மாமி வலிய மருமகள்முன் தானடங்கி நிற்கும் தகைமைபோல் - தாய்மொழி, தருமதீபிகை 179

நேரிசை வெண்பா

மானமுள்ள மாமி வலிய மருமகள்முன்
தானடங்கி நிற்கும் தகைமைபோல் - ஞானமுயர்
நற்றமிழும் இந்நாட்டில் நண்ணியுள்ள ஆங்கிலத்தால்
பற்றழிந்த(து) என்பர் பலர். 179

- தாய்மொழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொல்லாத மருமகள் எதிரே நல்ல மானமுள்ள மாமி அடங்கி நிற்றல் போல் ஞான நலங்கனிந்த நமது தாய்மொழி ஆங்கிலத்தால் நிலைகுலைந்து உள்ளது என அறிஞர் பலர் அவல மிகுந்து கவலை உறுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். தமிழ் மொழியின் தற்கால நிலைமையை உணர்த்தியபடியிது;

இந்நாட்டில் தலை நீட்டித் திரியும் தமிழர் நிலையினை முன்னம் கண்டோம்; இதில் தமிழின் நிலைமையைக் காண வந்துள்ளோம். ஆங்கிலம் என்பது இங்கிலாந்து தேசத்தில் பேசப்படுகின்ற மொழி. அது இந்தியாவில் வந்து ஏறி இத்தேசத்தவரைப் பாசப் படுத்தி ஆட்சி புரியும் அதிசய நிலையை எண்ணுந்தோறும் வியப்பும் விம்மிதமும் விசைத்து எழுகின்றன.

ஆங்கில மோகம் இந்நாட்டில் ஓங்கியுள்ளது போல வேறு யாங்கனும் இவ்வளவு நிலையில் ஓங்கவில்லை. அதனால் தமிழ் தாழ்ந்துள்ளது போல் மற்ற எம்மொழியும் தாழவில்லை.

'தமிழ் நூல்களைத் தலைகீழாக முழுதும் படித்தாலும் ஒரு ஓலைத்தடுக்குத் தானே கிடைக்கும்; ஆங்கிலத்தில் இாண்டொரு எழுத்துப் படித்தாலும் நல்ல நாற்காலி கிடைக்குமே!’ என்று பாட்டிமாரும் பாராட்ட நேர்ந்தார். இதனால் இந்நாட்டில் அதன் சீராட்டு நிலை எவ்வளவு செழித்துள்ளது என்பது தெளிவாம்.

தமிழை மானம் உள்ள மாமி என்றது, ஆங்கிலத்தை வலிய மருமகள் என்றது.

இந்த உவமக் குறிப்புகளால் பொருள் நிலைகளை ஓர்ந்து நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நாட்டவர் ஆங்கில வயப்பட்டுக் தமது தாய்மொழியை அவமதித்திருக்கும் பாங்கினை ஆங்கு அறிந்தோம்; ஈங்கு அதன் இயல்பினை அறிகின்றோம்.

பெண்டாட்டியைக் கொண்டாடிப் பெற்ற தாயைத் திண்டாட விட்டிருக்கும் பேதை மக்கள் நிலை பெரிதும் இ்ரங்கத் தக்கது.

பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து. 907 பெண்வழிச் சேரல்

என்றபடி நம்மவர் நிலை புன்மை படிந்து புலைமிகுந்துள்ளது.

வீட்டுக்கு வந்த மருமகள் மேட்டிமை காட்டுவதெல்லாம் வாய்த்த கணவனது வாய் இளிப்பாலேயாம். உரியவன் உணர்வுடையனாயின், உற்ற மனைவியினும் பெற்ற தாயைப் பெருமைப்படுத்தி வருவான்; அதனால் அவளும் வாயடங்கியிருப்பாள். அவன் இளிச்சவாயனாயின் வந்தவள் எல்லாரையும் தனக்குள் அடக்கிப் பொல்லாதவளாய்ப் பொங்கி நிற்பாள்.

அத்தகைய பொல்லாத வாயாடியான மருமகள் எதிரே நல்ல மரியாதையுடைய மாமி மறுகி இருத்தல்போல் ஆங்கிலத்தின் முன்னே தமிழ் தனது இனிய பொலிவிழந்த இன்னல் நிலையில் நலிவடைந்துள்ளது.

உண்மையை உணர்ந்து உரிமைக்கு முதலில் பெருமை கொடுத்து மக்கள் உயர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-19, 7:55 pm)
பார்வை : 32

மேலே