அமிழ்தம் அனைய அரிய சுவையால் தமிழினிமை - தமிழ், தருமதீபிகை 181

நேரிசை வெண்பா

அமிழ்தம் அனைய அரிய சுவையால்
தமிழினிமை என்னும் தகையாய் - இமிழ்திரைசூழ்
ஞாலம் புகழ நளின நடம்புரியும்
கோலம் தெளிக குவிந்து. 181

- தமிழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இனிய சுவையால் அமிழ்தம் என அமைந்துள்ள தமிழ், உலகம் புகழ உயர்ந்து தலைமை புரிந்து நிற்கும் நிலைமையை நினைந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், தமிழின் தன்மையைக் கூறுகின்றது.

அமிழ்தம் தெய்வ உணவு; அதிமதுரமானது; தன்னை உண்டவர்களை நெடிது வாழச் செய்யும் நிலையது; திவ்விய மகிமையுடையது. அத்தகைய அமிழ்தின் அரியசுவை தமிழினிடம் இயல்பாக அமைந்துள்ளமையால் அது இனிமை என்னும் போல் இசைந்து கனிவு மிகுந்து வருகின்றது.

தமிழ் மொழிக்கு இனிமை என ஒரு திருநாமம் தனி அமைந்துள்ளது. இப்பெயர் அதன் இயல்பான தகைமையை நயமாக விளக்கி வியன் துலக்கி நின்றது.

'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும், - பிங்கலந்தை; பெயர் விளக்கம் தொகுத்த இலக்கண நூலார் இங்ஙனம் குறித்திருக்கின்றார். இயலின் குறிப்பு நுனித்து நோக்க உரியது.

“தமிழ் தழிய சாயலவர்' - சிந்தாமணி, 2026

"தன்பால் தழுவும் குழல்வண்டு
தமிழ்ப்பாட்(டு) இசைக்கும் தாமரையே. 28, பம்பை வாவிப் படலம், கிட்கித்தா காண்டம், இராமாயணம்.

இவற்றுள் தமிழ் இனிமை என்னும் பொருளில் வந்துள்ளமை காண்க. இதன் நிலைமையை விளக்கியிருக்கும் தலைமையான விசேடங்கள் பல.

செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், தண்தமிழ், வண்தமிழ்: குறுந்தமிழ், பசுந்தமிழ், இருந்தமிழ், இன்தமிழ், தெய்வத்தமிழ் கன்னித்தமிழ் என இன்னவாறு நன்னய அடைகளால் பண்டு தொட்டு வழங்கப்பட்டு வருகின்றமையால் இதன் இயல்பும் உயர்வும் நயனும் பயனும் நன்கு அறியலாகும்.

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியே!என் முத்தமிழே புத்திக்குள்
உண்ணப் படுந்தேனே! – தமிழ்விடுதூது

தமிழை இதில் உவந்து விளித்திருக்கும் அருமை தெரிந்து கொள்ள வேண்டும். அறிவுக்கு விருந்தாய் அமைந்திருக்கும் அதன் உரிமையும் பெருமையும் கருதி இங்ஙனம் உருகலாயினர்.

உயர்ந்த மதிமான்கள் வியந்து பாராட்டிப் புகழ்ந்து போற்றத் தமிழ் வளர்ந்து வந்துள்ள வளமை கருதி ’ஞாலம் புகழ நளின நடம் புரியும்’ என்றது. பண்டு இருந்த தலைமை உலகநிலையில் இன்று குன்றியிருப்பினும் உணர்வுடையார் உள்ளத்தே என்றும் ஒரு படியாய் நின்று களிநடம் புரிந்து ஒளி சிறந்து வருதலால் நிகழ்காலத்தால் கூறப்பட்டது.

அருந்தவக் குரிசிலாகிய அகத்தியர் ஆதி இருடிகளும், பாண்டியன், சோழன் முதலிய முடிமன்னர்களும், பாரி, குமணன் முதலிய சிற்றரசர்களும், மற்றக் குடிமக்களும் பெற்ற தாயினும் அருமையாகத் தமிழை உரிமையுடன் போற்றி வந்துள்ளனர். இத்தகைய புனிதமான இனிய தமிழை அன்புடன் ஆய்ந்து பேணி நீ இன்பம் அடையவேண்டும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-19, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே