தான்வருமே நிந்தையால் நிந்தை நினை - குறும்பு, தருமதீபிகை 167

நேரிசை வெண்பா

உன்தாய்,முன் இங்குவந்த துண்டோ எனஒருவன்
நின்றானை நோக்கி நிகழ்த்தவே - அன்றீண்டென்
தந்தைவந்தான் என்றானத் தன்மைபோல் தான்வருமே
நிந்தையால் நிந்தை நினை. 167

- குறும்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் எதிரே நின்றவனை நோக்கி உன் தாய் முன்னே இங்கு வந்தது உண்டோ? என்று குறும்பன் வினவினான், அதற்குப் பதிலாக என் தந்தை வந்தான் என்று வந்தவன் சொன்னான்; ஆதலால் நிந்தையால் நிந்தை வரும் என்பதை நினைக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், பழித்தவன் பழிக்கப்படுவான் என்கின்றது.

சிறிய ஒரு நெல்லை எறிந்து பெரிய கல்லெறியை வாங்குவார் போல் மெல்ல ஏளனமாக ஒன்று சொல்லி வலிய பழியைக் குறுமொழியாளர் சிலர் அடைந்து இழிகின்றார் என முன்னே கூறியதற்கு உரிய நிகழ்ச்சி ஒன்று இதில் குறிக்கப்பட்டது.

சாரகன் என்பவன் ஒரு சமீன்தாரன். நல்ல அழகன். உல்லாசப் பிரியன். சிறிது கல்வியுள்ளவனாயினும் விகடங்களிலும் வேடிக்கைகளிலும் ஈடுபட்டுக் காமச்சுவையில் ஆழ்ந்து களிப்பூர்ந்திருந்தான். பரிகாச வார்த்தைகளிலேயே தன் பொழுதை வறிதாகப் போக்கி வந்தான். இடக்கு உரையாடுவதும், யாரையும் மடக்கிப் பேசுவதும் தொடக்க முதலே இவனுக்குப் பழக்கமாயிருந்தன.

குறுநில மன்னனான இவனைக் குறும்பன் என்றே அறிவுடையவர்கள் குறித்து வந்தனர். ஒரு நாள் இவன் சாவடியில் அமர்ந்திருக்கும் பொழுது அவ்வழியே வாலிபன் ஒருவன் போனான். அவனை இவன் அழைத்தான். அவன் வந்து எதிரே மரியாதையாய் நின்றான். அயலே இயல்பாகப் பரிவாரங்களும் புடை சூழ்ந்து நின்றனர். வந்தவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். உருவம் பருவம் அழகு முதலியவற்றில் இவனை ஒத்திருந்தான். அரசிளங்குமரன் போலவே தன்னை ஒத்து நிற்கின்ற அவனை இவன் கூர்ந்து பார்த்து ஊர் பேர் முதலியவற்றை விசாரித்தான். பின்பு தன் இயல்பின்படி கேலி வார்த்தைகள் பேசி விட்டு இறுதியில், தங்கள் தாய் இந்தப் பக்கம் வந்து போனது உண்டோ? என்றான். இந்தக் குறும்பு வார்த்தையின் பொருளை அவன் உணர்ந்து கொண்டான். உடனே பதில் சொன்னான்: என் தந்தையார்தான் இங்கே வந்திருந்ததாகக் கேள்வி' என்று கூறிவிட்டு அவன் விரைந்து வெளியே சென்றான். இவன் வெட்கித் தலை குனிந்தான்.

நிந்தையால் நிந்தை வரும் என்பதை இந்த வரலாறு அன்று நன்கு விளக்கி நின்றது. சாதுரியமாகப் பிறரை நீ ஏளனம் செய்யின் நேரே கொடுமையாக நிந்திக்கப்படுவாய்; இதனைச் சிந்தனை செய்து எங்கும் வாயடங்கி வாழ்க என்று அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-19, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே