தமிழ் ஞான மணமே நவிலுந் தொறுங்கமழ்ந்து கானம் புரியும் கனிந்து - தமிழ், தருமதீபிகை 182

நேரிசை வெண்பா

பத்திச் சுவையும் பழுத்த கலைச்சுவையும்
முத்திச் சுவையும் முழுதுமாய் - எத்திக்கும்
ஞான மணமே நவிலுந் தொறுங்கமழ்ந்து
கானம் புரியும் கனிந்து. 182

- தமிழ், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமிழ் அன்பமைதி, கலைப்பண்பு, முக்திப்பேறு முதலிய நலங்கள் ததும்பி யாண்டும் ஞான மணம் கமழ்ந்து இனிய கானம் புரிந்து அரிய சுவை சுரந்து தனியே தழைத்துள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தமிழ் இனிமைப் பண்புடையது என முன்னம் கண்டோம்; இதில் அதன் பலவகை நலங்களையும் சுவைகளையும் காண்கின்றோம்.

கடவுளை நினைந்து உள்ளம் கரைந்து உயிர் உருகி நிற்கும் பேரன்புக்குப் பத்தி என்ற பெயர். இந்த அன்பு நிலைகள் அலைகளை விசித் தமிழில் எங்கும் பொங்கியுள்ளன.

தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய நூல்கள் எல்லாம் அன்பின் உருவங்களாய்ப் பெருகி எழுந்தன. பேரின்பப் பிழம்பான இறைவனையே கருதிக் கருதி உருகி இருத்தலால் இவை யாண்டும் தெய்வ மணம் கமழ்ந்து ஓதி உணருந்தோரும் உயிர்களைப் பரவசமாக்கி உய்தி புரிந்து வருகின்றன.

நேரிசை ஆசிரியப்பா

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சம்நெக்(கு) உருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்(பு) எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே. - நால்வர் நான்மணிமாலை

அறிவு நலம் கனிந்த இன்ப நுகர்ச்சியை கலைச்சுவை என்றது. இராமாயணம், சித்தாமணி முதலிய காவியங்களில் இந்த அறிவு விருந்து அதிசய நிலையில் பெருகி யிருக்கிறது.

நாவின் சுவையை நாடி உழலும் நாட்டுமக்கள் தம் தாய் மொழியில் விளைந்துள்ள பாவின் சுவையைப் பருகி மகிழும் பாக்கியம் இலராய்ப் பெரும்பாலும் இஞ்ஞான்று நோக்கிழந்துள்ளார்.

அறிவு நுகர்ச்சி குன்றிய அவலநிலையில் வெறியராய் நம்மவர் அலமந்து திரியும் நிலைமை மிகவும் பரிதாபமாயுள்ளது.

மோட்ச இன்பத்தை முத்திச்சுவை என்றது. நிலையில்லாத இந்த உலகப் பற்றுக்களையெல்லாம் அறவே துறந்து உள்ளப் பற்றற்று உரிய பரம்பொருளோடு தோய்ந்து ஆன்மா அனுபவிக்கும் பேரானந்த நிலையை நேரே தெளிவாக விளக்கித் தமிழ் மொழி ஓர் ஆனந்தமாய் ஒளிசெய்து நிற்கின்றது. அந்த நிலைகள் அனுபவித்து மகிழ உரியன.

அதிமதுரமான இனிய ஒசை நயம் கருதி கானம் புரியும் என்றது.

அன்பு, அமைதி, கலைப்பண்பு முதலிய நலங்கள் பலசுரந்து ஞானம் கனிந்துள்ள தமிழை நீ நன்கு பயின்று நலம் பெறுக.என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Apr-19, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே