மக்களவைத் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி

சின்னம் விவகாரம், பறக்கும் படை, அதிகாரிகள் இடமாற்றத்தில் தேக்கம் மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிரான நபர்களின் இல்லங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வராத தன்னாட்சி நிறுவனம் தேர்தல் ஆணையம். குடியரசுத் தலைவரில் தொடங்கி குடியரசு துணைத் தலைவர், பிரதமர், எம்.பி., எம்எல்ஏக்கள் வரை மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் அனைத்துக்கும் தலைமைத் தேர்தல் ஆணையமே பொறுப்பு.


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் காவல்துறை உள்ளிட்ட அனைத்து நிர்வாகத் துறைகளும் ஆணையத்தின் கண்காணிப்பில்தான் இருக்கும். இத்தகைய வலிமை வாய்ந்த சுயாட்சி அமைப்பு ஆளுங்கட்சிகளின் கைப்பாவையாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு சின்னம் வழங்கிய விவகாரம், சாமானியர்களையும் பறக்கும் படையினர் சிரமத்துக்கு உள்ளாக்குவது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்யாமல் இருப்பது ஆகிய நிகழ்வுகளில் கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது.

தொப்பி, குக்கர், பரிசுப் பெட்டி... அதிர்ந்த தினகரன்

குறிப்பாக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட முடியாது. பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் அமமுக வேட்பாளர் முத்துக்குமாருக்கு பரிசுப் பெட்டியும், மற்றொரு சுயேட்சை முத்துக்குமாருக்கு, குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

தஞ்சாவூரில் அமமுக வேட்பாளர் ரங்கசாமி பெயரில், வேறு ஒரு ரங்கசாமி, சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டது.


பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன், பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளர் சி.ராஜேந்திரனுக்கு, குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.

அரூர் தொகுதியில், அமமுக வேட்பாளர் ஆர்.முருகனுக்கு, பரிசுப் பெட்டி சின்னமும், சுயேட்சை வேட்பாளர் பி.முருகனுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டு தொப்பி, குக்கர் சின்னங்களைப் பிரபலப்படுத்தி இருந்தார். அதேபோல திருவாரூர் தொகுதியில், அக்கட்சி வேட்பாளர் காமராஜுக்கு பரிசுப் பெட்டி சின்னமும், அதே பெயர்கொண்ட மற்றொரு காமராஜுக்கு குக்கர் சின்னமும் வழங்கி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தையும் தற்செயல் என்று சொல்லிக் கடந்துவிட முடியவில்லை.

அதேபோல, மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் வழங்க ஆணையம் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மங்கலாக்கப்பட்டுள்ளதாக சீமான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

அண்மையில் அவர் பேசியபோது, ''சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பணப் பட்டுவாடா என்று கூறி தேர்தலை ரத்து செய்யும் தேர்தல் ஆணையம், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? துரைமுருகன் வீட்டில் மட்டுமே சோதனை நடத்தியது ஏன்? மற்ற தலைவர்கள் வீட்டில் பணம் இல்லையா? ஏன் மற்ற இடங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை?

வாக்குக்குப் பணம் கொடுப்பது குற்றம்; ஓராண்டு சிறைத் தண்டனை என்கிறீர்களே, இதுவரை சிறைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்? தேர்தலுக்கு காசு கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று அறிவிக்கலாமே'' என்று எழுப்பிய கேள்விகள் நியாயமானவை.

'நடுநிலையோடு செயல்படுகிறது'

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிமுக தரப்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் கேட்டேன்.

''தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது. எதிர்க்கட்சி என்றில்லை நேற்று பெரம்பலூர் அதிமுக பிரமுகர், குடியாத்தம், விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் செயல்பட முறையான அவகாசம் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டுதான் அவர்கள் செயல்படுகின்றனர்.

பறக்கும் படை சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சின்னம் விவகாரத்தில் எவ்வித அரசியலும் இல்லை. நடைமுறையை மீறித்தான் தினகரன் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதுவே மிகப்பெரிய தவறு. அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் சுயேட்சைகளுக்கு குக்கர், தொப்பி சின்னம் வழங்கியதும் சட்டத்துக்கு உட்பட்டுதானே நடைபெற்றுள்ளது?

இந்தத் தேர்தலில்தான் வேட்பாளரின் பெயர், புகைப்படம், சின்னம் இடம் பெற்றுள்ளது. சீமானின் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தைக் குறை சொல்ல ஏற்படுத்திய வாய்ப்பு'' என்கிறார் பாபு முருகவேல்.

சந்தேகத்தை எழுப்பும் ஐடி ரெய்டு

தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கப்படும் மற்றொரு முக்கியக் குற்றச்சாட்டு வருமான வரித்துறை சோதனை நடத்துவது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்த ரெய்டையும் நடத்தவில்லை. ஆனால், காங்கிரஸ் மற்றும் கூட்டணி வைக்காத மாநிலக் கட்சிகளின் வீடுகளில் சோதனை நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் திமுகவின் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும், விசிகவினரின் இடங்களிலும் சோதனைகள் நடந்துள்ளன

'மோடி கமிஷன்'

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையம் குறித்த காட்டமான விமர்சனத்தை முன்வைக்கிறார்.

''எலக்‌ஷன் கமிஷன் மோடி கமிஷனாக மாறிவிட்டது. எவ்வளவு ஆக்கப்பூர்வமான புகார்களைக் கொடுத்தாலும் ஆணையம் செயல்படுவதில்லை. எத்தனையோ ஆணையங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படி செயல்படுகிற அமைப்பை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.

காவல்துறையினரே அதிமுக பணம் கொடுக்க உதவுகின்றனர். முதல்வரே இன்று ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு 2 ஆயிரம் கொடுக்கிறார். இதுதொடர்பாகப் புகார் கொடுத்தாலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எங்களின் தொண்டர்களைப் பிளவுபடுத்த ஐடி சோதனை நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி பணத்தை விநியோகிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளோம்'' என்றார் ஆர்.எஸ்.பாரதி.

இவிஎம் இயந்திரங்களில் கோளாறு

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளிலும் ஆணையம் மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உதாரணத்துக்கு ஆந்திராவில் நடைபெற்ற முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் (ஏப். 11) பல இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை எனப் புகார் கூறப்பட்டது. இதையடுத்து இயந்திரங்கள் மாற்றப்பட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விடிய விடிய வாக்குப் பதிவு நடந்தது.

இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் கேட்டேன்.

''இதுகுறித்து என்னால் கருத்துச் சொல்ல முடியாது. ஒருவேளை செயல்பாடுகள் நன்றாக உள்ளது என்று நான் கூறினால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் தேர்தல் ஆணையத்தில் இன்று என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். தேர்தல் ஆணையம் முறையாகச் செயல்படவில்லை. ஆனாலும் இவர் இப்படிக் கூறுகிறாரே என்று யோசிப்பீர்கள்'' என்கிறார் கோபால்சாமி.


தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மாநிலத்தில் காவல்துறை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் கட்சி சார்பு அதிகாரிகள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிர்வாகிகள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால் இந்த முறை அதுமாதிரியான இடமாற்றம் சொல்லிக்கொள்ளும்படி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிகாரத்தை அறியாத ஆணையம்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மதரீதியாக மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லாமல், பற்கள் இல்லாத அமைப்பாக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகே அவர்கள் மூவருக்கும் பிரச்சாரம் செய்ய சில நாட்கள் தடை விதித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலகட்டத்தில் (1990-96) மத்திய அரசே அஞ்சும் வகையில் செயல்பட்டதும் இதே ஆணையம்தான். இன்று பற்கள் இல்லாத அமைப்பாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொண்டதும் இதே ஆணையம்தான். ஆக ஆணையத்தின் அதிகாரங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆணையத்தில் இருக்கும் அதிகாரிகள்தான் அதிகாரத்தை அறியாமல்(!) இருக்கின்றனர்.

நாட்டின் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை நடத்துவதிலும் அதற்கான முன், பின் செயல்பாடுகளிலும் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.

க.சே.ரமணி பிரபா தேவி,

எழுதியவர் : (21-Apr-19, 4:45 pm)
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே