கனவு காணும் கனவுகள்

=========================
நீ என் கனவிலாவது
வரவேண்டும் என்று
கனவு காண்கிறேன்..
**
நான் உன் கனவிலும்
வந்துவிடக் கூடாதென
கனவு காண்கிறாய்.
**
உனக்கும் எனக்கும்
கனவாய் இருந்துபடும்
துன்பத்தால் இனி
எந்த ஜென்மத்திலும் நமக்குக்
கனவாய் வரக் கூடாதென நமது
கனவுகள் கனவு காணலாம்.
**
இலவசமாய் எதையும் காணப்
பழகிக்கொண்ட நாம்
கனவுகளையும் இலவசமாய் கண்டு
கட்டணம் கட்டாத பயணியாய்
கடந்து போய் விடுகிறோம்.
**
வாழ்க்கை நாம் இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று
கனவு கண்டதைக் கனவு காணாமல்
வாழ்க்கையில் இப்படி
இருக்க வேண்டும் என்று
எப்படி எப்படியோ கனவு காண்கிறோம்
**
நாளைய கனவுகளின்
எதிர்காலம் பற்றியோ
நேற்றைய கனவுகளின்
இறந்தகாலம் பற்றியோ
கனவுகள் காணாமல்
அன்றாடம் கனவு காண்கிறோம்.
**
கனவுகள் கனவுகாணும் கண்களை
கடவுள் யாரிடத்தில் கொடுத்திருப்பார்
என்று கூட கனவு காணாமல்
கனவுகாணும் நாம்
கனவுகள் காணாமல் இருப்பதற்காகவேனும்
கனவு கண்டோமா?
**
கனவுகள் கனவு
காணக்கூடியதாக
ஒரு கனவை,
கனவுகாணும் கனவை
கனவிலும் கனவு கண்டிராத கனவு
எந்தக் கனவின் கனவாக இருக்கக்கூடும்
என்று கனவுகளுக்கே தெரியாமல்
கனவுகள் பற்றி நாம்
கனவு கண்டிருக்கிறோமா?
**
ச்சே.. என்ன மனிதர்கள்..
கெட்டக் கனவென்றுத்
திட்டப் பழகிக்கொண்ட இவர்கள்
நல்ல கனவென்று ஒரு
நன்றி சொன்னதுண்டா என்று
கனவுகள் அலுத்துக் கொள்ளலாம் என்று
கனவு கண்டோமா?
**
இமை கதவின் உட்புறத்தில்
நித்திரை கணவன் வரும்வரை
படிதாண்டாமல் ஒரு
பத்தினியைபோல்
காத்திருக்கும்
கனவுகளுக்கும் கனவிருக்கும்..
கண்களை நேசிக்கப் பழகிக்கொண்ட நாம்
கனவுகளையும் நேசிப்போம்..
கண்களின் பார்வை மறைந்துவிட்டால்
கடைசிவரை கனவுகளே ஒரு
கைத்தடியைபோல் கூடவரும் ..
ஆகவே இனி கனவுகளையும்
கனவு காண்போம்.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Apr-19, 7:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 292

மேலே