் நூற்றாண்டில் ‘பாசோ’ என்பவர் இக்கலை வடிவத்தை மேலும் மெருகூட்டினார்.ஐக்கூ என்பதை தமிழில் ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர். கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.தமிழில் 1980 களில் ஹைக்கூ கவிதைகள் பல எழுதப்பட்டன. அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள், ஐக்கூ அந்தாதி, அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பிறைகள், கழனியூரனின் நிரந்தர மின்னல்கள் குறிப்பிடத்தகுந்தவை.இந்திய மொழிகளில் தமிழ்மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகைய பெருமை மிகுந்த கவிதையுலகில் தன்னையும் தனது மொழியான ஹைக்கூவையும் இணைத்து மதுரைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் கவிஞர் இரா.இரவி அவர்கள். 1997ல் தனது முதல் தொகுப்பான கவிதைச் சாரலிலிருந்து ஆரம்பித்து, ஹைக்கூ முதற்றே உலகு, வெளிச்ச விதைகள், ஹைக்கூ ஆற்றுப்படை, ஹைக்கூ 500 போன்ற இருபது நூல்களை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.தனது பெருமையை தரணி முழுவதும் போற்றும் வகையில் இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் பதிவுசெய்து உலகத் தமிழர் மனங்களில் எல்லாம் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் நோக்கில் அயராமல் தன் கவிதைகளை படைத்து வருபவர்.மதுரையில் சுற்றுலாத்துறையில் பணியிலிருந்தபடியே தன் கவிப்பயணத்தை தொடர்ந்தாலும், தொடர்ந்து பல இலக்கிய நிகழ்வுகளிலும், பட்டிமன்றங்களிலும் தனது பேச்சாற்றலால் மக்கள் மனங்களில் இடம்பிடித்து வருகிறார்.ஹைக்கூ என்று சொன்னாலே, இரா. இரவி என்ற தனது பெயரையும் தமிழுலகம் இணைத்தே சொல்லமுடியும் என்ற அளவிற்கு நிறைய ஹைக்கூ கவிதைகளை சிற்றிதழ்களிலும், இணையதளங்-களிலும் பதிவிட்டுள்ளார். இவரது கவிமலர்.காம் என்ற இணையதளம் பிரசித்தி பெற்றது. முகநூலிலும் தொடர்ந்து தனது நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார்.ஹைக்கூ மட்டுமல்லாமல் லிமரைக்கூ, பழமொன்ரியு, லிமர்புன் என்னும் புதிய சோதனை முயற்சிகளும், தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. எந்த முயற்சியாய் இருந்தாலும் இவரது தமிழ்நடை என்பது “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்ற ரகத்தில் இருப்பவை. தயக்கமில்லாத, தடுமாறாத, தன் மனதில் தோன்றியதை, ஒளிவுமறைவின்றி நேரிடையான மொழியைக் கையாளும் திறமை பெற்றவர்.‘ஹைக்கூ முதற்றே உலகு’ என்னும் நூலில்‘அக்கினிச் சிறகுகளால்
அகிலம் பறந்தவர்
கலாம்’!என்று மக்கள் மனம்கவர்ந்த அப்துல்கலாமை போற்றுவதாகட்டும் ;“ஈடுபாடு

உடன்பாடு

மேம்பாடு”என்று தன்னம்பிக்கையுடன் முழங்குவதாகட்டும் ;“கற்றலின்

கேட்டல் நன்று

அறிஞர்கள் உரை”“பிறரை நேசி

அதற்கு முன்

உன்னை நேசி”என்று சீரிய நெறிமுறைகளை சொல்வதிலாகட்டும் ;“நூற்க முடியாத

வெண்பஞ்சு

வானத்தில்”என்று இயற்கையை நுட்பமாக ரசிப்பதிலாகட்டும் ;மேலும், இன்றைய வாழ்க்கை, சமூகம், அரசியல், பகுத்தறிவு, புரட்சி என்று பல்வேறு தலைப்புகளில் மேற்குறிப்பிட்ட நடைமொழியிலேயே எழுதியிருக்கிறார்.நிறைய எழுதியிருந்தாலும் 26-01-1992ல் குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த அரசுப்பணியாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.பல்வேறு இலக்கியக் கழகங்களும் இவருக்கு விருதுகளை அள்ளி வழங்கியுள்ளன. பேச்சும் எழுத்தும் மூச்சாகவே உள்ளது

.

‘என் கடன் இணையத்தில் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே’ என்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழியற்புலம் முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் இரா.இரவியைப் பாராட்டியது சாலப் பொருந்தும்.கவிதைகள் மட்டுமல்லாது இணையத்திலும், சிற்றிதழ்களிலும் நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், சிந்தனையாளருமான முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இவரை ‘புலிப்பால் இரவி’என்று அழைக்கும் அளவிற்கு இவரது ஆற்றலையும், பிறருடன் பழகும் நற்பண்புகளையும் வளர்த்துக் கொண்டவர். தினமணி நாளிதழுடன் கவிதை இணையத்திலும் கவிதைகளை பதிவிட்டு வருகிறார்.இவருக்கு முகநூலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தாலும், மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவனையும், மூத்த எழுத்தாளர் முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனருமான திருச்சி சந்தர் அவர்களையும் தனது நூலின் முன்னுரையில் நினைவு கூர்கிறார். நன்றி மறக்காத நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர்.‘வெளிச்ச விதைகள்’ என்ற நூலில் எனக்க்குப் பிடித்த கவிதை ஒன்று உள்ளது. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.‘மனித நேயத்தை மனதினில் ஏற்றிடுவோம்
மதவெறியை மனதினில் அகற்றிடுவோம்!


எண்ணங்கள் யாவும் இனிதாகட்டும்
எண்ணிய யாவும் இனி வசமாகட்டும்’!என்று கூறுவது நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் உள்ள கருத்தாகும். ‘இலவசம் எனும் வசியம்’ என்ற கவிதை இலவசங்கள் மீதான இவரது கடுமையான விமர்சனமாகவே பதிவாகியுள்ளது.‘என் ஓட்டம் என் இலக்கு’ என்ற கவிதையில் நுழைவாயிலில் இருக்கும் பாரதி சிலையைத் தினமும் பார்த்தேன்.

நுழைந்த்து என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை’ என்று தனது தமிழ் மீதான பற்றை தன்னம்பிக்கையோடு முழங்குகிறார்.‘சிற்றிதழ்கள் என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன’என்று தன் எழுத்துலகை அறியச் செய்த சிற்றிதழ்களை போற்றிப் புகழ்கிறார்.இவர் வெளிநாடு செல்லாவிட்டாலும் இவருக்கான வாசகர்கள் எல்லா வெளிநாடுகளிலும் இருப்பதை பெருமையுடன் பறைசாற்றுகிறார்.அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதை பெருமையுடன் குறிப்பிடுகிறார். இவரது 19-வது நூலான ஹைக்கூ 500 என்ற நூலில் புகைப்படங்களுக்குப் பொருத்தமான ஹைக்கூ கவிதைகளை அழகுற பதிவு செய்துள்ளார். புதுவைத் தமிழ் நெஞ்சனின் அணிந்துரையுடன் நூல் அழகாக வெளிவந்துள்ளது.இந்நூலில் உழவன் தற்கொலை பற்றிய பதிவு கண்களை கலங்க வைக்கிறது. உடுத்த ஆடை கூட இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் எலும்புகள் தெரிய ஒரு பள்ளிச்சிறுவன் அமர்ந்திருக்க, ஆசிரியர் வகுப்பு நடத்துகிறார். என்ன கொடுமை இது? இந்த புகைப்படம் மனதை என்னவோ செய்த்து?‘கரும்பலகையில்
வெள்ளை எழுத்து
கறுப்பின விழிப்புணர்வு’!‘சோமாலியக் குழந்தைக்கு
முதல் தேவை
கல்வியல்ல சத்துணவு’!என்று படத்திற்கு பொருத்தமான பதிவை வெளியிட்டிருப்பது சிறப்பு. மனித சமூகத்தின் அவலங்களை படம்பிடித்து உலக மக்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் மனித சமூகத்திற்கு எது உடனடி தேவை? என்பதை விளக்குகிறார்.மனிதன் என்பவன் ஒருவருக்கொருவர் உதவி வாழ வேண்டியவன். எந்தஒரு மனிதனும் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. வானமே இடிந்து விழுந்தாலும் மனிதன் தனது நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது போன்ற சமூகக் கருத்துக்களை தன்னுடைய நேரிடையான மொழியில் தனது கவிதை வெளியில் தூவிக்கொண்டே இருப்பவர் தான் ஹைக்கூ இரா.இரவி அவர்கள்.சிறு துளியில்
பெரிய வானம்
ஹைக்கூ!அவரே கூறுவது போல, அவரது வானத்தில் அவரே சிறுதுளியும் பெரும் வானமுமாக இருக்கிறார்.இரா. இரவி அவர்களின் எழுத்துப்பணி தொடர்ந்து வளர என் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Apr-19, 11:41 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 13
மேலே