எடுத்த உடம்பழியும் முன்னே இவண்நீ அடுத்த பயனை அடைக - வாழ்நாள், தருமதீபிகை 434

நேரிசை வெண்பா

எடுத்த உடம்பழியும் முன்னே இவண்நீ
அடுத்த பயனை அடைக - விடுத்திருந்தால்
பாழாய்க் கழித்த பழிநாள னாய்த்துயரில்
ஆழா அழிவை அறி. 434

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உடல் அழிந்துபடுமுன் உயிர்க்கு உரிய பயனை அடைந்து கொள்க; அடையாயேல் பாழான பழியாளனாய் இழிந்து அழிதுயரில் ஆழ்ந்து ஒழிவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உயிர்நலன் காண்க என்கின்றது.

தேக நிலையை எதிரறிந்து தேகிக்கு உறுதிநலனை ஓர்ந்து கொள்ளுகின்றவன் எவனோ அவனே பிறவிப்பேறு பெற்ற பெரியவனாகின்றான். அங்ஙனம் கொள்ளாதவன் உலகநிலையில் எவ்வளவு உயர்ந்தவனாயிருந்தாலும் இழிந்தவனாய்க் கழிந்தே போகின்றான். இனிய கதியை இழந்து நிற்பது கொடிய கேடாம்.

இந்தப் பிறவியில் வினைவயத்தால் மருவி வந்துள்ள மனித தேகத்தை ’எடுத்த உடம்பு’ என்றது. சரீரம் நிலையில்லாதது; அழியும் காலம் அறிய முடியாததாதலால் அது நல்ல நிலையில் உள்ளபோதே உயிர்க்குறுதி செய்து கொள்வது உயர் ஞானமாம். மெய்யுணர்வால் உய்தி பெறாவழி வெய்ய துயர்களாம்.

’அடுத்த பயனை அடைக’ அரிய மனித உடம்பை எடுத்து வந்த ஒருவன் அதனால் அடையவுரிய உயர் பயன் யாதெனின், வேறொரு பிறவியை அடையாமையேயாம் பிறவி துன்பமுடையது; பிறவாமை இன்பமானதாதலின்,.அது வெறுக்க நேர்ந்தது; இது வேண்ட நின்றது.

எவ்வளவு உயர்ந்த வாழ்வில் பிறந்திருந்தாலும் அல்லல்களும், கவலைகளும், அவலங்களுமே நிறைந்துள்ளமையால் பிறவி வேண்டாம் என்றே மெய்யுணர்வுடையார் யாவரும் யாண்டும் ஆண்டவனை நோக்கி வேண்டி நிற்கின்றனர்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வேதநூல் பிராயம் நூறு
..மனிசர்தாம் புகுவ ரேனும்
பாதியும் உறங்கிப் போகும்:
..நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன(து) ஆகும்;
..பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேணடேன்
..அரங்கமா நகரு ளானே. – திருமாலை

பிறவியிலுள்ள அல்லல்களை எல்லாம் சுட்டிக்காட்டித் தனக்கு இனிமேல் பிறவியே வேண்டாம் என்று ஆழ்வார் இவ்வாறு சொல்லியுள்ளார். வாழ்வின் அனுபவங்கள் உணர வந்தன.

மனிதனுக்குப் பூரணமான வயது நூறு. அது முழுவதும் கிடைப்பதரிது; கோடியில் ஒருவனுக்கும் கூடாத அது ஒருவேளை கூடினாலும் உறக்கம் முதலியவற்றால் முக்கால் பாகத்திற்கு மேல் வீணே ஒழிந்து போகும்; மீதமாய் எஞ்சியுள்ளது மிகவும் கொஞ்சம்; அதுவும் துன்ப மயம் என நெஞ்சம்.அஞ்சியிருக்கிறார்.

மனித வாழ்வு எவ்வழியும் துயரங்கள் அடர்ந்து தொல்லைகள் தொடர்ந்திருத்தலால் யாண்டும் எள்ளி இகழ நேர்ந்தது.

Our days begin with trouble here,
Our life is but a span,
And cruel death is always near,
So frail a thing is man. - N. E. Primer

’நமது வாழ்நாள் துயரங்களில் தோன்றியது; உயிர்வாழ்வு மிகவும் குறுகியது; கொடிய மரணம் எப்பொழுதும் கைநீட்டியுள்ளது; மனிதநிலை மிகவும் பரிதாபமானது' என மேல்நாட்டுக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிறார்,

ஆயுள்நாளும் கழிந்து கொண்டே இருக்கின்றது: சாவு நேருமுன் ஆவதை விரைந்து செய்து கொள்வது நல்லது.

நேரிசை வெண்பா

இன்றுளார் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும் - நின்ற
கருமத்தர் அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமந் தலைநிற்றல் நன்று. 20

மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை - தன்னைத்
துணித்தானும் தூங்கா(து) அறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு. 21 அறநெறிச்சாரம்

தரவு கொச்சகக் கலிப்பா

இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றவல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்கு என்றுமென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். 41 வளையாபதி

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

இளமையும் எழிலும் வானத்(து)
..இடுவிலின் ஈண்டை மாயும்;
வளமையும் கிளையும் வாரிப்
..புதியதன் வரவு போலும்;
வெளியிடை விளக்கின் வீயும்
..ஆயுவும் என்று வீட்டுக்(கு)
உளபகல் ஊக்கம் செய்வர்
..உணர்வினால் பெரிய நீரார். - மேருமந்தரம்

இவை ஈண்டு எண்ணத் தக்கன. கவிகளை ஊன்றி நோக்கிப் பொருள் நிலைகளை ஓர்ந்து கொள்ள வேண்டும். நல்ல மேதைகள் நாளின் கழிவைக் கருதியுணர்ந்து உள்ளமிரங்கி உறுதிநலங்களை உரிமையுடன் உரைத்துள்ளனர். அவருடைய அறிவும் பண்பாடும் மறுமை நோக்கமும் உரைகளில் ஒளிர்கின்றன.

இந்த ஞாலத்தின் வாழ்வு விரைந்து கழிந்து மறைந்து போவதாதலால் உயிர் போகுமுன் அந்த இடத்திற்கு உயர்ந்த கருவூலத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் எல்லையில்லாத அல்லல்களும் இழிவுகளும் அங்கே அடைய நேர்வீர்! என நேர்வதை நெஞ்சு தெளிய மேலோர் உணர்த்தியருளி உய்தி காட்டியுள்ளார்.

நேரிசை வெண்பா

ஆட்பார்த் துழலும் அருளில்கூற்(று) உண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 20 இளமை நிலையாமை, நாலடியார்

காலனுடைய கொடுமையைக் கண் காணச் செய்து காலமுள்ள பொழுதே கதி காணுங்கள் என்ற இது போதித்திருக்கின்றது. மிகுந்த பிரசவ வேதனைப்பட்டு ஒருத்தி தலைக்குழந்தையை வருந்திப் பெற்றாள்: பிறந்தவுடனே அந்தக் குழந்தை இறந்து விட்டது; தாயுள்ளம் துடித்து அல்றியழுதாள். அந்தப் பரிதாப நிலையைப் பார்த்து நின்ற புலவர் உலகோரை நோக்கிப் பரிந்து பாடிய பாட்டுயிது. பீள் – கரு, தோள்கோப்பு – தோளில் சுமந்து செல்லும் கட்டுச்சோறு.

வேற்றூருக்குப் போகின்ற ஒருவன் முன்னெச்சரிக்கையாய்க் கையில் உணவு கொண்டு போனால் சென்ற இடத்தில் யாதொரு கவலையுமின்றி உண்டு மகிழ்கின்றான். இல்லையேல் பசித்துயரால் துடித்து அயர்கின்றான். இவ்வுலகை விட்டு அயலே போகின்றவர் அங்கே மறுமைக்கு உரிமையான தருமத்தை இங்கேயே கைக்கொண்டு செல்ல வேண்டும்; இல்லாவிடின் ஆண்டு அல்லலேயாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் / விளம் மா தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வேற்றுவர் இல்லா நுமர்ஊர்க்கே
..செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்றுணாக் கொள்ளா(து) அடிபுறத்
..துவைப்பீரே அல்லீர் போலும்
கூற்றம்கொண்(டு) ஓடத் தமியேகொ
..டுநெறிக்கண் செல்லும் போழ்தின்
ஆற்றுணாக் கொள்ளீர் அழகலால்
..அறிவொன்றும் இலிரே போலும்.. 1550

கேமசரியார் இலம்பகம், சீவக சிந்தாமணி

நல்ல உறவினர் உள்ள ஊருக்குப் போனாலும் கையில் உணவுடன் போகின்றீர். அங்ஙனம் உணர்வுடைய நீர் யாதொரு நாதியும் இல்லாத அயலிடத்துக்குப் போக நேர்ந்த போது ஏதும் துணை கொள்ளாதிருப்பது இழி மடமையாம் என இகழ்ந்து வந்துள்ள இதன் பொருளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும்.

மறுமைக்குரிய உறுதித்துணை தருமமே; அதனை விரைவில் செய்து கொள்வது நன்மையாம். காலம் அரிய பயனுடையது; அதனை வறிது கழிக்கலாகாது. ’நாள் செய்வது கேள் செய்யாது’ என்பது பழமொழி. இது விழுமிய பொருளுடையது. காலத்தை வீணாக்காமல் கருதி ஒழுகுபவன் அரிய பல உறுதிநலங்களை எளிதே அடைந்து கொள்கின்றான். பொழுதைப் பழுதாக்கினால் பின்பு அழுது அலறினாலும் அடைய முடியாது.

நேரிசை வெண்பா

பழுதே பலபகலும் போயினஎன்(று) அஞ்சி
அழுதேன்; அரவணைமேல் கண்டு - தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண்வளரும் செங்கண்
அடலோத வண்ணன் அடி. - இயற்பா

தமது இளமையில் சிலகாலம் தெய்வ சிந்தனையின்றிப் பழுதானதை நினைந்து பொய்கையாழ்வார் அழுதுள்ளமையை இதில் அறிந்து உருகுகின்றோம். வாழ்நாளில் ஒருகணம் வீணானால் அது தருமத்தையும், தெய்வத்தையும் இழந்து பாழாய்ப் பழிபடுகின்றது. நல்ல நாளைப் பாழாக்குகின்றவன் பொல்லாத பாவி ஆகின்றான். உயிர் நிலையை ஊக்கி உயர்நலனை நோக்குக.

உயிர்க்கு இனியதாய் அமைந்த நாளைப் பாழாக்கினவன் என்றும் துன்பத்தில் ஆழ்ந்து தொலைவதை ’துயரில் ஆழா அழிவை‘ என்றது’,

நாள் நலம் பல தருவது; அதனை வீணே கழியவிடின் வெந்துயர் விளையும்; அதன் நீர்மையைக் கூர்மையாக ஓர்ந்து சீர்மை செய்து கொள்பவன் தெய்வீக நிலையனாய் உய்திநலம் காண்கிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-19, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே