தன்மொழியைத் தேராத் தனையனும் மன்னொழிந்து நிற்பர் மருண்டு - தாய்மொழி, தருமதீபிகை 180

நேரிசை வெண்பா

தாய்ப்பால் இழந்த குழவியும் தாழாத
நோய்ப்பால் விழுந்த மனிதனும் - வாய்ப்பான
தன்மொழியைத் தேராத் தனையனும் இம்மூவர்
மன்னொழிந்து நிற்பர் மருண்டு. 180

- தாய்மொழி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தாயின் அமுதப் பால் இழந்த பிள்ளையும், தீராத நோயில் விழுந்த மனிதனும், தனது சீரான தாய் மொழியை நன்கு கல்லாத மகனும் வலியிழந்து மெலிவடைந்து மதியழிந்து மருண்டு கிடப்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனக்குப் பிறப்புரிமையாய் வாய்த்த பேச்சு மொழியை தன் மொழி என்றது. வீட்டுள் வழங்கும் நாட்டு மொழியை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; அக்கல்வி எல்லா நலங்களையும் இனிது நல்கும்; அங்ஙனம் கல்லாமல் கைவிடின் பொல்லாத பிழைகள் பல புகுந்து வருத்தும் என இதுவரை அறிந்து வந்தோம்; இப்பாடலில் இரண்டு உவமைகளோடு இணைத்து அதன் நிலைமையும் தலைமையும் தெளிவாக உணர்த்தப்படுகின்றன.

ஈன்ற தாயினுடைய பால் குழந்தைக்கு ஆன்ற உறுதியாம். அப்பால் இன்றி வேறு எப்பால் ஊட்டினும் அது அவ்வளவு உரம் ஆகாது. அதுபோல, இயற்கை யுரிமையாய் இனிதமைந்துள்ள உணர்வு மொழியை உயிர்க்கு உறுதியாய் ஓர்ந்து கொள்ள வேண்டும்.

தாழாத நோய் - நீங்காத கொடிய பிணி. பால் - இடம்.

தீராத நோய் வாய்ப்பட்ட மனிதன் உடலுறுதி குன்றித் துயருழந்து உயிர் அயர்ந்து உழல்வான்.

தேர்தல் - கல்வியை நன்கு கற்றுத் தெளிதல். மன் - வலிமை.

உரிய தாய் மொழியை ஊன்றிப் பயின்று பொருள் நலங்களை ஓர்ந்து தேர்ந்து கொள்ளாத பொழுது உணர்வு வலிமை குன்றி ஒளிமழுங்கிப் போவதால் அம்மனிதன் உருவுடையனாய் வெளியில் அலையினும் உள்ளே உயிர் நிலையில் மெலிந்து இழிந்து நிற்பான்.

பால் இழந்த குழந்தையும், நோயுழந்த மனிதனும் உடல் உரங்குன்றி உயிர் தளர்ந்து படுவர் ஆதலால் நூல் இழந்த மகனோடு அவர் ஈண்டு எண்ண வந்தனர்.

மொழியைத் கல்லாத பொழுது விழையும் பழி துயரங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுமாறு எளிதாய் எடுத்துக் காட்டிய படியிது.

மனிதனும் மொழியும்

எண்ணரும் பிறப்பில் யாவும் கடந்து
மண்ணிடை உயர்ந்த மானுட மாய்வரல்
புண்ணிய விளைவின் பொலிவே என்ப:
விலங்கினும் மனிதன் பெரியவன் என்பது
5 பேசும் வகையில் பெருகி வந்தது:

பிள்ளையில் தொடர்ந்து பேசிய மொழியே
ஒள்ளிய உயிரின் உயர்தாய் மொழியாய்த்
தெள்ளிய நீர்மையில் சிறந்து நின்றது:
பிறந்த நாடும் பேசும் மொழியும்
10 சிறந்த தாயெனும் சீர்மையில் அமைந்தன:

வாய்மொழி யானவத் தாய்மொழி ஒன்றே
அறிவருள் ஈகை ஆண்மை வீரம்
மானம் மேன்மை மாண்புடன் நல்கும்:
உயிரின் கிழமையாய் உற்றவம் மொழியைப்
15 பயிலுந் தோறும் பான்மை மிகப்பெறும்:

உரிமையின் அமைந்ததை உவந்து பேணின்
மறுமை நலங்கள் மருவி
இருமையும் பெருமையாய் இன்புற வருமே.

தன் சொந்த மொழியை நன்கு பயின்று மனிதன் எந்த வழியும் சிந்தை தெளிய வேண்டும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-19, 6:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே