470 கடல்நீர் வற்றினும் கடவுள் நிலை அழியாது – அறஞ்செயல் 22

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சூழ்பல உகங்கட்(கு) ஒவ்வோர்
= துளிதுளி யாக்க ழிந்தீங்(கு)
ஆழ்கடல் முழுதும் வற்றி
= அழியினும் பழியி னார்வீழ்
பாழ்நர கினுக்கீ றில்லைப்
= பரகதி நிலையும் அற்றால்
தாழ்நர கறவீ டெய்தத்
= தருமத்தைத் துணைக்கொள் நெஞ்சே. 22

- அறஞ்செயல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

தருமத்தைத் – புளிமாங்காய், (விளம் வருமிடத்தில் காய் அருகி வருவதுண்டு)

மனமே! சக்கரம்போல் சுற்றிவரும் பல ஊழிகட்கு ஒவ்வொரு திவலையாகக் குறைந்து கடல்நீர் முற்றும் வற்றி அழிந்தாலும், பாவம் செய்து பழி எய்தும் கொடியோர் வீழ்ந்து சொல்லொணாத் துன்பம் எய்தும் குற்றம் நிறைந்த துன்ப உலகம் அழிவதில்லை. அதுபோலவே, புண்ணியம் செய்து புகழெய்தும் நல்லோர் சென்று இன்பமெய்தும் சிவநிலையும் அழிவதில்லை. இழிந்த இருள்நிலை நீங்கச் சிறந்த சிவநிலை எய்த விழுமிய அறத்தொண்டினைக் கைக்கொள்வாயாக.

சூழ்-சுற்று. உகம்-ஊழி; உலக முடிவு. துளி-திவலை. பாழ்-குற்றம். ஈறு-அழிவு. பரகதி-சிவநிலை. தாழ்-இழிவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-19, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே