உள்ளமுறும் நூலின்பம் நுகருந் தொறும் பெருகும் - நூல், தருமதீபிகை 192

நேரிசை வெண்பா

தெள்ளமிர்தும் பாலும் தெளிதேனும் தீம்பாகும்
தள்ளரிய இன்சுவையே தாங்கிடினும் - உள்ளமுறு
நூலின்பம் போல நுகருந் தொறும்பெருகி
மேலின்பம் ஆமோ விளம்பு. 192

- நூல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தெள்ளிய அமிர்தும், வெள்ளிய பாலும், தெளிந்த தேனும், தீம்பாகும் இனிய சுவையுடையன வாயினும், ஒள்ளிய நூலின் சுவை போல நுகரும் தோறும் பெருகி மேலும் மேலும் நிலையான இன்பம் நலமாகப் பயவாது என்கிறார் கவிராஜ பண்டிதர்

ஆமோ என்று வினவியது ஆகாது என்னும் குறிப்பினது.

அதன் அருமை கருதி அமிர்தை முதலில் குறித்தது. விண்ணமர் பொருளாதலின் மண்ணுறு பொருள்களினும் முன்னுற வந்தது. தீம்பாகு - இனிய வெல்லப் பாகு; கருப்பஞ் சாறு, கனி ரசம் முதலிய இனிய பாகங்கள் எல்லாம் தீம்பாகு என நின்றன.

யாரும் எள்ளி இகழாமல் யாண்டும் அள்ளி நுகரும்படி இனிய சுவைகளை இயல்பாக எய்தியுள்ளமை கருதி ‘தள்ளரிய இன்சுவை’ என்றது. அசாரங்கள் யாதுமின்றி அதி மதுரமான சாரங்களே நிரம்பித் ததும்பி நிற்கும் நீர்மையும் நிலைமையும் நினைந்து கொள்ள தாங்கிடினும் என்றது.

அறிவின்பத்தின் அருமை தெரியப் பொறியின்பங்கள் புலனாய் வந்தன. மதிநலம் கனிந்தது மாண்பு மிக வுடையது.

’உள்ளம் உறும்’ என்றது நூல் இன்பம் துகரும் இடம் குறித்தது. உள்ளத்தே அனுபவிக்கின்ற ஓர் உயர்ந்த இன்ப நுகர்ச்சிக்குப் புறத்தே சிறந்த சுவையுடைய சில பொருள்களை இனமாக எடுத்துக் காட்டி அதன் பெருமையை விளக்கியபடியிது.

அமிர்தம் முதலியன நாவில் உண்டவுடனே உருக்குலைந்து ஒழியும்; நூல் நயம் உள்ளம் கொண்டு உணரும்தோறும் உலவா இன்பம் பயந்து ஓங்கி வளரும். பருகிய பொழுது மட்டும் சிறிது சுவையாய் அவை வறிது கழியும்; இது கருதிய அளவே பெரிதும் சுவையாய்ப் பெருகி எழும்; அவை உடலைக் கொழுக்கச் செய்து மயலில் ஆழ்த்தும்; இது, உயிரை வளர்த்து உயர்வில் ஊக்கும்; புத்தி தத்துவத்தில் அனுபவிப்பதாதலால் முத்தி இன்பம் போல் என்றும் இது மூவா முதன்மையை மேவி யிருக்கின்றது.

தேக போகங்களின் நிலைமைகளையும், ஆன்ம போகத்தின் தலைமையையும் ஆய்ந்து தெளிய வேண்டும்.

பொறி இன்பங்களிலும் அறிவின்பமே சிறந்தது; அதனை மனித இனம் புனிதமாகப் போற்றிக் கொள்ள வேண்டும்.

“In the pursuit of intellectual pleasures lies every virtue; of sensual, every vice.” - Goldsmith

’அறிவுச் சுவையில் அறம் வளர்கின்றது; பொறி நுகர்ச்சியில் மறம் விளைகின்றது' என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

நூல் உணர்ச்சி என்றும் மேலான இன்பம் விளைக்குமாதலால் அதனைச் சாலவும் விழைந்து பேணி உவந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Apr-19, 6:17 pm)
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே