நந்தமிழை நாடாது அயலோடி வெம்மை புரிகின்றார் வீழ்ந்து - தாய்மொழி, தருமதீபிகை 178

நேரிசை வெண்பா

பெற்று வளர்த்துவிட்ட பிள்ளையொரு பெண்கூடி
உற்றதாய் ஓம்பா(து) ஒழிதல்போல் - இற்றைநாள்
நம்மனோர் நந்தமிழை நாடா(து) அயலோடி
வெம்மை புரிகின்றார் வீழ்ந்து. 178

- தாய்மொழி, தருமதீபிகை,
கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு தன்னைப் பெற்ற தாயை அவமதித்து நிற்கும் அவமகனைப் போல இந்நாளில் நம்மவர் நமது தாய்மொழியை இகழ்ந்து பேய்வழியாய் விரைந்து பிழைபட்டுள்ளனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தாய்மொழி மிகவும் சிறந்தது; அதனை எவரும் உரிமையோடு பேணி வரவேண்டும் என முந்தைய பாடலில் கண்டோம்; இதில் நமது நாட்டவர் நிலைமையைக் காண்கின்றோம்.

தாயின் உரிமையும் உதவியும் உணரப் பெறுதல் வளர்த்தல்களைக் குறித்தது; பிள்ளை பெரியவன் ஆனவுடன் ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். பின்பு அம்மனைவியின் சொல்வழியே மாலுழந்து திரிகின்றான். அத்தையலின் மையலால் தாய் தந்தையர்களை மறந்து விடுகின்றான். அப் பேய்மகன் நிலைமை இங்கே தாய்மொழியைக் துறந்து ஒழியும் சேய்களுக்கு உவமையாய் வந்தது.

பால் அருந்தும் பொழுதே வாய் மொழிந்து வந்க தமிழை வயது ஏறியவுடனே அறவே மறந்து விட்டு வேறொரு மொழியை விழைந்து நம்மக்கள் விரைந்து படுகின்றார், இப்பாடு இந்நாட்டில் பழிநிலையில் வளர்ந்திருக்கின்றது.

வயிறு வளர்த்தற்காக வாய் மொழிகின்ற ஒன்றை மேலாக மதித்து மாலுழந்து நிற்கின்றார்; அங்ஙனம் நின்றதோடு அமையாமல் உயிரை வளர்த்தருளும் அருமைக் தாய்மொழியைக் கீழாக எண்ணிப் பாழ்வாய் திறந்து பழி கூறவும் நேர்கின்றார்; இது எவ்வளவு கொடுமை! எத்துணை மடமை எத்தகைய நன்றி மறப்பு! உய்த்துணர வேண்டும்.

அதிகாரம், பொருள், கொஞ்சம் பகட்டு மதிப்பு அந்நிய மொழியால் அடைகின்றாய்; உயிரின்பம், அருளொழுக்கம், உண்மைநிலை முதலிய உயர் நலங்களெல்லாம் உன் மொழியால் பெறுகின்றாய்.

முன்னது பெருமை போலக் காட்டிப் பேயாட்டம்.ஆட்டி முடிவில் உன்னைச் சிறுமைப் படுத்தி ஒழியும். உன் மொழி என்றும் உறுதித் துணையாய் உய்தி புரிந்து உடனிருந்து உதவி அருளும். இந்த அருட் செல்வத்தை மறந்து விடலாமா?

பகட்டு மனைவி போல் ஐம்பொறிகளுக்கும் வெறிமயமான பொய்யின்பத்தைப் பொருந்தக் கொடுத்தலால் அந்த இன்ப நிலையில் இழிந்து அந்நிய மொழியை நீ வியந்து கொள்ளுகின்றாய்; ஆயினும் தாய் மொழியை இகழ்ந்து தவறு படாதே.

உடலை மினுக்கி உயிரை ஒழிப்பார் போல் கடல் கடந்து வந்த வெளி மொழியை விழைந்து உள்மொழியை இகழ்ந்து பலர் ஞான சூனியராய் ஈனமடைந்துள்ளார். அவ் வீன நிலையில் மான மனிதர் மடியலாகாது.

உலக ஆடம்பரமான அதனை மையல் மதியால் மனைவி போல் விழைந்து கொண்டாலும், உனது உரிமை மொழியை அருமைத் தாயாகப் பாவித்துப் பெருமை புரிய வேண்டும்.

மனைவியினும் தாய் எவ்வளவு சிறந்தவள்! அவளைத் தொழுவது தெய்வத்தைத் தொழுதபடியாம்; அதனால் புகழும் புண்ணியமும் விளையும்; என்றும் உனக்கு உயர்வு உண்டாகும். உண்மை தெளிந்து உன் மொழியைப் பேணி நன்மை அடைக என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-19, 6:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே