கல்விநலம் பேணாமல் பரக்கப் பயிலல் பழி - தாய்மொழி, தருமதீபிகை 177

நேரிசை வெண்பா

தாகம் தணியநல்ல தண்ணீர் பருகாமல்
சாக மதுவருந்தும் தன்மைபோல் - ஊகம்
பெருக்குமுயர் கல்விநலம் பேணாமல் வீணே
பரக்கப் பயிலல் பழி. 177

- தாய்மொழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவன் தன் தாகத்தைத் தணிப்பதற்கு தூய நீரைப் பருகாமல் உயிர்க்குத் தீமை விளைக்கும் மதுபானத்தைப் போல, உணர்வைப் பெருக்கி உயிர்க்கு உறுதி தருகின்ற உயர்ந்த கல்வியைக் கல்லாமல் இழிந்தன பயின்று வீணே உழந்து படுதல் ஈனமும், பழியும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் நல்ல மொழியை நயந்து பயில்க என்கின்றது;

ஊகம் - நுண்ணிய அறிவு நலம்,

தண்ணீர் தாய் மொழியையும், மது அந்நிய மொழியையும் குறிப்பாக உணர்த்தி நின்றன. இனிமையான குளிர்ந்த நீர் பருகின் உயிர்க்கு இதமாய் இன்பம் பயக்கும். கள் அருந்தின், வெறியைக் கிளப்பி வெம்மை விளைக்கும்.

தண்ணளி நிறைந்து யாண்டும் புண்ணிய நீர்மையாய்ப் பொலிந்துள்ள புனிதத் தமிழை இனிது படித்தால் மனிதன் சிறந்த மனநலமும் உயர்ந்த மதிநலமும் பொருந்தி மறுமை நோக்குடன் மாண்புறுகின்றான். அங்ஙனம் அருமைத் தாய்மொழியை உணர்ந்து பயிலாமல் அயல் மொழியை விழைந்து நின்றால், அது மேலெழுந்த படியாய் மேனி மினுக்கி வெறியனாக்கி வறிதே தவறான வழியில் ஈர்த்துப் போம்; அப்போக்கின் புலையினை நோக்கி நிலையான ஆக்கத்தை நீ தலைமையாக ஓர்ந்து கொள்ள வேண்டும்.

தாகம் தீர நல்ல தண்ணீரைப் பருகுவதுபோல் உன் சோகம் தீர இனிய தமிழைப் படி; அயலானதில் மோகம் படியாதே! படின், சாக மது அருந்தியது போல் நீ போக நேரும் என்கிறார் இப்பாடலாசிரியர்.

இயற்கை உணவாய் இன்புறுதல் கருதி தமிழைத் தண்ணீரோடு ஒப்புரைத்தது. எளிமையும் இனிமையும் உரிமையும் உடைய விழுமிய மொழியைப் பயின்று மெய்யான மேன்மையுறவும், பொய்யான களிமயக்கில் புகுந்து புலையுறாமலும் வாழ அறிவுறுத்துகிறார். .

குடிப்பது ஒன்றாயினும் தண்ணீரும் கள்ளும் வேறு வேறு நிலைகளை விளைத்து விடுகின்றன. படிப்பது ஒன்றாயினும் நல்ல தாய்மொழி புரியும் நயனும் பயனும் அல்லாத மொழியில் அமையாது; இனிமைப் பண்பமைந்து இன்ப நிலையமாயுள்ள உன் சொந்தத் தமிழை அன்புரிமையுடன் நன்கு படித்துக் கொள்ளும்படியும் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-19, 3:40 pm)
பார்வை : 23

புதிய படைப்புகள்

மேலே