கபினி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 163 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதிக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இது நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியின் ஒரு அங்கமாகும். காட்டுயிர் அம்சங்கள் மற்றும் இயற்கை எழில் போன்றவற்றுக்காக இது சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் ஸ்தலமாக உள்ளது. இந்த கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி இப்பிரதேசத்தின் வழி பாயும் கபினி ஆற்றின் அடையாளமாக கபினி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறு நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியின் தென்கிழக்கு பகுதியை பிரித்து உருவாக்கியுள்ளது.

கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியானது 55 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக அடர்ந்த காடுகள், மலைப்பிரதேசங்கள், ஏரிகள் மற்றும் ஓடைகளைக்கொண்டுள்ளது. இங்குள்ள கபினி அணையின் நீர்த்தேக்கம் மஸ்திகுடி ஏரி என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மறைந்துபோன மஸ்திகுடி எனும் கிராமத்தின் பெயரால் இந்த நீர்த்தேக்கம் (ஏரி) அழைக்கப்படுகிறது. இந்த அணையானது நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியையும் பண்டிப்பூர் வனப்பகுதையையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது.

பல்வகையான மழைப்பொழிவினைப் பெற்றிருக்கும் இந்த கபினி பிரதேசத்தில் அந்த தன்மைக்கேற்றவாறு பலவகைத் தாவர இனங்கள் நிறைந்துள்ளன. குறைந்த மழைப்பொழிவைக் கொண்டுள்ள பகுதிகளில் வறண்ட இலையுதிர் தாவரங்களும் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் ஈர இலையுதிர் தாவரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இடையிடையே பசும் புல்வெளியும், புதர்க்காடுகளும் சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன. கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி மற்றும் அதன் விரிவான தொகுப்பான நாகர்ஹோலே காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியில் ஏராளமான சாகபட்சிணிகள் குறிப்பாக யானைகள் வசிக்கின்றன.

ஆசிய யானைகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதியாக இந்த கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி அறியப்படுகிறது. யானைகள் தவிர மான்கள், நான்கு கொம்பு மான்கள், சாம்பார் மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, குரைக்கும் மான், கருங்குரங்கு, இந்தியக்குரங்கு போன்றவையும் இங்கு ஏராளமாக வசிக்கின்றன. சாகபட்சிணிகள் அதிகமிருப்பதால் இவற்றை உணவாகக்கொண்டு வாழும் மிருகபட்சணிகளும்(வேட்டை விலங்குகளும்) இங்கு அதிகம் வசிக்கின்றன. புலி, சிறுத்தை மற்றும் இந்திய காட்டு நாய்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த வனப்பகுதியில் சபாரி எனப்படும் காட்டு சுற்றுலாவை மேற்கொள்ளும் பயணிகள் காட்டுயிர் வாழ்க்கையை மிக அருகில் கண்டு ரசிக்கலாம்.

யானைக்கூட்டங்கள், புள்ளிமான்கள் மற்றும் சாம்பார் மான்கள், குரைக்கும் மான், கருங்குரங்கு, மந்திக்குரங்கு, கரடி, காட்டெருமை, சிறுத்தை, முதலை, புலி மற்றும் காட்டு நாய் போன்ற மிருகங்களை பயணிகள் நேரில் தரிசிக்க வாய்ப்புண்டு. 300க்கும் மேற்பட்ட பறவை வகைகளை கொண்டிருக்கும் கபினி வனப்பகுதி பறவை ஆர்வலர்கள் மிகவும் விரும்பக்கூடிய ஸ்தலமாக புகழ்பெற்றுள்ளது. வல்லூறு, பழுப்பு மூக்கு மீன்கொத்தி, அரிவாள்மூக்கன், கொக்கு, நாரை மற்றும் மலபார் தீக்காக்கை போன்றவை இங்கு காணப்படுகின்றன.

கபினி சுற்றுலா ஸ்தலத்தின் முக்கிய விசேஷ அம்சம் ஜங்கிள் சவாரி(ஜீப்பில் காட்டுப்பயணம்) மற்றும் யானைச்சவாரி (காட்டுக்குள் யானை மீதமர்ந்து பயணிப்பது)ஆகும். மேலும் இங்குள்ள நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி செல்வதன் மூலம் கரையின் ஓரம் புள்ளிமான்கள் மற்றும் சாம்பார் மான்களை காணலாம்.

இதுதவிர கரையோரம் வெயில் காயும் முதலைகளையும் கண்டு ரசிக்கலாம். இயற்கை நடைப்பயணம், காட்டுவழி நடைப்பயணம், படகுச்சவாரி, சைக்கிள் சவாரி, ராத்திரி கூடார கேளிக்கை நிகழ்ச்சிகள், உள்ளூர் கிராம சுற்றுலாக்கள் என்று ஏராளமான பொழுதுபோக்கு அனுபவங்கள் இங்கு பயணிகளுக்காகவே காத்திருக்கின்றன. இந்தியாவின் முக்கியமான இயற்கை சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றான கபினி இங்குள்ள வளமான காட்டுயிர் அம்சங்களுக்கு இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று அறியப்படுகிறது. கர்நாடகாவின் மிக முக்கிய சுற்றுலாஸ்தலங்களில் இந்த கபினி வனப்பகுதி ஒன்று என்பதை பயணிகள் இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் புரிந்துகொள்ளலாம்.

Udhay Kumar

எழுதியவர் : (20-Apr-19, 5:00 pm)
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே