ஆர்த்துலையில் ஆடிக் களிக்கின்ற ஆமைபோல் நீடிக் களிக்கின்றார் - காட்சி, தருமதீபிகை 424

நேரிசை வெண்பா

நேற்றிருந்தார் இன்றுவெந்து நீறானார் என்றுநேர்
பார்த்திருந்தும் நல்லுறுதி பாராமல் - ஆர்த்துலையில்
ஆடிக் களிக்கின்ற ஆமைபோல் ஐயகோ
நீடிக் களிக்கின்றார் நின்று. 424

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நேற்று இருந்தவர் இன்று இறந்து .நீறாய் ஒழிதலை நேரே பார்த்திருந்தும் தம் உயிர்க்குறுதி யாதும் பாராமல் உலை நீரில் ஆடி மகிழ்ந்த ஆமைபோல் பெரும்பாலோர் புலைநீரில் நீடிக் களிக்கின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்வு நிழல் அசைவு போன்ற ஒரு மாயச் சாயல்; விரைந்து மாய்ந்து மறைந்து போவது, அது அழிந்து படுமுன் ஆவதை அடைந்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் அடையாது நிற்பது அவகேடாம் என இஃது உணர்த்துகின்றது.

’நேற்றிருந்தார் இன்று வெந்து நீறு ஆனார்’ என்றது நிலையாமையின் நிலை தெரிய வந்தது.

முகல்நாள் இருந்தவர்கள் மறுநாள் இறந்தார்கள் என்று எங்கும் இழவு மொழிகள் வளமாய் வளர்ந்து வருகின்றன. இறந்த உடல்களைச் சுடுகாட்டில் வைத்து எரித்து விடுதலால் எலும்பும் சாம்பலுமே எதிர்ப்படுகின்றன. எரிந்து கழிந்து காணப்படுகின்ற அவை இருந்து ஒழிந்து போனவர்களை எண்ணச் செய்கின்றன. சாம்பல் கண்டும் ஏம்பல் கண்டிலர்.

‘வெந்து நீறு ஆனார்’ என்றது அவர் முந்தியிருந்த சீரும் சிறப்பும் சிந்தனை செய்ய வந்தது. நீறு – சாம்பல்
.
மகுட மன்னர்களாய் மகிமை பெற்றிருந்தவரும் மாண்டு மண்ணாய் மறைந்து போகின்றார். அப் போக்கை நோக்கியும் தனக்கு ஆக்கம் நோக்காமல் இருப்பது அவ கேடாகின்றது.

கட்டளைக் கலித்துறை

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென் றேஅறி வாரி’ல்’லையே!. 7 திருத்தில்லை, பட்டினத்தார்

உலக வாழ்வின் நிலைமையை நேரில் கண்டும் தம்முயிர்க்கு உறுதிநலம் காணாமல் வறிதே ஒழிகின்றாரே! என்று மக்களுடைய இழிவான மதி கேட்டையும் பிழைபாட்டையும் நினைந்து பட்டினத்தார் இவ்வாறு பரிந்து வருந்தியிருக்கிறார்.

ஒரு பெரிய அரசன் இறந்து போனான். உடல் புதைக்கப்பட்டது. அந்தப் பிணத்தைத் தின்று வளர்ந்த கிருமிகள் சில வெளியே வந்தன, அவற்றை ஒரு கோழி தின்றது; அதனை மறுநாள் ஒரு குறவன் கொன்று தின்றான். அவ்வழியே சென்ற காயகர் என்னும் யோக சித்தர் அவனைக் கண்டார்; தம் அருகில் நின்ற செல்வனிடம், 'இந்தப் பிச்சைக்காரன் வயிற்றில் ஒருமுடி மன்னன் இன்று குடி புகுந்திருக்கிறான்’ என்று உல்லாச வினோதமாய்ச் சொல்லிப் போனார். அந்தச் செல்வன் திகைத்து வியந்து யோகியைத் தொடர்ந்து உண்மையை விவரமாகச் சொல்லியருளும்படி தொழுது வேண்டினான். அவர் முழுவதும் தெளிவாகச் சொன்னார். மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்து மறுகி உறுதி நலனை நாடி அவன் அரிய தவநெறியை மருவினான்.

நேரிசை வெண்பா

மன்னன் மடிந்து மனிதன் மலக்குடலில்
துன்னி உளபடியைச் சொல்லவே - உன்னி
உளமுருகி அன்றே உயிர்க்குறுதி நாடி
வளமொருவி நின்றான் வரைந்து.

உண்மையைக் கண்டு தெளியவே புன்மைநிலை ஒருவி இம்மை நலம் மருவி யாவரும் நன்மையைக் காண நேர்கின்றனர்.

சிறந்த முடிமன்னரும் இருந்த இடம் தடம் தெரியாமல் அழிந்து ஒழித்து போதலால் இவ்வுலக வாழ்வைச் சதம் என்.று இழிந்து போகாதே; நிலைமையைத் தெளிந்து நித்திய உண்மையை நேர்ந்து கொள்ளுக என உறுதியை ஓர்ந்து கொள்ள இது உரைத்தருளியது. மண் ஆண்டவர் மண்ணாய் மடிவதைக் கண்ணாரக் காட்டியது கதி காண வந்தது.

“A King may go a progress through the guts of a beggar.” (Hamlet 4-3)

"ஒரு அரசன் மடிந்து பிச்சைக்காரன் குடலில் போய்ச் சேரலாம்' என மேல் நாட்டுக் கவிஞரும் இவ்வுலக வாழ்வின் அநித்திய நிலைமையை இவ்வாறு குறித்திருக்கிறார்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. 336 நிலையாமை

ஒருவன் நேற்று இருந்தான்; இன்று இல்லை என்னும் பெருமைதான் இவ்வுலகில் பெரிதாயுளது எனப் பரிதாபத்தோடு விநயமான நகைச்சுவையும் கலந்து இது வந்துள்ளது. பெருமை என்றது சிரிப்புடைய குறிப்புமொழி. செத்த பிணம் என்னும் அந்த இழவு நிலையை உய்த்துணர உளன் என்றதற்கு ஏற்ப இலன் என்னாமல் இல்லை என்றது. உயிர் உள்ள நிலைமையை உயர்திணையால் உரைத்தார், அஃது இல்லாமையை இழிதிணையால் குறித்தார். காலம் உள்ள பொழுதே நல்லதை நாடிக் கொள்க என ஞாலம் அறிய மேலோர் இங்ஙனம் அருளியுள்ளனர்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

இன்று ளார்நாளை யில்லையெ னும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே. 9 - 84 திருக்காட்டுப்பள்ளி, திருநாவுக்கரசர் தேவாரம், ஐந்தாம் திருமுறை

மேலே குறித்த திருக்குறளை அடியொற்றி வந்து அநித்திய நிலையை விளக்கி ஆன்ம நலனை அடையும்படி இது உணர்த்தியுளது. திருநாவுக்கரசர் இவ்வாறு போதிக்கிருக்கின்றார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வென்றிலேன் புலன்க ளைந்தும்
..வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலேன் ஆத லாலே
..செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன்
..நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன்
..என்செய்வான் தோன்றி னேனே. 1 பொது, திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நேற்றுளார் இன்று மாளா
..நின்றனர் அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை அந்தோ
..போக்கினேன் வீணே காலம்
ஆற்றிலேன் அகண்டா னந்த
..அண்ணலே அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து
..திளைக்கவோ சிறிய னேனே. 16 ஆசையெனும், தாயுமானவர்

நன்றுளேன் அல்லேன் யார்க்கும்
..நல்லறம் புரியேன்; அன்றிக்
கொன்றுளேன்;. அற்றம் பார்க்கும்
..கூற்றுவன் விடுவான்.அல்லன்;
இன்றுளேன் நாளை இல்லேன்:
.யமன்வரும் போதுன் வெள்ளி
மன்றுளே இருந்த சொக்கே
..வழக்குநீ எண்சொல் வாயே? - பரஞ்சோதி முனிவர்

நிலையாமையை நினைந்து நெஞ்சம் கரைந்து இறைவனைச் சிந்தித்துப் பெரியோர்கள் இங்ஙனம் மறுகியுள்ளனர்.

உண்மை கண்டவர் உறுதி காண விரைகின்றார்,

மனித வாழ்க்கையின் அழிவு நிலைகளை நேரே கண்ணாரக் கண்டிருந்தும் மறுமைக்குரிய உறுதி நலனை உணராமல் உழலுகின்ற இழிவு கருதி ’பார்த்திருத்தும் நல்உறுதி பாராமல்’ என்றது. கேடு பார்த்தும் வீடு பாராமல் இருப்பது முழு மடமையான பழி படு நிலையாம்.

’உலையில் ஆடிக் களிக்கின்ற ஆமைபோல்’ என்றது உவமை வாசகமாய் வந்தது. உறுவதை உணராமல் உள்ளம் களித்துத் திரியும் மனித வாழ்க்கையின் நிலைமையைத் தெளிவுறுத்தப் பழமையில் நிகழ்ந்த ஒன்று கிழமையாய் ஈண்டு எடுத்துக் காட்ட நேர்ந்தது.

ஒரு வலைஞன் நீர் நிலையிலிருந்து ஒர் ஆமையைப் பிடித்தான். பின்பு அதனைப் பக்குவமாய் அவித்துத் தின்ன விழைந்தான். பெரிய மண்பானையில் நீரைப் பெய்து வைத்து அடுப்பில் ஏற்றி நெருப்பை மூட்டினான். அங்ஙனம் மூட்டிய தீ விறகில் பற்றிப் பானையில் சூடு தாக்குமுன் அந்த உலைத் தண்ணீரில் கிடந்த ஆமை பலபல எண்ணி உளம் மிக மகிழ்ந்தது. 'நாம் சுகமாய் இருந்து வாழ ஈண்டு நல்ல தண்ணீர் அமைந்தது; நீண்டகாலம் நிலையாய் இதில் இனிது வாழலாம்’ எனக் களித்துத் துள்ளி உலை நீரைச் சுற்றி சுற்றி உவந்து வந்தது; உடனே நெருப்புச் சுட்டது; உடல் வெந்து செத்தது; அவன் அதனை உண்டு மகிழ்ந்தான்.

மனிதனுடைய வாழ்வும் இவ்வாறே மருவியுள்ளது. நிலைமையை யாதும் உணராமல் பல மனக்கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சி மீதூர்ந்து களித்துத் திரிகின்றான்; உள்ளக் களிப்பால் உவந்து திரியுங்கால் காலன் வாய்ப்பட்டுக் கடிது தொலைகின்றான். இங்ஙனம் நிலைமை ஒத்திருத்தலால் உலை ஆமை இவனுக்கு உவமையாய் வந்தது.

இன்னிசை வெண்பா

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. 331 பேதைமை, நாலடியார்

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வளைத்துநின்(று) ஐவர் கள்வர்
..வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத்(து) உலையை ஏற்றித்
..தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின்(று) ஆடு கின்ற
..ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின்(று) ஆடு கின்றேன்
..என்செய்வான் தோன்றி னேனே? 6 பொது, திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை

மனித வாழ்வின் புலை நீர்மைக்கு உலை நீர் ஆமையை ஒப்புரைத்து மேலோர் இங்ஙனம் குறித்துள்ளனர். நிலைமைகள் நெடிது சிந்திக்கத் தக்கன.

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நெடுமணி யூபத்(து) இட்ட
..தவழ்நடை யாமை நீள்நீர்த்
தொடுமணிக் குவளைப் பட்டம்
..துணையொடு நினைப்பதே போல்
கடுமணிக் கயல்கண் நல்லார்
..காமமும் பொருளும் சிந்தித்(து)
அடுமணி ஆவி நீப்பார்
..அறிவினால் சிறிய நீரார். 2878 பிறவிகள் அறவுரை, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

யாக பலிக்காகக் கொண்டுவந்து தறியில் கட்டியுள்ள ஆமை தடாகத்தையும் தனது பெட்டையையும் நினைந்து பேதுறுதல் போல், புண்ணியம் செய்யாதவர் பொருளையும் போகங்களையும் அவாவி மருளராய் மறுகிச் சாவர் என இது அறிவித்துள்ளது.

நேரிசை ஆசிரியப்பா

தூமலர்த் தாமரைப் பூவின் அம்கண்,
மாஇதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன,
திருமுகத்(து) அலமரும் பெருமதர் மழைக்கண்,
அணிவளை முன்கை, ஆய்இதழ் மடந்தை
5 வார்முலை முற்றத்து நூல்இடை விலங்கினும்,

கவவுப் புலந்துறையும் கழிபெருங் காமத்(து)
இன்புறு நுகர்ச்சியின் சிறந்ததொன்(று) இல்' என
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்,
பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே!
10 கரியாப் பூவின் பெரியோர் ஆர,

அழல்எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனிநீ, முள்எயிற்று,
சில்மொழி, அரிவை தோளே பல்மலை
15 வெவ்அறை மருங்கின் வியன்சுரம்,
எவ்வம் கூர, இறந்தனம், யாமே. 361 அகநானூறு

இது தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்ற தலைவன் வழியிடையே தன் நெஞ்சை நோக்கிச் சொன்னது. தித்தியம் - வேள்விக்குண்டம். கயம் – தண்ணீர்த் தடாகம்.

அழகிய மங்கையை மருவியுள்ள இன்பமே சிறந்தது என்று எவ்வளவோ சொல்லியும் யாதும் கேளாமல் பொருள்மேல் ஆசைகொண்டு மருள் மண்டி வந்த மனமே! மலைகள் பல கடந்து வெகு தூரம் அடைந்தபின் மீண்டும் அவளை நினைந்து ஈண்டு நீ தவிப்பது வேள்விக் குண்டத்து ஆமை துடிப்பது போல் உள்ளது' என அவன் தன் உள்ளத்தை இடித்துக் கூறியிருக்கும் நிலையை இதில் விழைந்து நோக்கி உவந்து நிற்கின்றோம்.

அபாய நிலையில் உள்ள ஆமையைச் சுட்டிக் காட்டி மனித வாழ்வின் பரிதாபங்களைப் பெரியோர்கள் விளக்கியிருக்கும் பல வகைக் காட்சிகளும் புலமை மணம் கமழ்ந்து சுவை சுரந்து திகழ்கின்றன. உறுதி நலங்கள் தெளிவுற உணர்வு நலங்கள் வருகின்றன. விளிவு கண்டு விழுமிய நிலையைக் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-19, 3:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே