கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்----------------கங்கைப்போர்- கடிதங்கள்

ஜெ

ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறையில் அளிக்கப்பட்ட குக்கூ காட்டுப்பள்ளியின் “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” வாசித்திருந்தேன். அத்துடன் அதன் வெளியீடான ”உரையாடும் காந்தி” வாங்கி வாசித்திருந்தேன். எதிர்வினை ஆற்றாதிருந்தது அறப்பிழையே.

சுவாமி நிகமானந்தர், சுவாமி கியான் ஸ்வருப் சானநத் கங்கையைக் காக்க உயிர் அளித்த அவர்களின் தியாகம் வீண்போகக்கூடாது என்று விழைகிறேன். சுவாமி ஆத்மபோதானந்தரின் உண்ணாவிரதம், அவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்று விழைகிறேன். கருத்தளவிலேனும் தம் எதிர்வினைகளின் வாயிலாக, விவாதங்களின் வாயிலாக தம் அற உணர்வினையும் மற்றவரது அற உணர்வினையும் விழிப்பிக்க முயலவேண்டும்.

இரண்டு விஷயங்கள், ஒன்று சூழியல் குறித்த விழிப்பு இல்லை – இது தொடர் முயற்சியின் மூலம் சரி செய்யப்படக் கூடியது. இரண்டு, தன்னெஞ்சறிவது பொய்த்தே பழகி இருக்கிறது. இதை சரி செய்வது மிகப்பெரும் சவால். இச்சவாலை ஏற்கும் துணிவு காந்தியத்திற்கு மட்டுமே உள்ளது. அறம் வென்றே தீரும் என்று நம்புகிறேன்.

பட்டறைக் கழிவுகளின் நாற்றத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்கும்போது தோன்றுவது அல்ல கர்னாடக பேருந்தின் மீது கல்லெறிந்து காப்பதுதான் காவிரியை காப்பது. எதிர்பக்கதிற்கும் காவிரியை காப்பது என்பது அப்படித்தான்.

பெரும்பொழுது முகநூலில் கழித்து ஓயாமல் தன் புகைப்படங்களைப் போட்டுக்கொண்டு (அவ்வப்போது கையில் மண்வெட்டியுடன், சேற்றில் கால்வைத்து, மரத்தடியில் நின்று அப்படி ஒன்றிரண்டேனும் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் சூழலியல் போராளி) மாரியம்மன் விழாவினால், மூடநம்பிக்கைகளால் சுற்றுச்சூழல் நாசமாபோகிறது என்று முற்போக்கு காட்டி, தனிப்பட்ட தன்னல நோக்கங்களுக்காக சூழலியல் போராளி வேடத்தை வியாபார உத்தியாக கையாண்டு பெரும் வர்த்தக வாய்ப்பு நோக்கி நிற்பவர்களையும் கடந்துதான் உண்மை அறம் ஒலிக்க வேண்டும்.

குக்கூவென்னும் குரல் பேரறறத்தின் காதுகளில் விழும், கங்கை பேரறறத்தால் காக்கப்படும் என்று நம்புகிறேன். என்னால் ஆவன சிறிதெனினும் செய்ய சித்தமாய் இருக்கிறேன்.



அன்புடன்,

விக்ரம்,

கோவை.
---------------------------------
ஜெ

கங்கையைக் காப்போம் என்னும் இந்த இயக்கம் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் திமுக, இன்னொருவர் பாஜக. திமுக காரர் கங்கையைப் பாதுகாப்போம் என்பதே வகுப்புவாதம் என பேசினார். ஊரிலே எல்லா ஆறும் சாக்கடையாத்தான் இருக்கு, கங்கை மட்டும் என்ன ஸ்பெஷல் என்று கேட்டார். கங்கை என்பதனால்தானே சாமியர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூவம் சீர்கெட்டதனால் உண்ணாவிரதம் இருக்க வருவார்களா என்றார். கூவம்போன்ற நதிகளுக்காகவும் சாமியார்கள் போராடுகிறார்கள் என்றேன். கூவத்துக்காக நீங்கள் போராடலாமே என்று கேட்டேன். கூவத்தை கலைஞர் ஏற்கனவே சுத்தம்செய்துவிட்டார் என்றார். அவருக்கு முப்பது வயதுகூட இருக்காது

பாஜக ஆள் பிராமணர். இன்னும் சின்ன வயசு. அவரிடம் சொன்னபோது சன்யாசிகள் தற்கொலை செய்யக்கூடாது, உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை என்றார். இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்து மதத்தில் பல்வேறு வகையில் தற்கொலை செய்வதை போற்றித்தானே சொல்லப்பட்டுள்ளது? கங்கையில் குதிப்பதே மோட்சம் என்று சொல்லப்பட்டுள்ளதே. தற்கொலை செய்துகொண்டு பேயாக ஆன ஒருவராவது இந்து மதத்தில் உண்டா என்றேன். அவரால் சொல்லமுடியவில்லை. கங்கைமாதாவை மோடி காப்பாற்றிவிடுவார் என்றார்கள். அதற்காக ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்தாரா என்றேன். இனிமேல் எடுப்பார் என்றார்

சட்டென்று கோபப்பட்டு இந்தச் சாமியார்கள் ஏமாற்றுக்காரர்கள், பாரம்பரிய மடத்தை சேர்ந்தவர்கள் அல்ல என வசைபாட ஆரம்பித்தார். திமுககாரரும் இதேபோல ஏமாற்றுக்காரர்கள் என்றுதான் அவர்களைச் சொன்னார் என்று சொன்னேன்

கட்சிமனநிலை என்பது ஒருவகையான நவீன மூடநம்பிக்கை என்ற எண்ணம் உறுதிப்பட்டதி

எம்.ராஜேந்திரன்
============================================================================================================
கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
April 17, 2019

கங்கை தூய்மையற்றது என அறியாத ‘படித்த’ இந்தியர்கள் குறைவு. அத்தூய்மையின்மை எதனால் என்று கேட்டால் உடனே கங்கையில் வட இந்தியர்கள் பிணங்களைத் தூக்கிவீசுகிறார்கள் என்பார்கள். இந்துக்கள் தங்கள் புனிதநதியை தங்கள் அறிவின்மையால் அழிக்கிறார்கள், சாக்கடையாக்கி ஓடவிடுகிறார்கள் என்பதுதான் இங்கிருந்து உலகம் முழுக்கச் சென்றுள்ள பரப்புரை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் கங்கையில் மிதக்கும் பாதிமட்கிய மாடுகளின் உடல்கள், மனிதச் சடலங்கள் குறித்த புகைப்படங்கள் தேசிய ஊடகங்களில் வெளிவரும்



இப்புகைப்படங்கள் பெரும்பாலும் கங்கையில் முதல்பெருவெள்ளம் வந்து வடிந்தபின் எடுக்கப்படுபவை. அந்தப்பெரிய நதியில் எவ்வகையிலும் அத்தகைய மாசுக்களைத் தவிர்க்க முடியாது. ஒப்புநோக்க இறுதிச்சடங்குகள் ஏதும் நிகழாததும் புனிதத்தலங்கள் ஏதும் இல்லாததுமான பிரம்மபுத்திராவிலும் அதேபோல சடலங்களைக் காணலாம். கங்கையில் செல்லும் வெள்ளத்தின் அளவுக்கு அந்த மாசுக்கள் மிக எளிதாக அழிக்கப்பட்டுவிடும். அதிலுள்ள மீன்கள் நீர்நாய்கள் முதலைகளின் உணவுக்கே அவை போதாது.



ஆனால் கங்கை மாசடைந்ததுதான். ஏன்? ஒருமுறை காசிக்கோ கான்பூருக்கோ அலகாபாதுக்கோ சென்று கங்கை ஏன் மாசடைந்துள்ளது என்று நோக்கினாலே புரியும். ஹரித்வாரிலிருந்து மேலே இமையமலை அடிவாரம் வரை மொத்த மலைகளும் கல்அகழ்வாளர்களால் கனிக்கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு மண்புழுதியும் வேதிக்குப்பையும் ஆற்றில் கொட்டப்படுவதைக் காணமுடியும். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்குபெற்று நிகழும் இந்த சூறையாடல் பல ஆண்டுகளாக இடைவிடாது நிகழ்கிறது. அத்தனை அரசியல்கட்சிகளும் அதற்கு ஒத்துப்போகின்றன


நிகமானந்தர்

இன்று கங்கையின் நீர் ஏராளமான அணைக்கட்டுக்கள் வழியாக பலவாறாகத் திருப்பிவிடப்படுகிறது. மிகக்குறைவான நீரே கங்கையில் செல்கிறது. அதேசமயம் கழிவுகள் கலப்பது மிகுந்து வருகிறது. இது இந்தியா முழுக்க அனைத்து ஆறுகளும் சந்திக்கும் நிலை. அதற்கும் மேல் கங்கையை மாசுபடுத்துபவை தொழிற்சாலைக் கழிவுகள்



உதாரணமாகக் காசி. அது ஒரு மாபெரும் தொழில்நகரம். பட்டு உற்பத்திமையம். பட்டுக்கு வண்ணமேற்றும் சிறிய தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ரசாயனத்தொழிற்சாலைகள் பல உள்ளன. மொத்தக் கழிவும் வரணா அஸி என்னும் இரு ஆறுகள் வழியாக கங்கையில் வந்து கலக்கின்றன. நடுவே உள்ள படிக்கட்டுதான் வரணாஸி. எந்தவிதமான தூய்மைப்படுத்தும் முறையும் இல்லை. நேரடியாக ஆற்றில் திறந்து விடப்படுகின்றன. கங்கையில் இரவெல்லாம் வந்துசேரும் இக்கழிவுகளால் அது நுரைநுரையாக வெவ்வேறு வண்ணங்களில் ஒழுகுவதைக் காணலாம்.



கான்பூர் இந்தியாவின் தோல்பதனிடும் தொழிலின் மையம். இந்தியாவின் தோல்பொருட்களில் நேர்பாதி அந்நகரில்தான் உற்பத்தியாகின்றன. அதன் ரசாயனக்கழிவுகள் மொத்தமும் கங்கையை அடைகின்றன.அலகாபாதின் ரசாயன ஆலைகள். வெவ்வேறு தொழிற்சாலைகளின் கழிவும் கங்கையில்தான் சென்று சேர்கிறது. இதைத்தவிர கங்கைக்கரையிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர்களின் சாக்கடைகள் மொத்தமாகவே கங்கையில்தான் வந்தமைகின்றன.



இந்த சூழியல் அழிவு குறித்த பேச்சுக்கள் ஊடகங்களில் இருந்து மறைக்கப்படுவதற்காகவே கங்கையின் இடுகாடுதான் சூழியலழிவை உருவாக்குகிறது என்னும் செய்தி தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது. கங்கையின் மெய்யான அழிவு மூன்று காரணங்களால் என வகுக்கலாம். ஒன்று நீரோட்டம் தடுக்கப்பட்டு கங்கையின் பல்லுயிர்தன்மை அழிவது. இரண்டு ரசாயனக் கலப்பு. மூன்று கங்கைக்கரையோரமாக நிகழும் கட்டற்ற கனிம அகழ்வு. அதன் கழிவுகள் கங்கையில் கலப்பது.



கங்கை ஒரு புனிதநதி என்பது ஒருபக்கம், அது பல லட்சம்பேரின் வாழ்வாதாரம். விவசாயிகள், மீனவர்கல் படகோட்டிகள் என அதை நம்பிவாழ்பவர்கள் ஐந்து மாநிலங்களிலாக பரவியிருக்கிறார்கள். கங்கைநீரை வேளாண்மைக்குப் பயன்படுத்த அதில் பெரிய அணைகளைக் கட்டவேண்டியதில்லை. சிறிய தடுப்பணைகள் வழியாகவே நீரவ் வேளாண்மைக்குக் கொண்டுசெல்லலாம். சொல்லப்போனால் குறைந்த செலவில் மேலும் அதிகமாக வேளாண்மை செய்யலாம். பெரிய அணைகளின் நோக்கம் முதன்மையாக மின்னுற்பத்தி. அடுத்ததாக குத்தகைக்காரர் அதிகாரி அரசியல்வாதி என்னும் முக்கூட்டுக்கொள்ளை.



பெரிய அணைகளுக்கு நிதியுதவிசெய்யவே பன்னாட்டு நிதியங்கள் விரும்புகின்றன. ஏனென்றால் அதற்கான பொருட்கள் அவர்கள் நிதியுதவிசெய்யும் வேறு நிறுவனங்களிடம் வாங்கப்படும். அந்தப்பணம் வேறுவகையில் அவர்களுக்கே திரும்பி வரும். வட்டி மட்டும் பெருகிக்கொண்டிருக்கும். சூழியல்நிபுணர்கள் பெரிய அணைக்கட்டுத்திட்டங்களுக்கு எதிரான மாற்று பொருளியல் ஆலோசனைகளை விரிவாகவே வகுத்து அளித்திருக்கிறார்கள். அவை எவராலும் செவிகொள்ளப்பட்டதே இல்லை. இன்றைய அதிகாரக்கட்டமைப்பில் அக்குரல்கலுக்கு இடமே இல்லை



கங்கையைப் பாதுகாக்கவேண்டும் என்று கோரி மக்களின் விழிப்புணர்ச்சியை உருவாக்கும்பொருட்டு ஒரு பெரும் போராட்டம் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஹரித்வாரை மையமாகக் கொண்டு செயல்படும் மாத்ரிசதன் என்னும் அமைப்பு இதை நிகழ்த்துகிறது. இந்தியாவின் ஆத்மா வெளிப்படும் போராட்டம் எனக் கருதப்படும் இந்நிகழ்வுகுறித்து இங்கே அறிவியக்கத்தவர் பேசுவதில்லை. அரசியல்வாதிகள் பொருட்படுத்துவதில்லை. ஊடகங்களில் ஓரிரு வரிகளுக்குமேல் காணமுடியாது. தமிழகத்தின் முதன்மைநாளிதழ்கள் எவையும் இன்றுவரை இதைச் செய்தியாகப் பொருட்படுத்தியதில்லை



மாத்ரி சதன் காந்திய வழியில் போராடுகிறது. மக்களின் மனசாட்சியுடன் உரையாடும்பொருட்டு அவர்கள் உண்ணாவிரதப்போரில் ஈடுபடுகிறார்கள். முதலில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் சுவாமி நிகமானந்தா. கங்காபுத்ர நிகமானந்தர் என அவர்அழைக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து சுவாமி கியான் ஸ்வ்ரூப் சானந்த் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இப்போது சுவாமி ஆத்மபோதானந்தர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்.



1976 ஆகஸ்டில் பிகாரில் தர்பங்கா மாவட்டத்தில் லடாரி என்னும் சிற்றூரில் பிறந்த நிகமானந்தரின் இயற்பெயர் ஸ்வரூபம் குமார் ஜா. கிரீஷ் என அன்னையாரால் அழைக்கப்பட்டார். பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தன்னைத் தயாரித்துக்கொண்டிருக்கையில் 1995 அக்டோபரில் வீட்டைத்துறந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். நாடோடித் துறவியாக அலைந்து திரிந்தார். ஹரித்வாரில் உள்ள ஆசிரமத்தில் சுவாமி சிவானந்தரின் வழி வந்த கோகுலானந்த சரஸ்வதி மற்றும் நிகிலானந்த சரஸ்வதியின் மாணவராக ஆகி பின்னர் அவர்களிடமிருந்து துறவுபெற்றுக்கொண்டு நிகமானந்தராக பெயர் சூட்டிக்கொண்டார்



நிகமானந்தர் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்றுத்தேர்ந்தார். மாத்ரி சதனின் டிவைன் மெஸேஜ் என்னும் மாத இதழில் வேதாந்தம் சார்ந்த ஆழ்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1997 ல் அவர் தலைமையில் சில இளைஞர்கள் கங்கையைக் காப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் போராட்டத்தைத் தொடங்கினர்.1998 ஜனவரியில் கங்கையைக் காக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து தன் முதல் உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கினார். பின்னர் ஜூன் மாதம் மீண்டும் ஏழுநாட்கள் போராட்டத்தை நடத்தினார்.


ஜி டி அகர்வால்,

மாத்ரிசதன் இதுவரை 60 முறை போராட்டம் நடத்தியுள்ளது.ஒருவர் உயிரிழந்தால் அவருடைய இடத்தில் இன்னொருவர் உண்ணாநோன்பைத் தொடர்வது வழக்கம். பொதுவாக ஊடகங்கள் இந்தப்போராட்டத்தை பொருட்படுத்தவில்லை. அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களும் அதை கவனிக்கவில்லை. ஆயினும் அவர்கள் சலிக்காமல் தங்கள் போராட்டத்தை நடத்தினர்.



சொல்லப்போனால் ஊடகங்கள் இந்தப்போராட்டத்தைப் பற்றி எள்ளல்நிறைந்த மொழியிலேயே பேசின. 2011ல் சுவாமி நிகமானந்தா உயிரிழந்தபோதுதான் சற்றேனும் ஊடகக் கவனம் கிடைத்தது. அதுவும் அப்போது மத்திய அரசின் ஊழலுக்குஎதிராகப் போராடிய ராம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹரித்வாரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது நிகமானந்தாவின் உடல் அதே மருத்துவமனையில் இருந்தது. ராம்தேவ் அதைச் சுட்டிக்காட்டியபின்னரே ஊடகங்கள் கவனித்தன.



நிகமானந்தரின் போராட்டம் காங்கிரஸுக்கு எதிரானது, இந்துத்துவ நோக்கம் கொண்டது என அன்று திரிக்கப்பட்டது. அன்று இந்துத்துவ அரசியல்வாதிகள் அதை ஆதரித்தனர். இன்று இப்போராட்டம் மோடிக்கு எதிரானதாக மறுதரப்பினரால் திரிக்கப்படுகிறது. அன்று அவரை ஆதரித்தவர்கள் இன்று அப்போராட்டத்தை வசைபாடுகிறார்கள். அரசியல் துருவப்படுத்தலுக்கு அப்பால் நின்று மக்களின் பிரச்சினைகளை, வாழ்க்கைச்சிக்கல்களை நோக்க இங்கே கண்களே என்னும் நிலை முன்பு இருந்ததே இல்லை.





நிகமானந்தர் கொல்லப்பட்டார் என்னும் குற்றச்சாட்டு உள்ளது பிப் 2011ல் அவர் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தால் உடல்நிலை நலிந்து ஹரித்வார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் எவரென்றே தெரியாத ஒருவர் செவிலியர் உடையில் வந்து அவருக்கு ஓர் ஊசியை போட்டார் எனச் சொல்லப்பட்டது. அந்த நஞ்சு ஊசிக்கு உடனடியாக மாற்று மருந்துக்கள் அளிக்கப்பட்டாலும் அவர் உயிரிந்தார். உடலாய்வில் அவருக்கு நஞ்சு செலுத்தப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது



வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதும் நிகமானந்தருக்குச் சிகிழ்ச்சை அளித்த டாக்டர் பட்நகர் அவருக்கு நஞ்சு செலுத்தியது கண்டறியப்பட்டது. அவரை அதற்குத் தூண்டிய ஹிமாலயன் அகழ்வுத்தொழிலதிபர் கணேஷ்குமார் என்பவர் கைதுசெயப்பட்டார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது



நிகமானந்தரின் கொலைமேல் நடவடிக்கை கோரி சிவானந்தர் 11 நாள் நீண்ட உண்ணாவிரதத்தை நடத்தினார். உத்தரகண்ட் அரசு கங்கைகரையின் சட்டவிரோத கனியகழ்வுகளை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்க ஆணையிட்டது. அதன் சூழியல் அழிவை கணக்கிட ஓர் அமைப்பையும் நிறுவியது. ஆனால் இவை கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. இன்றும் கொல்லைப்புறமாக அனைத்து அகழ்வுகளும் நிகழ்கின்றன. சட்ட இடுக்குகளினூடாக அனுமதிகள் அளிக்கப்படுகின்றன. மாத்ரி சதன் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறது. இன்றைய மத்திய மாநில அரசுகளும் அலட்சியமாகவே இருக்கின்றன.



நிகமானந்தரின் மறைவுக்குப் பின்னர் சூழியல் ஆய்வாளரும் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவருமான ஜி.டி.அகர்வால் துறவுபூண்டு அதேகோரிக்கைகளுக்காகப் போராடி உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்.



1932 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் மாவட்டத்தில் கந்தலாவில் பிறந்தார் குருதாஸ் அகர்வால். சூழியல்பொறியாளரான இவர் கான்பூர் ஐஐடியில் பதினேழாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.2011 ஜூலையில் சுவாமி கியான் ஸ்வரூப் சானந்த் என்றபேரில் துறவுபூண்டார். அவருக்கு வித்யா மடம் துறவு அளித்தது.


ஆத்மபோதானந்தருடன் ஸ்டாலின்

கங்கையைக் காக்கும்பொருட்டு ஏற்கனவே 2008 முதல் ஐந்துமுறை உண்ணாவிரதப் போராட்டங்களைச் செய்திருக்கிறார். அவருடைய கோரிக்கைகளை கொள்கையளவில் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். ஒருசில ஆணைகளையும் பிறப்பித்தார்



நரேந்திரமோடி பிரதமாரக ஆனபின் அவருக்கு சுவாமி கியான் ஸ்வரூப் பல கடிதங்கள் எழுதினார். இறுதியாக எழுதிய கடிதத்தில் ‘நீங்கள் கங்கையைக் காப்பீர்கள் என நம்பினேன். கங்கை நதிக்கென தனி அமைச்சரவையைஉருஅவக்கிய நீங்கள் அதை மீட்டெடுக்க இன்னும் இரண்டு அடிகள் முன்செல்வீர்கள் என நம்பினேன். ஆனால் இத்தனை வருடச் சூழியல் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த நான்கு ஆண்டுகளில் திறம்பட ஒரு நல்ல நடவடிக்கை கூட எடுக்கவில்லை. நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெருநிறுவனங்களுக்குப் பயனளிக்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. நான் மீண்டும் உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன். தடவுசெய்து கங்கையை மீட்டெடுங்கள்” என்று மன்றாடியிருந்தார்.



அவருடைய கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. 2018ல் தன் உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடஙிகிய சுவாமி கியான்ஸ்வரூப் சானந்த் ஜூன் 22 ,2018 ல் உண்ணாவிரதத்தாஉயிர்துறந்தார். அப்போது அவருக்கு 87 அகவை.


ஆத்மபோதானந்தர்

சுவாமி கியான் ஸ்வரூப் சானந்த் மறைந்த இரண்டாவது வாரமே மத்ரி சதன் அமைப்பிலிருந்து 26 அகவை மட்டுமேயான துறவி ஆத்மபோதானந்தர் தன் உண்ணாநோன்பை தொடங்கினார். கேரளத்தைச் சேர்ந்த கணிப்பொறியாளரான ஆத்மபோதானந்தர் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவருடைய உயிரும் ஆபத்தில் இருக்கிறது.



ஆனால் இவ்வளவு திகைப்பூட்டும் ஒரு தொடர்போராட்டம் இந்தியாவின் ஊடகங்களால் இன்னமும்கூட பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இதன் எதிர்நிலையில் நின்றிருப்பவர்கள் மிகப்பெரிய அகழ்வுநிறுவனங்கள், ஆலைகள். அவர்களை நம்பியே ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளன. இப்போராட்டம் சிறு சூழியல்குழுக்களாலேயே மாற்று ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படுகிறது



தமிழகத்தின் சூழியல்செயல்பாட்டாளரும், காந்தியருமான ஸ்டாலின் எழுதிய சிறுநூல் ‘நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு’ இந்த மாபெரும் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது. அவர் சார்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ஊழியர்கள் ஒரு சிறு குழுவாக அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் சென்று ஆத்மபோதானந்தரைக் கண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்துவந்தனர். அப்பயணத்தின்பொருட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் என இதைச் சொல்லலாம்.



இன்றுவரை நம்காலத்து மாபெரும் கொள்கைப்போராட்டமான இதைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தமிழில் எழுதப்படவில்லை. இந்தத் தளத்தில் செய்திகள் வந்துள்ளன. ஸ்டாலினும் குக்கூ குழுவினரும் நேரில் சென்று ஆத்மபோதானந்தரை வாழ்த்தி மீண்டிருக்கின்றனர். அச்செய்தி வெளிவந்துள்ளது. இதுவரை ஒரு கடிதம்கூட வாசகர்களிடமிருந்து வரவில்லை. இதில் வெளிவரும் எந்த ஒரு சிறுசெய்திக்கும் வாசக எதிர்வினை இருக்கும். இவ்வளவுபெரிய ஒரு புறக்கணிப்பு எங்கிருந்து வருகிறது? இதன் உளநிலைதான் என்ன?

எழுதியவர் : (21-Apr-19, 4:24 am)
பார்வை : 13

மேலே