அதி நவீன F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை

உலகெங்கும் இப்போது பரவி வரும் ஒரு ஜோக் இது.

பாகிஸ்தானுக்கு F 16 ரக விமானங்களை அமெரிக்கா சப்ளை செய்தவுடன் அதன் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்த பாகிஸ்தான் பைலட்டுகள் அதை இயக்குவதற்கான பயிற்சி பெற அமெரிக்க பயிற்சியாளரை அழைத்தனர். அவர் வந்து விரிவாக அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் விளக்க அதை பாகிஸ்தான் பைலட்டுகள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.இறுதியாக பயிற்சி முடியும் சமயம் ஒரு பாகிஸ்தான் பைலட், “சார், எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி தரை இறக்குவது என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.

அதற்கு அமெரிக்க பயிற்சியாளர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அதை இந்திய விமானிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.



சமீபத்திய பாகிஸ்தானின் எல்லை மீறலிலும், தீவிரவாதிகளின் தாக்குதலிலும் இந்திய விமானப்படையின் சாகஸம் உலகையே வியக்க வைத்து விட்டது.

அதி நவீன F 16 விமானங்கள் நமது விமானப்படையை அச்சுறுத்த முடியவில்லை.

பழைய கால போரில் பாட்டன் டாங்கிகள் நம்மிடம் வாங்கிய அடியை அமெரிக்காவே பார்த்து அயர்ந்து போனதில்லையா!

இப்போது F16 காலம்.

F16 பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டியது நமது கடமை!

அமெரிக்கக் கண்டுபிடிப்பான F16 Fighting Falcon அதி நவீன போர் விமானம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட F16 விமானங்கள் அமெரிக்காவில் உள்ளன. பாகிஸ்தானில் இப்போது 85 F16 ரக விமானங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.

வானில் நேருக்கு நேர் சண்டை, தரையில் உள்ளவற்றின் மீது தாக்குதல், மின்னணுப் போர் என இப்படிப் பல வகையிலும் F16 தனது சாகஸ வேலைகளைக் காட்ட வல்லது.

இதன் போரிடும் வட்ட எல்லை மற்ற எல்லா ஃபைட்டர் விமானங்களின் அளவை மீறியது. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் இது பறக்கும்; போரிடும். தாழ்ந்து பறக்கும் விமானங்களைக் கூட இது இனம் கண்டு காட்டி விடும்.

500 மைல்களுக்கு மேலும் பறக்க வல்ல இது ஆயுதங்களை குறி பார்த்து வீசி இலக்கு தவறாமல் தாக்கும்; எதிரி விமானங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.




இதன் தயாரிப்பில் இதற்கு முன்னர் இருந்த F15 மற்றும் F111 ரக விமானங்களில் இருந்த அற்புதமான அம்சங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. பராமரிப்பு செலவைக் குறைத்து, எடையையும் குறைத்து வடிவமைக்கப்பட்டது இது. எரிபொருள் நிரப்பிய நிலையில் இது ஒன்பது G அளவு தாக்குப் பிடிக்கும் அதாவது புவி ஈர்ப்பு விசையின் ஒன்பது மடங்கு அளவு தாக்குப் பிடிக்கும். இப்போதிருக்கும் இதர விமானங்கள் இந்த நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

பைலட் அமரும் காக்பிட் தெளிவான பார்வையை பைலட்டுக்கு அளிக்கும். சீட்டின் பின் இருக்கையின் டிகிரி 13 இலிருந்து 30 டிகிரி என்ற பெரிய மாறுதலை அடைந்துள்ளதால் பைலட்டுக்கு அதிக வசதியைத் தரும்.

1981 நவம்பரில் முதன் முதலாகப் பறக்க ஆரம்பித்த F16 விமானம், இரவு நேரத் தாக்குதலுக்கும் உகந்த ஒன்று.

2001, செப்டம்பரிலிருந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் செயல்களில் F16 வெற்றிகரமாக இயக்கப்படுவது குறிப்பிடத் தகுந்த ஒன்று.

இப்படிப்பட்ட விமானங்களை எதிர்கொண்டு தான் நாம் நமது வான் ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

2019, பிப்ரவரி இறுதி வாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு F 16 ரக விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தியதாக நமது பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அந்தச் செய்தியின் முழுத் தாக்கத்தையும் உணர இவ்வளவு விவரங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது வீரர்களின் திறமையை உணர்ந்து அவர்களைப் போற்ற வேண்டும்.


இந்த நிலையில், நமது விமானப்படையை வலுப்படுத்த அதி நவீன ரக விமானங்களை வாங்க வேண்டும் என நமது விமானப்படை தலைமை கூறி வருகிறது.

அதை இந்திய மக்களும் ஆமோதிக்க இப்போது வலுவான நிலையில் நமது விமானப்படை உருமாற்றம் பெற்று வருகிறது! நம்மை பங்கப்படுத்த முயலும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கத் தயாராக ஆகி வருகிறது.

வாழிய பாரதம்! வெல்க பாரதம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..


டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலம் அது. அக்னி II என்ற Intermediate Range Ballistic Missile எனப்படும் இடைநிலை வீச்சு எறி ஏவுகணை தயாராகி விட்டது. ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அதை விண்ணில் ஏவ வேண்டியது தான் பாக்கி. ஆனால் அதை கலாம் தள்ளிப் போட்டதற்கான காரணம் இயற்கை மீது அவர் வைத்திருந்த நேசம் தான். ஒரிஸ்ஸா கடற்கரையோரம் இருந்த வீலர் தீவில் (Wheeler Island) தான் அது ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள மணல் திட்டில் தான் மிக மிக அருகி வந்த இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (Olive Ridley Turtles) தங்கள் இனப் பெருக்கத்தைச் செய்து முட்டை இட்டு வந்தன. நம்ப முடியாத தொலைவிலிருந்து – அதாவது ஆஸ்திரேலியாவிலிருந்து அவை இவ்வளவு தூரம் வந்து ஒரு குறிப்பிட்ட இடமான இந்தத் தீவைத் தேர்ந்தெடுத்து வருடம் தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்து முட்டையிடுவது வழக்கம். ஒரிஸ்ஸாவில் இருந்த இயற்கை ஆர்வலர்கள் இந்த கடல் ஆமைகளுக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதே என்று கவலைப்பட்டு கலாமை அணுகினர். மிக முக்கியமான பாதுகாப்புப் பணியில் இதை மிக சுலபமாக தலைமை ஆலோசகரான கலாம் நிராகரித்து விட்டு திட்டமிட்டபடி சோதனையை நடத்த முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் படி அந்தத் தீவில் இருந்த சோதனைக்கூட நிலையத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளும் சுமார் ஐந்து மாத காலம் மிக மெதுவாக எரியும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் தங்கள் வேலைகளைச் செய்து வந்தனர். ஆமைகளைப் பாதிக்கக்கூடாது என்று மின்சக்தி விளக்குகளையோ அல்லது அதிக வெளிச்சத்தையோ அவர்கள் ஐந்து மாதம் பயன்படுத்தவே இல்லை.

கடல் ஆமைகளின் இனப்பெருக்க சீஸன் – காலம் – முடிந்தவுடன், ‘மதிப்பிற்குரிய அந்த ஆஸ்திரேலிய விருந்தாளிகள்’ அனைவரும் புறப்பட்டுப் போனதை உறுதி செய்த பின்னர் அக்னி II ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது; பெரிய வெற்றியை அடைந்தது.

இந்தியாவில் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை கலாம் எப்படி அணுவளவும் பிசகாமல் பாதுகாத்தார் என்பதை அனைவரும் அறிந்து அவரை வெகுவாகப் போற்றினர்.

யாருக்கும் நாம் தீங்கு செய்ய மாட்டோம்; வம்புக்கு வந்தவரை சும்மா விட மாட்டோம் என்பது தான் நமது பாதுகாப்புத் துறையினரின் இலட்சியம்! அதை உரமிட்டு வளர்த்தவர் அப்துல்கலாம்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2019, ஏப்ரல் 1-15 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு ஐந்தாம் கட்டுரை – அத்தியாயம் 421

அதி நவீன F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை!

ச.நாகராஜன்

எழுதியவர் : (18-Apr-19, 7:34 pm)
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே