அனுபவம் ஆயிரம் அந்த நாட்கள் அகழ்வாராய்ச்சி

அனுபவம் ஆயிரம்.....

அந்த நாட்களின் அகழ்வாராய்வு....

இன்று (10.4.2019) அன்புத் தம்பதியர் திரு.P.செல்வம் திருமதி.R.ஜெயந்தி அவர்களின் ஆசை மகள் செல்வி.S.சுப பாரதிக்கு Dr.D.அபிலாஷ் சக்ரவர்த்தியுடன் வாழ்க்கை ஒப்பந்த நாள் .... எங்கள் பாட்டி வழி சொந்தம்... மூன்று தலைமுறையாய் நட்புறவாய் தொடரும் பந்தம்.....

உடல்நிலை சரியில்லை... இருந்தபோதும் தவறாமல் திருமணத்திற்குச் செல்லவேண்டும் ... அதிகாலையிலேயே அனைத்துப் பணிகளையும் முடித்து .... என் ஒப்பனையை எல்லாம் முடித்து போவதற்குள்..... வழக்கம்போல் முகூர்த்தம் முடிந்தப்பின்பே திருமண மண்டபம் வாயிலை அடைந்தேன்..... திருமணத்திற்குச் சென்றால் இரண்டு கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்...ஒன்று மணமக்களை ஆசீர்வதித்து பரிசு வழங்குவது...இரண்டாவது மனநிறைவோடு விருந்து உண்பது.... முதல் கடமை மணப்பெண்ணின் தாயாரின் அன்பு அனுசரணையுடன் எளிதாய் நடந்தேறியது .... இரண்டாவது பந்தி..... அவரே கையோடு அழைத்துச் சென்றார் .... இடையில் வழிமறித்தது ஒரு அன்புக் குரல்....

“அட.... அமுதாளப் பாத்து எத்தன வருசமாச்சி...நல்லா இருக்கியா..? பிள்ளைக எல்லா சுவமா இருக்கா.... உங்க அண்ணனா தம்பியா கலை எப்டி இருக்கான்...? எல்லாரையும் சின்ன பிள்ளையில பாத்தது....பாத்த மாதிரியே இருக்க அமுதா...கொஞ்சங்கூட மாறலியே முகச் சாயலு.....”

பனி உருகி உச்சந்தலையில் வீழ்ந்தது போல் சிலிர்ப்பு....
யார் அவரென்று எனக்கு அடையாளம் சரியாக தெரியவில்லை...,
இருந்தும் ஆயிரம் ஜென்மத்து உறவுபோல் உணர்வு..
அறிந்தவர் போலவே பதிலுரைத்து நலம் விழைந்தேன்...
சூழல் புரிந்துத் தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டார் சகோதரி திருமதி.V.சுலோக்‌ஷனா...
அள்ளக் குறையா பாசம்..
மண்வாசம் மாறா நேசம்...
மங்கள மஞ்சள் முகம்
மாசில்லா அன்பு அகம்
தடையற்ற ஓட்டமாய் பேசும் திறம்
மடைதிறந்த வெள்ளமாய் தகவல் விவரம்
அன்றைய S.S.L.C இன்றைய முனைவர் பட்டத்திற்கு சமம் என்பது உண்மை தான்போலும்....

பாச பந்தம் நெஞ்சை நெகிழ வைத்தாலும் பசியால்
வாச பந்தி ஒருபக்கம் இழுக்க.....
பந்தமா..?பந்தியா...? என மனதிற்குள் பட்டிமன்றபம் நடந்தேற...
பந்திதான் வென்றது...?
அதை விரைவாய் முடித்து மீண்டும் கண்கள் அவர்களை தேடி மண்டபம் முழுதும் வலம் வந்தது....மண்டப முன் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார்... அருகில் சென்று ஐக்கியமானேன்.....

சகோதரி சுலோக்‌ஷனா தன் இளம்பிராயத்தை விவரிக்கத் தொடங்கினார்....( ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி வேகமாய் ஓடிய மனம் ...1967க்குச் சென்று பிரேக் போட்டது.... அதோ....அங்கே...சகோதரி சுலோக்‌ஷனா இடுப்பில் என்னை சுமந்து கொண்டு செல்கிறார் ஆலடிப்பட்டி வீதியில்.... )

அமுதா அப்ப நீ நல்லா குண்டா கொழுகொழுனு இருப்ப...(இப்பவும் அப்படித்தான் ..... என் மனக் குரல்) உங்க பாட்டி வீடு மேலவீடு... எங்க பாட்டிவீடு கீழவீடு.... (மேற்கு கிழக்கு எனப் பொருள் கொள்ளவும்).....எங்க பாட்டிக்கு தூக்குச் சட்டியில சாப்பாடும் திருகு சொம்புல தண்ணியும் எடுத்துக்கிட்டு வருவேன் ... அப்டியே உங்க வீட்டுக்கு வருவேன்...... அப்படியே உன்னத் தூக்கிட்டு நல்லிக்கு குளிக்கப்போவேன்.... சந்தைக்குக் கூட்டிட்டு போவேன்.... அங்க உங்க பாட்டி நெல்லு குத்திட்டு வந்து விப்பாக..... உங்க அக்கா பூங்கோத(Poongothai Aladi Aruna) அரிசி வித்தக் காச வாங்கி ஒன்றாட்டம் மாம்பழத்த வாங்கி சாப்டுக்கிட்டே சந்தைய சுத்தி சுத்தி வருவா.... (ஆஹா...அழகான நினைவூட்டல் )

நான் இடைமறித்து சகோதரியிடம் என் சின்ன அத்தை திருமண நிகழ்வைப் பற்றி கேட்டேன்..... ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் தான் திமுக வளர்ந்தது.... என் பெரியப்பா ஆலடி அருணா முழுநேரமும் கழகத் தொண்டில் தன்னை ஒப்புவித்தக் காலம்....
கேட்டதுதான் தாமதம் ஆயிரம் மின்னல்கள் அவர்கள் கண்களில்.... முகம் மலர்ந்து அகம் பத்து அகவை பெண்ணாக மாறி பேசத் தொடங்கினார்.....
அமுதா... உங்க இராசம்மா அத்தக் கல்யாணம் கோயில் பள்ளிக்கூடத்துல தான் நடந்தது... ஏயெப்பா.... எவ்ளோ பெரிய பந்தலு ஊரடைக்க போட்டுருந்துது..... கலைஞர் கருணாநிதி ,நெடுஞ்செழியன் , மதியழகன், N.V.நடராஜன் இன்னும் திமுகவுல இருக்கப் பெரிய பெரிய ஆளுகெல்லாம் வந்துருந்தாவக.... ஊரே அவியல வேடிக்கப் பாக்க கூடிருச்சி.... நான் எல்லாரு முன்னாடியும் நாட்டியம் ஆடினே....வெள்ள கலர் சாட்டின் துணில பாவடச் சட்ட.... அதுல கில்ட்டுப் பேப்பர டிசைனா ஒட்டி அலங்காரம்லாம் பண்ணி அவக முன்னாடி மேடையில நின்னே.... அப்ப ரெக்கார்டு போட்டாக....
“கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்த தடி
கதிரவன் வரவுகண்டு
கமல முகம் மலர்ந்த தடி .....
நான் ஆட ஆட ஊரே உற்சாகத்துல கையத்தட்டிச்சு.... எனக்கு உங்க இராசமாத்த(மணப்பெண்) தான்
டான்ஸ் சொல்லி குடுத்திருந்தாக..... நீ ரொம்பச் சின்னப்பிள்ள.... பொண்ணு மாப்ள கால்மாட்டுல உட்காந்து பூ பிறக்கிட்டிருந்த......சொல்லி முடித்த போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்... அழகான அவர் முகத்தில் ஒரு கம்பீரம் எட்டிப் பார்த்தது....

என் தாயார் மேற்கு திருநெல்வேலி நல்லூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றிய நாட்கள்பற்றி விவரம் கேட்டேன் .....ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் தான் என் தாயார் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததாக பலமுறை என்னிடம் பகிர்ந்துள்ளார்கள்(சொல்லப் போனால் சமைக்க நெல் அரிசி வாங்க முடியாமல் வீட்டில் சாமி அரிசி சமைத்தக் காலம்).....அப்போது அம்மாவின் அருகிலிருந்து அத்தனை நிகழ்வுகளையும் நன்கு அறிந்த என் தாயாரின் மாணவியும் இவர்தான்...
மிகுந்த ஆவலுடன் பல தகவல்களை பரிமாறிக் கொண்டார்....
அப்போ அந்தப் பள்ளிக்கொடத்துல வேல பாத்த ஒரே இந்து டீச்சர் ஒங்க அம்மாதான்... அதனால எதும் பிர்ச்சனை நெறைய அவகளுக்கு இருந்துதோ என்னமோ... அப்பப்ப கண்கலங்கி இருப்பாக....நல்லா மொகம் நிறைய மஞ்சள் பூசி அழகா ஒரு பளிச்சுனு பொட்டு வச்சி வருவாக.... அழகா இருக்கும்..... சொன்னத் தொனியிலேயே பாசம் பீறிட்டுத் தெறித்தது.....

என் பெரிய தந்தை ஆலடிஅருணா அவர்களால் தான் தனக்கு பொட்டல்புதூரில் அங்கன்வாடி ஆசிரியர் பணி கிடைத்ததாய் நன்றியுடன் பகிர்ந்துக் கொண்டார்.... இன்னும் பேசுவோம் ... இப்போது நேரமில்லையென அன்போடு அவரிடம் பிரியா விடைபெற்றேன்....

கையிருப்பு இன்னும் எவ்வளவு உள்ளது என்று அறியாமலே காலத்தை விரைத்துக் கொண்டிருக்கும் நாம்.... வாழ்க்கை பயணத்தில் இதுபோன்ற பாச உறவுகளிடம் அளவளாவுவது.... நெடும் பாலைப் பயணத்தின் நடுவே குளிர் சோலையில் இளைப்பாற்றும் இன்பத்தைப் போன்றது என்பதை தெளிந்து உணர்ந்தேன்....

உண்மை பாசத்தை விதைப்போம்
உறவுகளை உன்னதப்படுத்துவோம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Apr-19, 3:12 pm)
பார்வை : 37

மேலே