471 அறவழியிற் செல்வார் விரும்பார் அழிபொருள் – அறஞ்செயல் 23

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தாகமே உடையார் வேலைச்
= சலமருந் தினும்பொன் மீது
மோகமே யுடையார் மண்கல்
= முதல்கரங் கொளினும் தேவ
போகமே புரிந்தில் லாமை
= பூண்டபுண் ணியர்வா னத்தூர்
மேகமார் மின்னின் நில்லா
= விருத்திமேல் அருத்தி கொள்ளார். 23

- அறஞ்செயல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நீர் வேட்கையுள்ளவர் எதுவும் பருகாத உப்புமிகுந்த கடல் நீரைக் குடித்தாலும், பொன்னின்மேல் மிகுந்த மயக்கங் கொண்டவர்கள் மண்ணையும் கல்லையும் பிறவற்றையும் கைக்கொண்டாலும்,

கடவுளின்பமே விழைந்து நல்லற வழியில் நடப்பவர் வறுமையுற்றாலும், விண்ணிடைச் செல்லும் மேகத்தில் தோன்றும் மின்னலை ஒத்த நிலையில்லாத செல்வத்தினிடத்துச் சிறிதும் பற்றுக் கொள்ளார்.

தாகம்-வேட்கை. வேலை-கடல். மோகம்-மயக்கம், கரம்-கை. போகம்-இன்பம். விருத்தி-செல்வம். அருத்தி-பற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-19, 9:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே