நம்பிக்கையுடன் கூடிய இந்தியாவின் 25 ஆண்டுகால வளர்ச்சியை கொண்டாடுவோம்

இடதுசாரி தத்துவத்திற்கு புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் நான் படித்துக் கொண்டிருந்தேன். அந்த கல்லூரி வளாகத்தில் நான் கல்வி கற்க இணைந்த போது, மார்க்ஸிஸ – லெனினிச தத்துவங்கள் வழக்கத்தில் இருந்து வந்தன. சில சறுக்கல்கள் இருந்தாலும், அப்போது சோவியத் யூனியன், முக்கிய சக்தியாக உலகில் இருந்து வந்தது. சோவியத், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்த மிக்காயீல் கோர்பசேவ் கட்சிக்குள் கொண்டு வர வேண்டிய சீர்த்திருங்கள் பற்றியும், சோவியத்தில் சமூக மற்றும் அரசியல் சீர்த்திருத்தங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிகளை போல் சோவியத் யூனியனிலும் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆட்சி சிதலமடையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்தியாவிலும் இடதுசாரி கொள்கைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை பொருளாதாராத்திற்கான எந்த முயற்சிகளும் பிற்போக்கான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. மூன்றாம் உலக நாடுகளுக்கு, ஒரு மாதிரியாக கலப்பு பொருளாதாரத்தை இந்தியா பெருமையுடன் பின்பற்றி வந்தது.
ஆனால் 1994 இல் நான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தை விட்டு வெளியே வந்த போது, உரையாடல்கள் மாறியிருந்தன. கடைகள் வெறுப்பூட்டுபவையாக இருக்கவில்லை. தனியார் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. லைசன்ஸ் அனுமதி வழங்கும் முறை மாறி, சுதந்திரமாக தொழிற்சாலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் துவங்கலாயின. பொருளாதாராம் மேல் நோக்கி பறக்க தயாராக இருந்தது. எல்லாமே பார்ப்பதற்கு நன்றாக தோன்றியது.

1980 களில் நான் அந்த பல்கலைகழகத்தில் இணைந்த காலத்தில் எஸ்.டி.டி. பூத்கள் எல்லாம் புதிய வரவுகளாக இருந்தன. டெல்லியின் ஒவ்வொருத் தெருக்களிலும் அவைகள் முளைவிடத் துவங்கின. மற்ற நேரங்களை விட இரவு 11 மணிக்கு மேல் 4 இல் ஒரு பகுதி கால் ரேட்கள் என்பதால், வளாக மக்கள் அதுவரை காத்திருந்தனர். அதற்காக நீண்ட வரிசைகள் பயன்படுத்தப்பட்டன. மொபைல் போன்களும், வாட்ஸ் அப்பும் பயன்படுத்தாத காலமாக அது இருந்தது. ஸ்மார்ட் போனில் வெறும் ஒரு தொடுதலுடன், உலகின் எந்த மூலையிலிருந்தும், எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளத்தக்க வகையிலான இன்றைய காலத்தை போல் அல்லாத ஒரு காலமாக அது இருந்தது. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு தரை வழித் தொடர்பு கொள்ள இரண்டு மூன்று மணி நேரங்களை வீணடிக்க வேண்டியிருக்கும். ஒருவர், தனது அன்புக்குரியவரிடம் பேச வேண்டுமெனில் ட்ரங்க் கால் புக் செய்து, அதனை தொடர்ந்து சில மணி நேரம் காத்திருந்தாலே பேச முடியும் என்ற நிலை இருந்து வந்த காலம் அது.

மிகச் சில விமான தளங்களே இருந்து வந்தன. அந்த விமான தளங்கள் கூட நடைப்பாதையை போன்றிருந்தன. டெல்லி சர்வதேச விமான தளம், டெல்லி ரயில் நிலையத்தை விட சிறிதளவு நன்றாக இருந்தது. வான் வழிப் பயணம், நடுத்தர மக்களிடையே மிகவும் அபூர்வ ஒன்றாக இருந்தது. வசதி படைத்த மக்களின் ஏகபோக வாழ்க்கைக்குரியதாகவே அது இருந்து வந்தது. இன்றைய நிலையை போல், எண்ணற்ற தனியார் விமான கம்பெனிகள் போட்டி போடும் சூழல் அன்றைக்கு இல்லை. ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸும் மட்டுமே இருந்தன. மேலும் வெகுசில நகரங்களை இணைக்கும் வகையில் மட்டுமே விமான சேவைகள் இருந்தன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் குறித்து கேள்விப்பட்டதே கிடையாது. ஒற்றைத் திரை கொண்ட திரையரங்குகளே அன்று இருந்தன. ஒரு இளைஞனாக நான் 4 காட்சிகளை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். 12 முதல் 3, 3 முதல் 6, 6 முதல் 9 மற்றும் 9 முதல் 12 மணி வரையுள்ள காட்சிகள் அவை. படம் பார்க்க செல்வது மிகப் பெரிய குடும்ப உல்லாச பயணமாக இருந்தது. கேபிள் டிவிக்கள் இல்லை. தூர்தர்ஷன் மட்டுமே அன்று ஒளிபரப்பு சேவையை அளித்தது. அதில் வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பாகி வந்தது. தொலைக்காட்சி செய்திகளை பார்க்க வேண்டுமெனில் தூர்தர்ஷனில் தான் பார்க்க முடியும். அதில் வரும் செய்திகளை அரசு கட்டுப்படுத்தவும் செய்தது. தனியார் செய்தி சேனல்கள் என்று எதுவுமே இல்லை. டி.வி விவாதங்களும் இல்லை. டி.ஆர்.பி மதிப்பை ஏற்றிக் கொள்வதற்கான எந்தவொரு விரைந்தோட்டமும் இல்லை. முதன் முதலாக நான் முதல் வளைகுடா போரின் காலக்கட்டத்தில் தான் சிஎன்என் என்ற கேபிள் செய்தி சேனலை பற்றிக் கேள்விப்பட்டேன். நேரலை ஒளிபரப்பை இந்தியா பார்த்ததும் அப்போது தான்.

இந்தியா ஒரு வளரும் பொருளாதார சக்தியாக அப்போது இருக்கவில்லை. ஒரு ஏழை நாடாக அப்போது இருந்து வந்தது. பாம்பாட்டிகளுக்கும், சாதுக்களுக்கும், ரோட்டில் அலையும் பசுக்களுக்கும் பெயர் போன நாடாக இருந்தது. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கி தவித்தது. உலகமே இரு கம்யூனிச மற்றும் முதலாளித்துவ கொள்கைகளாக பிரிந்திருந்தது. இந்தியாவெங்கும் சமமாக லஞ்சஊழலும் பரந்து காணப்பட்டிருந்தது. போபார்ஸ் ஊழல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவாலாகவே இருந்தது. 1991 இல் சூழல்கள் மாறத் துவங்கின. நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்ற காலக்கட்டத்தில் நாடு திவாலாகும் நிலையில் இருந்தது. சர்வதேச அளவில் இருந்த கடன்பாக்கிகளே அதற்கு காரணம். இதனை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதானது. கம்யூனிச மாதிரிகள் இதற்கு மேலும் கவர்ச்சிகரமானவையாக தெரியவில்லை. கலப்பு பொருளாதாராம் என்ற இந்தியாவின் சோதனை வருந்தத் தக்கவகையில் தோல்வியில் முடிந்தது. இந்திய பொருளாதாரத்தை திறந்துவிடுவதை தவிர வேறு தேர்வுகள் எதுவுமே இல்லை. லைசன்ஸ் மூலம் அனுமதி வழங்கும் முறையை புறந்தள்ள வேண்டியிருந்தது. சந்தையின் தந்திரங்களை விளையாட அனுமதிக்க வேண்டியிருந்தது. லாப நோக்கமும், போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு வழக்கத்தை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிர்ஷ்டவசமாக, அரசு உலர்ந்து விடும் என மார்க்ஸ் கணித்ததற்கு மாறாக கம்யூனிச முறை வாடி போனது. நரசிம்ம ராவ், தைரியமான முடிவுகளை அப்போது எடுத்தார். எனது கருத்துப்படி, சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முகத்தை மாற்ற மேற்கொண்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களில் இதுவும் ஒன்று.

நரசிம்மராவுக்கு இது எளிதான விஷயமாக இருக்கவில்லை. ஒரு இளம் செய்தியாளராக நான் இருந்த போது, இந்த நாடு கணினிக்கு எந்த அளவு தடை போட்டிருந்தது என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். கணினி கருவியானது, வேலையை பறிக்கும் ஒரு கருவியாக பார்க்கப்பட்டது. வேலையில்லா சூழலை உருவாக்கும் என்ற பொதுவான எண்ணம் அதன் மீது இருந்திருந்தது. ஐ.எம்.எப்பும், உலக வங்கியும், உலக வர்த்தக மையம் மூலம் முதலாளித்துவம் இந்தியாவை மறுகாலனியாதிக்கத்திற்கு கொண்டு வரப்பார்க்கின்றன என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு சில தொழிற்வாதிகளுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே சந்தைமயமாக்கல் கொண்டு வரப்படுகிறது என்ற வாதமும் எழுந்தது. பன்னாட்டுக் கம்பெனிகள் கிழக்கிந்திய கம்பெனியை போல் இந்தியாவை 300 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அடிமைப்படுத்த போகின்றன என்றும் கூறப்பட்டது. இந்த வாதங்கள் எதுவுமே ராவை பாதிக்கவில்லை. இது சார்ந்து எழுந்த அரசியல் பிரச்சினையை அவர் எதிர்கொள்ள, பொருளாதார விஷயங்களை கையாளும் பொறுப்பை மன்மோகன்சிங்கிடம் அளித்தார் அவர். இந்த இருவரும், பல ஆச்சரியங்களை நடைமுறைப்படுத்தியதுடன், இந்திய பொருளாதாரம், மீண்டும் திரும்பி வராத ஒரு பாதையை நோக்கி பயணப்பட்டது.

தனியார்மயமாக்கலுக்கு எதிரான இரண்டு கம்முயூனிஸ கட்சிகள் ஆதரவோடு செயல்பட்ட எச்.டி.தேவெகெளடா மற்றும் ஐகே.குஜரால் அரசுகளும் கூட இதே கொள்கைகளை தொடரவேண்டி இருந்தது. வாஜ்பாய் அரசு, கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. 2004 இல் வாஜ்பாய் அரசு, மக்களின் நம்பிக்கையை இழக்கத் துவங்கிய நேரத்தில் இந்திய பொருளாதாரம் உயர் நிலையில் சென்று கொண்டிருந்தது. அந்த வருடம் 9% வளர்ச்சியைக் கண்டு வந்து, 2011 வரை தொடர்ந்தது. 2008 இல் மட்டும் உலக பொருளாதார வீழ்ச்சியின் போது சரிவை இந்தியாவும் சந்தித்தது. இன்று, இந்தியா உலகளவில் வேகமான வளர்ச்சி அடையும் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் நிகழும் ஒவ்வொரு செய்கையும் உலக அளவில் அதிர்வை ஏற்படுத்துகிறது.

இந்தியா பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இவ்வேளையில், அதன் வரலாறை திரும்பி பார்க்கிறேன். இனி இந்தியா ஒரு ஏழை நாடு இல்லை. அதிவேக வளர்ச்சியை காணும் நாடாக பார்க்கப்படுகிறது. புதிய நடுத்தர வர்கம் நம் நாட்டில் வளர்ந்து வருகிறது. தனி நபர் வாங்கும் சக்தி இன்று அதிகரித்துள்ளது. வெளியிடங்களில் உணவு அருந்துவது இன்று ஆடம்பரமில்லை, பழக்கமாகி உள்ளது. உலகில் விலையுயர்ந்த பிராண்டுகளை இந்தியர்கள் வாங்கத் துவங்கியுள்ளனர். தினமும் புதிய மால்கள் கட்டப்படுகிறது. இந்தியா பெரிய வாடிக்கையாளர்கள் சந்தையாக மாறியுள்ளது. இந்திய பிராண்டுகளும் வெளிநாடுகளில் கால் ஊன்றி அங்குள்ள சந்தையில் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. இந்திய சிஇஓ க்கள் அதிக வருமானம் பெற்று பெரிதும் மதிக்கப்படுகின்றனர். கூகிள், பெப்சி கோ, மைக்ரோசாப்ட் பேன்ற நிறுவனங்களில் இடம் பெற்று ஒரு புரட்சியை இந்தியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

1991இல் ஒரு சிலரிடம் மட்டுமே கார் இருந்தது, ஆனால் இன்றோ எல்லாரும் கார் வைத்துள்ளனர். இந்தியா இன்று தன்னம்பிக்கை நாடாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிமை நிலையில் இனி இந்தியா இல்லை, எந்தவித போட்டியைக் கண்டும் அஞ்சுவதும் இல்லை. உலக முதலீட்டின் இடமாக இந்தியா இன்று உருவாகியுள்ளது. மேலும் பல வளர்ச்சியை பெற வேண்டி இருப்பினும் இந்திய சந்தை சிறப்பாக உள்ளது. ஆனால் ஊழல் அதிகரித்துள்ளது. ஏழை, பணக்கார இடைவெளி பெருகி வருகிறது. கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளாது. இவ்வுலகை இந்தியா வெல்ல, கல்வி மற்றும் மருத்துவத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். நமது ஜனநாயகம் சற்று குழப்ப நிலையிலே உள்ளது. ஆனால் கடந்த 25 ஆண்டுகள், இந்தியா தன் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஆண்டாக இருந்துள்ளது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நம் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதை என்னால் காண முடிகிறது.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

எழுதியவர் : (18-Apr-19, 8:02 pm)
பார்வை : 25

மேலே