பல்லார் இடையே பரிகாசம் செய்து மனங்களிக்கும் பொல்லார் - குறும்பு, தருமதீபிகை 170

நேரிசை வெண்பா

பல்லார் இடையே பரிகாசம் செய்து,வாய்
வல்லார் எனவே மனங்களிக்கும்; - பொல்லாரை
நாக்குத்தேள் என்றெண்ணி நண்ணாதே எவ்வழியும்
நீக்கி விடுக நெடிது. 170

- குறும்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பலர் நடுவே பரிகாச வார்த்தைகளைப் பேசி அதனால் தம்மைச் சமர்த்தாகக் கருதிக் களிக்கும் இழிமக்களை நாக்குத் தேள்களாக நினைத்து அயலே நீக்கி விடுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நண்ணாதே – நெருங்காதே, நெடிது – நெடுந்தூரம், வல்லார் எனவே மனம் களிக்கும் என்றது அப்பொல்லாதாரது புன்மை நிலை உணர வந்தது.

பிறரைக் குறும்பாக இகழ்ந்து பேசி அதில் தம்மைக் கெட்டிக்காரராக எண்ணிக் களித்தலால், அந்த மட்டிகளுடைய வாழ்வும் சூழ்வும் வறிதே பாழ்பட்டுள்ளமை வெளிப்பட்டு நின்றது.

புலைத்தீமையின் நிலை நோக்கி, நல்லது பேசும் வாயால் நவை பேசி வல்லவர் எனச் செருக்கும் புல்லியரைப் பொல்லார் என்றது

நாக்குத் தேள் - நாக்கையுடைய தேள். கருந்தேள், செந்தேள், கொள்ளித்தேள் எனத் தேளில் பலவகை உண்டு. அந்தப் பழைய சிருட்டிகளினும் வேறுபாடுடையதாய் இங்கே இது ஒரு புதுமை தோன்ற வந்தது.

தேளுக்குக் கொடுக்கில் விடம்; குறும்பனுக்கு நாக்கில் விடம்; தேள் கிட்டவந்து நம் உடம்பை ஒட்டிக் கொட்டிய பொழுதுதான் கடுத்து வருத்தும்; குறும்பன் எட்ட நின்று நாவை அசைத்தாலே சொல்லில் விடம் துள்ளிப் பாய்ந்து உள்ளத்தைச் சுட்டு உயிர் துடிக்கச் செய்யும். தேள் கடுப்பு ஒரு நாள் கழிப்பின் தானாக நீங்கிப்போம். அந்தப் பொல்லாத சொல் கடுப்பு ஆயுள் வரையும் தீயுள் வைத்தது போல் நோயுள் வைக்கும்.

குறுமொழியாளனை உருவம் நோக்கி ஆள் என எண்ணி அருகே அணுகாதே; ஒரு கொடிய நாக்குத் தேள் என்றுணர்ந்து அயலே விரைந்து தள்ளிவிடு.

வீணே பிறரைப் பரிகசித்துப் பழிக்கும் இழிகுறும்பால் அழிதுயர் நேருமாதலால் அவரை எவ்வழியும் நெருங்காமல் அஞ்சி நீங்க வேண்டும்.

இன்னிசை வெண்பா

பகையின்று பல்லார் பழியெடுத்(து) ஓதி
நகையொன்றே நன்பயனாய்க் கொள்வான் - பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போல்
கைவிதிர்த்(து) அஞ்சப் படும். 73 நீதிநெறிவிளக்கம்

பழி கூறுவோனைக் கொலைகாரனாக அஞ்சவேண்டும் என இஃது உணர்த்தும் அழகை ஊன்றிப் பார்க்க.வேண்டும் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-19, 6:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே