தங்குற்றம் காணார் தருக்கிப் பிறர்குற்றம் பொங்குற்றுக் காண்பர் - குறும்பு, தருமதீபிகை 168

நேரிசை வெண்பா

மாமன் பிழையை மருகனுரைத் தானவன்றன்
தோமை அவனும்பின் சூழ்ந்துசொன்னான் - ஏமமுறத்
தங்குற்றம் காணார் தருக்கிப் பிறர்குற்றம்
பொங்குற்றுக் காண்பர் புகுந்து. 168

- குறும்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மருமகனுடைய குறையை மாமன் கூற, அம்மாமன் பிழையை மருகன் மாறிச் சொன்னான், தம் குற்றம் காணாதவராய்ப் பிறர் குற்றங்களைக் கொழித்துக் கூறுவதே மக்கள் இயல்பாய்ப் பெருகியுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குறைகளைத் துருவி ஆராய்ந்தமை கருதி சூழ்ந்து என்றது.

தோம் – குற்றம், ஏமம் - சேமம், பாதுகாவல், பொங்குதல் - உள்ளம் களித்துத் துள்ளுதல்.

பிறர் குற்றங்களை வீணாக விழைந்து கூறல் இழிந்த செயலாம்; அதனை இனிது தெளிதற்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சி இங்கே ஓர்ந்து கொள்ள வந்தது.

தன் மகளை மணந்த மருமகன் மாமன் வீட்டிற்கு ஒருமுறை வந்திருந்தான். மாமன் பெருஞ்செல்வன். கடும் உலோபி. பிறர் என்ன இன்னல் அடைந்தாலும் யாதும் இரங்காதவன். தன்னலமே கருதுபவன். மருமகனோ கொஞ்சம் படித்தவன். யாரோடும் சரசமாகப் பேசுபவன். இந்தப் பேச்சு மாமனுக்கு வெறுப்பை விளைத்தது. ஒரு நாள் மருமகனை அழைத்தான். நளினமாகச் சில மொழிகளை உரைத்தான்.

மாமன்: கடவுள் நமக்கு இாண்டு காதுகளைப் படைத்து ஒரு வாயைக் கொடுத்திருக்கிறார். அது எதற்காக?

மருகன்: அதன் பொருளை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

மாமன்: பிறர் உரைகளைப் பெருக்கமாகக் கேள்; நீ எங்கும் சுருக்கமாகப் பேசு என்னும் அந்தக் குறிப்பை உணர்த்தியே இந்த உறுப்புக்களை இப்படிப் படைத்திருக்கிறார். இதனை உணராமல் ஓயாமல் உளறுவது மனிதனுக்கு இளிவாம்.

தன்னைக் குறித்துத்தான் இன்னவாறு குறும்பாகக் குத்திச் சொல்லுகிறார் என்று மருமகன் தெரிந்து கொண்டான்; அந்த முறையிலேயே சாதுரியமாக மாமனை நோக்கி மறுமொழி கூறினன்.

மருகன்: கடவுள் படைப்பைக் குறித்து எனக்கு ஒரு பெரிய சந்தேகம் நெடுநாளாக இருக்கிறது மாமா?

மாமன்: என்ன அது?

மருகன்: ஆண்டவன் நமக்கு இரண்டு கைகளை உண்டாக்கி ஒரு வயிற்றைத் தந்திருக்கிறாரே! என்ன குறிப்போடு இப்படிச் செய்திருக்கிறார்?

மாமன்: அதன் கருத்துத் தெளிவாகத் தெரியவில்லையே.

மருகன்: நான் சொல்லட்டுமா?

மாமன்: சொல்லுங்கள்.

மருகன்: இாண்டு கைகளும் உழைத்து வயிற்றுக்குத் தந்துவிட்டுத் தாம் ஒரு பலனையும் வேண்டாது இருத்தல் போல், நல்ல மேன்மக்கள் அரிய வினைகள் பலசெய்து பிறர் இன்புற உதவி என்றும் பரோபகாரிகளாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தற்காகவே இவ்வாறு அமைத்திருக்கிறார்; இந்த அமைதியை உணராமல் தந்நலமே கருதிப் படுலோபிகளாய் இழிந்து மனிதர் பலர் கீழ்மையாளராய்ப் பாழ்படுகின்றனர்.

இதனைக் கேட்டதும் மாமன் வாட்டம் அடைந்தான். தன்னைச் சுட்டியே திட்டியுள்ளதைத் தெரிந்து வெட்கிப் போனான். பிறரை நளினமாக இகழ்பவன் வலிமையாக எள்ளப்படுவான் என்பதை உலகம் அறிய இச்சரிதம் உணர்த்தி நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-19, 5:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே