ஆட்டோகிராஃப்

பத்தாம் வகுப்பு முடிந்து கடைசிநாள் .... பள்ளித் தோழிகள் சிலர் +2 படிப்பதற்கு வெவ்வேறு பள்ளிக்கு செல்வதாக இருந்ததால்... கண்ணீர் மல்க ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பிரியா விடை பகர்ந்தனர்.... வீட்டு விலாசம் மற்றும் தொலைபேசி எண் பரிமாற்றம், நினைவுப் பரிசுகள் வழங்குதலென மும்முரமாக இருந்தனர்.... உண்மையைச் சொல்லப் போனால் அந்தநேரத்தில் அந்தப் பிரிவு ஒன்றும் பெரிய மனவலியைத் தரவில்லை.... இருந்தாலும் எல்லோருடனும் நானும் தொடர்பில் இருக்க விலாசத்தைப் பெற்றுக் கொண்டேன்....போதாதக் குறைக்கு ஆட்டோகிராஃப்வேறு.... நான் எனக்கு அவர்களைப் பற்றி என்ன நினைக்கின்றேனோ ,அதையே என் சொந்த வரிகளில் எழுதிக் கொடுத்தேன்..... ஆனால் பலர் குறிப்பிட்டப்பல ஆங்கில வாசகங்களை எழுதிவந்து.... அதையே எல்லோருக்கும் மாற்றி மாற்றி எழுதி கையொப்பம் இட்டுக் கொடுத்தனர்....

“Leaves may wither
Flowers may fall
You may forget
But not l....”

“Kiss me
But don’t miss me “

“We built a great ship
That’s a friendship “
இதெல்லாம் அவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த என் நினைவைவிட்டு நீங்கா சில வாசகங்கள் ......

ஆனால் ஒரு தோழி மட்டும்
“அன்பே அமுதா அன்பே அமுதா...
எனை பார் அமுதா
சுவை தேன் அமுதா”
என்ற சினிமா பாடலை
உல்ட்டா செய்து கடைசி வரியில் எனை நினை அமுதா என்று முடித்து.....ஒரு பக்கத்திற்கு ஆட்டோகிராஃப் எழுதிக் கொடுத்தாள்....அதுவும் பெரிய ஃபீலிங்கோடு.....

விசயம் என்னவென்றால் ... எனக்கு பிரியா விடை கொடுத்து ...தேம்பி தேம்பி அழுதவர்களில் ஒருத்திக்கூட...அதற்குப் பின் என் தொடர்பில் இல்லை.... பல வருடங்களுக்குப்பிறகு ... கடைத் தெருவில் ஒரு தோழியைக் கண்டேன்.... ஒரு இன்ப அதிர்ச்சி என்னுள் .... அப்போது தான் கைபேசி வந்த நேரம்..... அவளிடம் கைப்பேசி எண்ணை வாங்கினேன் .... பின்னர் அவளோடு தொடர்பு கொண்டு இன்னும் சில தோழிகளின் கைப்பேசி எண்ணையும் பெற்றேன் ..... மிகுந்த ஆவலுடன் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசினேன்.... சிலர் பேசினார்கள் உதட்டளவில்.... நட்பாய் பழகிய அந்த உணர்வு சிறுதுளிகூட அவர்கள் குரலில் இல்லை... பேசிய தொனியே... எதற்கு இவள் அழைத்தாள் என்பதுபோல் இருந்தது....
ஆனால் கடைசியாக ஒரு தோழியை அழைத்தேன்... அதுவும் தினமும் என்னோடு பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஒன்றாய் வருபவளவள்.....
“யாரு நீங்க.... ?
ஏதோ ராங் நம்பர்க்கு கால் பண்ணிட்டீங்கனு நினைக்கிறேன் .....
எனக்கு அமுதானு யாரும் தெரியாது “ என்று பதிலுரைத்தாள்.... ஆனால் அது என் தோழியின் குரல்தான் என திட்டவட்டமாக உணர்ந்தேன்......அதனால் அவளுக்கு நினைவூட்டலாய் பள்ளியில் எங்கள் இருவருக்குள் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்களை எல்லாம் எடுத்துரைத்தேன் .... ஆனால் என்னை அவள் அறிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை....வீடு திரும்பும்போது இருவரும் ஒருமுறை மழையில் தொப்பையாய் நனைந்து அங்காலம்மன் கோவில் வாசலில் ஒதுங்கி நின்றது.... பின்னர் இருவரும் மழையில் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டது என்று ஒவ்வொன்றாக விளக்கினேன்... (மூன்றாம் பிறை க்ளைமேக்ஸில் கமல்ஹாசன் போல நான் விளக்க ஶ்ரீதேவி போலவே அவள் ரியாக்‌ஷன் கொடுத்தாள் )
அவள் வேறுயாருமல்ல ...எனக்கு உருகி உருகி அந்த “அன்பே அமுதா” பாடலை எழுதிக் கொடுத்தவள் தான்....,,

பள்ளிக் காலத்து நட்புகள் எல்லாம் பெண்பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அதிகம் தொடர்வதில்லை.... நட்பை தொடர்வதற்கு வாய்ப்புகளும் அமைவதில்லை..... ஆட்டோகிராஃப்வோடே நட்பின் நினைவலைகள் ஓய்ந்துவிடுகிறது....

ம்ம்ம்... இத்தனையும் இன்று எதேச்சையாய் பழையப் பாடல்களை தேடியபோது.... இந்தப் பாடல் கண்ணில் பட்டு பல நிகழ்வுகளை நினைவேட்டில் இருந்து தட்டி எடுத்தது....... இதை உங்களோடு பகிர்வதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி!கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Apr-19, 3:15 pm)
பார்வை : 23

மேலே